உண்மைக்கான நேரமிது!

சிறப்புக் கட்டுரை தமிழகம்

சத்குரு

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், பொய்களும் மெய்யல்லாததும் இன்று உலகில் மிகப்பரவலாகிவிட்ட நிலையிலும், உண்மையை பிரதானமான சக்தியாக மாற்றுவதற்கான வாய்ப்பை இந்த காலகட்டம் வழங்குவதை சத்குரு எடுத்துக் கூறுகிறார்.

வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு மனிதனும் உண்மையைத் தான் நாடுவார் என்பதையும், உண்மையை அனுபவப்பூர்வமாக உணரும்போது, “குடியும் போதைப்பொருளும் உணரவைக்கும் உயரத்தை விட உயர்வான நிலைகள் உள்ளன” என்பதை உணர்ந்துகொள்வர் என்பதையும் விளக்கியுள்ளார்.

ஏமாற்றமும் பொய்யும் உலகம் முழுவதும் ததும்பி வழிகிறது. மிக உயர்ந்த நிலையில் மிக மோசமான விதமான அசிங்கம் நடக்கிறது.

உலகம் முழுக்க நிகழும் தேர்தல் பிரச்சாரங்களை நீங்கள் கவனித்தால், இது எல்லைமீறிப் போவது தெரியும் – ஜனநாயகம் என்பதே தர்மத்திற்கு மாறாக தாக்குவது என்றாகிவிட்டது. ஒரு முழுப் பொய்யை சொல்வது இப்போதெல்லாம் கேவலமானதாக கருதப்படுவதில்லை என்றே தோன்றுகிறது.

இன்று பொய்களே மக்களின் பெரும்பான்மையினரின் பிரதானமான போக்காகிவிட்டது – உண்மை என்பது ஓரத்தில் நிகழும் நிகழ்வாகிவிட்டது. உலகின் நிலை இப்படி இருக்கும்போது, உண்மைக்காகவே வாழ்ந்து உண்மைக்காகவே சாகும் மனிதர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவது மலைபோல் முக்கியமாகிறது.

உண்மை ஒரு நம்பிக்கை இல்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் நம்பிக்கொள்ளலாம் – அதற்கும் உண்மைக்கும் சம்பந்தம் இருக்கவேண்டிய அவசியமில்லை. அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூட்டத்தை, நீங்கள் எதையாவது நம்பவைத்தால், பொய்கள் பிரதானமாகிவிடும். நீங்கள் ஏதோவொன்றை நம்பத் துவங்கினால், உங்கள் அடையாளம் முழுவதும் நீங்கள் நம்பும் அந்த விஷயத்தைச் சுற்றியே உருப்பெறும்.

நம்பிக்கைகள், மிக அபத்தமான விஷயங்களை முழுமுதல் உண்மையாக மக்களை ஏற்க வைக்கும். உண்மையை பிரதானமாக்க நிறைய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கும் போதிலும், உண்மையை சிறுபான்மையான நிகழ்வாக சில சக்திகள் திறம்பட மாற்றியுள்ளன. உலகம் முழுவதுடனும் தொடர்புகொள்ளும் மனிதகுலத்தின் ஆற்றல், முன்பு எப்போதும் இல்லாத அளவு இப்போது மேம்பட்டுள்ளது.

உண்மையை, அனைவரின் கதவுகளையும் இதயங்களையும் தட்டவைக்க முடியும். தொழில்நுட்பம் நம்மை இந்நிலைக்குத் தள்ளியுள்ளது. பூமியில் உண்மையை பிரதானமாக்கிட இதுவே சிறந்த காலம். சமூக வலைதளங்களில் நீங்கள் கிசுகிசு செய்து அதை உலகெங்கும் பரவச்செய்ய முடியும்.

இப்போது கிசுகிசு உலகமயமாகிவிட்டதால், உண்மையும் உலகமயமாகிட வேண்டும். வேதங்களின் சிக்கலான சொற்றொடர்களைக் கேட்க எவருக்கும் விருப்பமில்லை, ஆனால் உண்மையை #கிசுகிசு என்று ஹேஷ்டேக் செய்தால், அனைவரும் அறிந்துகொள்ள விரும்புவார்கள். பருவமழை காலத்தில், இந்திய துணைக்கண்டத்தின் மேற்குப் பகுதியும், கிழக்குப் பகுதியும் அதிகப்படியான மழையைப் பெறுகிறது.

தன் அதிக எண்ணிக்கையிலான சீடர்களுடன் பயணம் செய்துகொண்டு இருந்த கௌதம புத்தர், இப்படி பருவமழைக் காலத்தில் ஒரே இடத்தில் இரண்டரை மாதங்கள் தங்கலாம் என்ற விதியை வகுத்திருந்தார். சாதாரணமாக அவருடன் இருந்த துறவிகளுக்கும் சந்நியாசிகளுக்கும் விதிமுறை என்னவென்றால், இரண்டு நாட்களுக்கு மேல் ஓரிடத்தில் தங்கக்கூடாது என்பதுதான்.

ஆனால் மழைக்காலத்தில் காடு வழியே பயணம் செய்வது அபாயகரமானதாய் இருந்திருக்கும், அப்படிச்செய்தால் பலர் உயிரிழக்க நேர்ந்திருக்கும். அதனால் மழைக் காலத்தில், ஒரு பெரிய ஊரில், பலர் வீடுகளில் படர்ந்து அவர்கள் தங்கியிருந்தனர்.

பகலில் அந்தத் துறவிகள் பிச்சையெடுக்க வெளியே சென்றார்கள். கௌதமரின் உறவினரான ஆனந்தத் தீர்த்தர், ஒரு விலைமாதை எதிர்க்கொண்டான். அவள் அவருக்கு பிச்சை கொடுத்து, உயரமான அழகான தோற்றம் கொண்ட அவரைப் பார்த்து,

“துறவிகள் தங்குவதற்கு இடம் தேடுவதாகக் கேள்விப்பட்டேன். நீங்கள் ஏன் என் வீட்டில் வந்து தங்கக்கூடாது?” என்று கேட்டாள். அதற்கு ஆனந்தத் தீர்த்தர், “நான் எங்கு தங்குவது என்று புத்தரிடம் கேட்க வேண்டும்,” என்றார்.

அவள் எள்ளலுடன் அவரைப் பார்த்து, “ஓ, உங்கள் குருவைக் கேட்க வேண்டுமா? சென்று அவரைக் கேளுங்கள். என்ன சொல்கிறாரென்று பார்ப்போம்,” என்றாள். ஆனந்தர் கௌதமரிடம் சென்று அவர் சேகரித்த பிச்சையை அவர் காலடியில் வைத்தார்.

ஒவ்வொருவரும் அவர் போகுமிடத்தில் உணவும் உறைவிடமும் தேடிவிட்டு வந்திருக்க வேண்டும். ஆனந்தர் புத்தரிடம், “இப்படி ஒரு பெண்மணி என்னை அழைத்தார். நான் அங்கு சென்று தங்கலாமா?” என்று கேட்டார். கௌதமர், “அவர் அழைக்கிறார் என்றால் நிச்சயம் நீங்கள் சென்று தங்கவேண்டும்,” என்றார். அதைக் கேட்டதும் ஊர்மக்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

“என்ன? ஒரு பிரம்மச்சாரி விபச்சாரியின் வீட்டில் தங்குவதா? அவ்வளவுதான்! உங்கள் ஆன்மீகம் சீர்கெட்டுவிட்டது,” என்றனர். கௌதமர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அந்தப் பெண்மணி அவரை அழைக்கிறார், அவர் சென்று தங்கட்டுமே, இதில் என்ன பிரச்சனை?” என்று கேட்டார்.

அப்போது அவரைச் சுற்றியிருந்த மக்கள் எழுந்து செல்லத் துவங்கினர். அதற்கு புத்தர் சொன்னார், “நான் இந்தப் பாதையில் இருப்பதற்குக் காரணம், இதுதான் வாழ்வதற்கு மிகவும் மதிப்பான, சக்திவாய்ந்த வழி என்று நான் பார்க்கிறேன். இப்போது அவளுடைய வழிகள் என் வழியை விட சக்திவாய்ந்தது என்று எனக்குச் சொல்கிறீர்களா? அதுதான் உண்மையென்றால் நானும் சென்று அவளுடன் சேர்ந்துகொள்ள வேண்டியதுதான். மெய்யாய் தேடுதல் உடையவன் அப்படித்தான் இருக்கவேண்டும் – இதைவிட உயர்ந்த ஏதோவொன்றைப் பார்த்தால், அதை நோக்கிப் போகவேண்டும்.” ஆனால் மக்கள் கொந்தளித்திருந்தனர், நிறையபேர் சென்றுவிட்டனர். ஆனந்தர் சென்று அவளுடன் தங்கினார்.

மழையினால் குளிர் அதிகரித்தது. அவர் மெல்லிய அங்கியை அணிந்திருந்ததால் அவள் அழகிய பட்டுப் போர்வையைக் கொடுத்தாள். அவர் அதை போர்த்திக்கொண்டார். இதைக் கண்ட மக்கள் அவர் பாதைமாறிப் போகத் துவங்கிவிட்டார் என்று நினைத்தனர். நன்றாக சமைத்து உணவு பரிமாறினாள், அவர் அதை புசித்தார். மாலையில் அவருக்காக நடனமாடினாள். அவர் அதை கூர்ந்து கவனித்தார். மக்கள் இசையைக் கேட்டதும் அவர் விழுந்துவிட்டார் என்றே நினைத்தனர்.

காலம் போனது. மழை நின்று பயணத்தைத் தொடர்வதற்கான நேரம் வந்ததும், ஆனந்தர் கௌதமரிடம் ஒரு பெண் துறவியை அழைத்து வந்தார். உண்மையைத் தேடும் தேடுதல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பொதிந்திருக்கிறது. அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால் போதும்.

Time for truth Sadhguru Article

இப்போது மனிதர்கள் பல்வேறு விஷயங்களில் சிக்கியிருக்கலாம், ஆனால் இறுதியில் அனைத்திலும் உயர்ந்ததற்கே அனைவரும் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அறிந்த உயரங்களைக் காட்டிலும் உயர்வானவை உள்ளன என்பதை அவர்களுக்குக் காட்டிக்கொடுத்தால் போதும். மது அருந்தி மிதக்கும் உயரத்தைக் காட்டிலும் உயர்வானது உள்ளது. போதையில் உணரும் உயரத்தைக் காட்டிலும் உயர்வானது உள்ளது. சமூகத்தின் நாடகத்தில் சிக்கியிருந்து உணரும் உயரத்தைக் காட்டிலும் உயர்வானது உள்ளது. இன்னொருவரோடு ஒப்பிடும்போது உயர்வாக இருப்பதைக் காட்டிலும் உயர்வானது உள்ளது.

எப்போதும் முனிவர்கள், துறவிகள், யோகிகள் மற்றும் குருமார்கள், மக்களை உண்மையின் பாதையில் இட்டுச் சென்றுள்ளார்கள். உண்மையின் சக்தியை உணர்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார்கள். அவர்களுடைய அருளாலும் சக்தியாலுமே அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளார்கள். ஆனால் எல்லா இடங்களிலும் உள்ள மனிதர்களைச் சென்றடைவதற்கான கருவிகள் அவர்களிடம் இருந்ததில்லை.

இன்று நம் தோள்களில் ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. ஏனென்றால் தொழில்நுட்பமும், கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அளவு தொடர்புகொள்ளும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது. நான் மீண்டும் மீண்டும் உங்களுக்குச் சொல்வது போல, நம் வாழ்க்கையில் நம்மால் செய்யமுடியாததை நாம் செய்யாவிட்டால் அது பிரச்சனையில்லை. ஆனால் நம்மால் செய்ய முடிந்ததை நாம் செய்யாவிட்டால் நம் வாழ்க்கை பரிதாபமாகிவிடும். இது என்னுடைய ஆசி, குறிப்பாக இளைஞர்கள் அனைவருக்குமானது இது – நீங்கள் எதை உயர்ந்ததாகப் பார்க்கிறீர்களோ அதற்காக நிற்க வேண்டும்!

நீங்கள் எல்லோரையும்விட சிறப்பாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் உங்களின் சிறந்தது வெளிப்பட வேண்டும். எதை அனைத்திலும் உயர்ந்ததாக நீங்கள் கருதுகிறீர்களோ, அதை நோக்கி உங்கள் வாழ்க்கையை முதலீடு செய்யவில்லை என்றால், அது வீணான வாழ்க்கை. “ஆம் சத்குரு, ஆனால் …” அந்த ‘ஆனால்’ என்பதை சுட்டெரியுங்கள். எல்லோருக்கும் ஒரு ‘ஆனால்’ இருக்கிறது. தாங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களை செய்யாதிருப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு சாக்கு வைத்திருக்கிறார்கள்.

இலவச அறிமுக வகுப்பு முதல் ஒவ்வொரு யோகா வகுப்பிலும், உங்களின் சிறந்ததை செய்யாததற்கு நீங்கள் வைத்திருக்கும் இந்த சாக்குப்போக்குகளைக் களையவே முயற்சி செய்து வந்திருக்கிறோம். “நான் அதைச் செய்ய விரும்பினேன், ஆனால்…” என்று நீங்கள் சொன்னால், ‘நான் பொறுப்பு‘ என்று சொல்லும்போது உங்களிடம் எந்த சாக்கும் இல்லாமல் போகும். “இதனால் எனக்கு என்ன பிரயோஜனம் சத்குரு? நான் ஒன்றும் உலகை மாற்ற விரும்பவில்லையே” என்று நீங்கள் சொல்லலாம்.

இது நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய விஷயமல்ல. இது நான் உங்களுக்குள் விதைக்க முயற்சிக்கும் ஒன்றல்ல. மனித இருப்பின் தன்மையே, உங்களால் செய்ய முடிந்த எதையோ நீங்கள் செய்யவில்லை என்றால், உங்கள் மரணப்படுக்கை வரை அது உங்களைத் தொந்தரவு செய்யும்.

ஒரு முழுமையான வாழ்க்கையை நீங்கள் வாழ விரும்பினால், எதை நீங்கள் உயர்ந்ததாகக் கருதுகிறீர்களோ அதைச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் எப்போதும் முழுமையில்லாதது போல உணர்வீர்கள். நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதன் பல அம்சங்களுக்கு நீங்கள் தகுதியற்றவராகவே எப்போதும் உணர்வீர்கள்.

பலவிதங்களில், உலகத்தின் சக்திகள் ஒன்றுசேரத் துவங்கியுள்ளன. மலர்போல் மென்மையான ஒன்றாலே, சுற்றிலும் நறுமணம் கமழச் செய்திட முடியும். நீங்கள் யாருடனும் போரிடத் தேவையில்லை. இருளை எதிர்த்து நீங்கள் போர்புரிய முடியாது. நீங்கள் சுடர்விட வேண்டும். நீங்கள் சுடர்விட்டு எரிந்தால், இருள் மறைந்துபோகும். இருள் என்பது, அதனை எதிர்த்து ஜெயிக்க முடியாதது போலத் தோன்றலாம். மையிருட்டாக இருக்கும்போது, உங்கள் மூச்சும் நின்றுவிடும் போலத் தோன்றும். ஆனால் நீங்கள் ஒளிர்ந்துவிட்டால், முயற்சியின்றி அந்த இருள் மறைந்துவிடும்.

இதுதான் அறியாமையின் தன்மை, இதுதான் பொய்மையின் தன்மை. அதை எதிர்த்துப் போரிடத் தேவையில்லை. நீங்கள் சுடர்விட்டால், அது மறைந்துவிடும். உங்களையும், பூமியிலிருக்கும் ஒவ்வொரு மனிதரையும், ஒளிர வைப்பதற்கான வழிகளையும் முறைகளையும் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இதற்கு சற்று முயற்சி தேவைப்படும். ஆனால் சப்தரிஷிகள், கௌதம புத்தர், கிருஷ்ணர் மற்றும் பலர் எடுத்த அளவு பெரிய முயற்சி தேவையில்லை. ஏனென்றால், உண்மையை உலகெங்கும் பரப்புவதற்கான தொழில்நுட்பம் அவர்களிடம் இருக்கவில்லை. வேறு எவரிடமும் இல்லாத கருவிகள் நம்மிடம் உள்ளன. வேறு எவராலும் செய்ய முடியாத ஒன்றை நாம் செய்திட வேண்டும். இதுதான் என் ஆசையும் ஆசியும்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….

டைம் பத்திரிகை: ஐகான்ஸ் பட்டியல்…இந்திய பிரபலங்கள் லிஸ்ட் இதோ!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *