ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று (மே 19) அசர்பைஜன் சென்று அணைத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து ஈரான் திரும்பும்போது அவர் சென்ற ஹெலிகாப்டர் தப்ரீஸ் அருகே விபத்தில் சிக்கியது.
அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நேற்று முதல் நடைபெற்று வந்த நிலையில், துருக்கியின் ஆளில்லா விமானம் மூலம் ஹெலிகாப்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து ஜல்பா மலைப்பகுதியிலிருந்து உடல்கள் இப்ராகிம் ரைசி உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது உலக நாடுகளை அதிர்ச்சிகுள்ளாக்கியிருக்கும் நிலையில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாகக் கூடவே 2 ஹெலிகாப்டர்கள் சென்றிருக்கின்றன. அவை பாதுகாப்பாகத் தரையிறங்கிய நிலையில், ரைசி சென்ற ஹெலிகாப்டர் மட்டும் விபத்துக்குள்ளானது சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
முன்னதாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் ஹமாஸ் ஆயுத குழுவினருக்கு ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்தசூழலில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிப்படையைச் சேர்ந்த 8 அதிகாரிகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்தச்சூழலில் கடந்த 13ஆம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, வான்வழி தாக்குதல் நடத்தியது. இதை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தியது.
இதைத்தொடர்ந்து ஈரானுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார். அந்தவகையில் சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரான் விமானப்படை தளத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இப்படியான சூழலில், 3 ஹெலிகாப்டர்கள் பறக்க ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் மட்டும் விபத்துக்குள்ளானதால், உண்மையில் அது விபத்துதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததில் இஸ்ரேலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024: கிறிஸ் கெய்லிடம் கோலி வைத்த டிமாண்ட்!
மதுரை: காய்ச்சலால் 52 பேர் மருத்துவமனையில் அனுமதி!