கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய கல்லூரி மாணவன் தீயணைப்புத் துறையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
லால்குடி அருகே சாத்தமங்கலம் அரண்மனைமேடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் – பஞ்சவர்ணம் தம்பதியின் மகன் சரவணன் (வயது 19). இவர் குமுளூர் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று (மார்ச் 25) சரவணன் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான ரியாஸ் (15), தருண் (16), பிகதீஸ் (19), சுரேந்தர் (16) ஆகியோருடன் லால்குடி அருகே உள்ள மங்கம்மாள்புரம் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றார்.
நண்பர்கள் அனைவரும் ஆற்றில் குளித்து கொண்டிருக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்ற ரியாஸ் சுழலில் சிக்கி உயிருக்குப் போராடி உள்ளார்.
அப்போது சரவணன் துணிச்சலாக செயல்பட்டு ரியாஸை காப்பாற்றியுள்ளார். ஆனால் சரவணன் புதை மணலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.
இதனைக் கண்டு பதறிப்போன சரவணனின் நண்பர்கள் லால்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சரவணனின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
நேற்று மதியம் ஆரம்பித்த தேடுதல் பணி இரவு வரை தொடர்ந்தது. ஆனால் நீரில் மூழ்கிய சரவணனை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரத்திலும் தீயணைப்பு வீரர்கள் படகில் சென்று டார்ச் லைட் உதவியுடன் நீரில் மூழ்கிய சரவணனை தேடினர்.
இந்நிலையில், 20 மணி நேர தேடுதலுக்குப் பிறகு மாணவன் சரவணனின் உடலை தீயணைப்புத் துறையினர் இன்று (மார்ச் 26) காலை சடலமாக மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்விஎம் 3 எம் 3 ராக்கெட்!
பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு!