தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே நிர்வாகம் சொன்ன முக்கிய தகவல்!

Published On:

| By Selvam

முன்பு ஒரு முறை ஓய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் எனது கடைசி போட்டி”, என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பதில் அளித்திருப்பார்.

இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து, இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற, கோப்பையை கைகளில் ஏந்தியபடி ‘தல’ தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்று முடிவில் 5வது இடம் பிடித்து, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் 2024 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

இதை தொடர்ந்து, ‘தோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? அல்லது தனது ஓய்வை அறிவித்துவிடுவாரா?’ என்ற ஐயம் தோனி மற்றும் சென்னை அணி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், தோனியின் ஓய்வு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகளிடம் இருந்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

“ஓய்வு குறித்து தோனி இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 2024 ஐபிஎல் தொடரில், சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில், 2 மாதங்கள் ஆலோசித்து தனது முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்”, என சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஓய்வு குறித்து தோனி எடுக்கப்போகும் முடிவில், இம்பாக்ட் பிளையர் விதி முக்கிய பங்கு வகிக்கும். ஒருவேளை இந்த விதி தொடர்ந்தால், தோனி மீண்டும் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது”, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தோனியின் ஓய்வு குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், “இது குறித்து அவர் எங்களிடம் எதையும் தெரிவிக்கவில்லை. அவர் எங்களிடம் இது போன்ற விஷயங்களை தெரிவிக்கவும் மாட்டார். நேரடியாக முடிவு எடுத்துவிடுவார்”, என தெரிவித்துள்ளார்.

மேலும், “தோனி பேட்டிங் செய்வதை பார்க்கும்போது, அவர் நிச்சயம் தொடரலாம். ஆனால், முடிவு அவரது கையில் தான் உள்ளது”, எனவும் தெரிவித்துள்ளார்.

தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ள முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு, “இது அவருடைய (தோனியுடைய) கடைசி போட்டி என்று எனக்கு தோன்றவில்லை. அவர் இப்படி ஓய்வு பெறுவதையும் நான் விரும்பவில்லை. அவர் அட்டமிழந்தபோது சற்று விரக்தியுடன் காணப்பட்டார். தோனி இப்படி இருந்ததில்லை. ஒருவேளை அவர் கோப்பையுடன் தனது ஓய்வை அறிவிக்க எண்ணியிருக்கலாம். இப்போதும் கூட தோனியை யாராலும் கணிக்க முடியாது. அடுத்த வருடம் அவர் மீண்டும் வரலாம்”, என தெரிவித்துள்ளார்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜகவுக்கு 20 ஓட்டா? – அப்டேட் குமாரு

சென்னை ஐஐடி – இளையராஜா ஒப்பந்தம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel