டிஜிட்டல் திண்ணை: மத்திய நிதி அமைச்சராகும் பிடிஆர்? ஸ்டாலின் நடத்திய ’கேபினட்’ டிஸ்கஷன்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு கேபினட் மாற்றம் பற்றிய கேள்விகளும் விவாதங்களும் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட போகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் கொடைக்கானல் சென்று வந்ததிலிருந்து ஒரே பேச்சாக இருக்கிறது. ஆனால் கொடைக்கானலில் ஸ்டாலின் நடத்திய டிஸ்கஷனே வேறு.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த நிலவரங்களின் அடிப்படையில் முதல்வர் முக்கியமான ஆலோசனை நடத்தினார்.

அதிலும் குறிப்பாக இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தமிழகத்திலிருந்து யார் யார் மத்திய அமைச்சராக அதில் பங்கேற்கலாம் என்பது குறித்து ஆலோசனையில் தான் முதல்வர் ஈடுபட்டிருந்தார் என்பதே, டிஜிட்டல் திண்ணையில் செய்தியாக வெளியானது.

இதற்கிடையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று உளவுத்துறை மூலமாகவும் சபரீசன் மேற்பார்வையில் செயல்படுகிற ’பென்’ நிறுவனம் மூலமாகவும் இரு வேறு ரிப்போர்ட்டுகள் ஸ்டாலினுக்கு சென்று சேர்ந்திருக்கின்றன.

இந்த பின்னணியில் ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாகிற நிலையில். அதன் அடிப்படையில், தமிழ்நாடு அமைச்சரவையிலும் சில மாற்றங்களை செய்யலாம் என்று முதல்வர் ஆலோசித்து வருகிறார் என்பதுதான் லேட்டஸ்ட் விஷயம்.

2003 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசியல் சாசன சட்ட திருத்தத்தின்படி இந்தியாவில் ஒரு மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்திற்கும் மேல் அமைச்சர்கள் இருக்கக் கூடாது. இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 பேர், இதில் 15 சதவீதம் பேர் என்றால் 35 பேர் வரை அமைச்சர்களாக இருக்கலாம். இப்போது தமிழ்நாடு அமைச்சரவையில் மொத்தம் 34 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

அமலாக்கத்துறை கைது நடவடிக்கை காரணமாக சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் ஜாமீனில் வந்து விடுவார் என்றும் அவர் வெளியே வந்ததும் அவருக்கு மீண்டும் அவர் வகித்த அதே துறையை அளிக்கலாம் என்றும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை கோடை விடுமுறை தாண்டி அதாவது ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது. அதனால் இப்போதைக்கு செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

அதே நேரம் ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பு அமைச்சராக செயல்பட்டவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையிலும்… அமைச்சர்களின் துறை ரீதியாக அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பது பற்றி தனக்கு வந்த ரிப்போர்ட் அடிப்படையிலும் முதலமைச்சர் ஸ்டாலின் சில மாற்றங்களை செய்யப் போகிறார் என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில்.

 

பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் இப்போது சேலம் மாவட்டத்தின் ஒரே ஒரு திமுக எம்எல்ஏவாக இருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் சேலத்தில் இருந்து நேரடியாக ஒரு அமைச்சர் வேண்டும் என்ற அடிப்படையில் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனை அமைச்சராக்கலாம் என்ற யோசனையும் ஸ்டாலினிடம் இருக்கிறது. இதுபோல் சிலரை அமைச்சரவையில் சேர்த்தால் அதே எண்ணிக்கையில் சிலரை நீக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

அப்படி பார்த்தால் யாரை அமைச்சரவையில் இருந்து விடுவிப்பது என்ற கேள்வி எழுகிறது. இது பற்றி முதலமைச்சர் மேற்கொண்ட ஆலோசனையில் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் சில அமைச்சர்களை விடுவிக்கலாம் என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மூத்த அமைச்சரான கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், ராணிப்பேட்டை காந்தி ஆகியோரது பெயர்களும் அடிபடுகிறது.

இதேபோல தற்போது நீர்வளத்துறை, சுரங்கத் துறை ஆகியவற்றை வைத்திருக்கும் அமைச்சர் துரைமுருகன் இடமிருந்து அந்த இரண்டையும் எடுத்துவிட்டு சட்டத்துறையை மட்டும் அவருக்கு அளிக்கலாமா என்ற ஆலோசனையும் முதல்வர் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மணல் குவாரிகள் விஷயத்திலும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் துரைமுருகனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவருக்கு சட்டத்துறையை அளிக்கலாம் என்று ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள்.

ஆனால் துரைமுருகன் தரப்பினரோ, ’ரொம்ப நெருக்கடி கொடுத்தால் நீர்வளத் துறையை விட்டுக் கொடுக்கலாமே தவிர, சுரங்கத் துறையை விட்டுக் கொடுக்க மாட்டார்’ என்று கூறுகிறார்கள்.

இன்னொரு முக்கியமான ஆலோசனையும் முதலமைச்சரின் வட்டாரத்தில் நடைபெற்றிருக்கிறது. அதாவது இந்தியா கூட்டணி ஆட்சி டெல்லியில் அமையும் பட்சத்தில் சில முக்கியமான துறைகளை கேட்டு பெறுவது என்ற முடிவில் இருக்கிறார் ஸ்டாலின். அதில் ஒன்று நிதித்துறை.

ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நியாயமான நிதி ஒதுக்கீடுகள் கூட செய்யப்படாததால் தமிழ்நாடு கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. பொதுவாகவே மத்தியில் ஒரு அரசு அமைந்தால் அதில் முக்கியமான பார்ட்னராக இருக்கும், அதாவது அதிக எம்பிக்களை வைத்திருக்கும் கட்சி தான் நிதித் துறையை  வைத்திருக்கும்.

ஆனால் இந்த முறை இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் நிதியமைச்சரை திமுகவுக்கு கேட்டு பெறுவது என்ற முடிவில் இருக்கிறாராம் ஸ்டாலின். அதிலும் தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் பி டி ஆரை ஒன்றிய நிதியமைச்சர் ஆக நியமிக்கும் திட்டமும் ஸ்டாலினிடம் இருக்கிறது. இது குறித்து அவர் பிடிஆரை அழைத்து பேசி விட்டதாகவும் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம் முதலமைச்சர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய ஒரு வளமான துறையின் அமைச்சர் மீது தற்போது சில சந்தேக நிழல்கள் படிந்து வருவதால் அவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி பனிஷ்மென்ட் கொடுக்கலாமா என்று முதலமைச்சர் ஆலோசித்து வருவதாகவும் அந்த அமைச்சரோ தனக்கு சுரங்கத் துறை வேண்டும் என்ற லாபியில் ஈடுபட்டிருப்பதாகவும் திமுக வட்டாரத்தில் செய்திகள் வருகின்றன.

ஆக தமிழ்நாடு அமைச்சரவையில் ஏற்படக்கூடிய மாற்றம் எப்படிப்பட்டது என்பது ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேலும் தெளிவாகும் என்பதே இன்றைய நிலவரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை: மண்ணைப் பாதுகாக்கும் மஞ்சப்பை!

IPL 2024: பிளே-ஆஃப் ஆட்டங்கள் மழையால் ரத்தானால் என்ன நடக்கும்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel