தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இயல்பை விட 2° − 3° செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 21) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஏப்ரல் 21 முதல் 23 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 24, 26 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 26, 27 ஆகிய தேதிகள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதேபோல, ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 25 வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், இதர தமிழக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இயல்பை விட 2° − 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“மோடி ஆட்சியில் ரயிலில் செல்வது தண்டனை”: ராகுல் தாக்கு!
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: மதுரையில் குவிந்த பக்தர்கள்!