உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது செய்யப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 5 ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.
4ஆம் கட்ட தேர்தல் கடந்த மே 13ஆம் தேதி நடந்து முடிந்தது. 4ஆம் கட்ட தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தொகுதியில் பாஜக சார்பில் சிட்டிங் எம்.பி, முகேஷ் ராஜ்புத் போட்டியிடுகிறார்.
இத்தொகுதிக்கு உட்பட்ட கிரியா பாமரன் கிராமத்திலிருந்த வாக்குச்சாவடியில் 18 வயது நிரம்பாத சிறுவன் 8 முறை வாக்களித்துள்ளார்.
வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்று பாஜகவிற்கு 8 முறை வாக்களித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சிறுவன் , பாஜக நிர்வாகி அணில் சிங் தாகூரின் 16 வயதுடைய மகன் ராஜன் சிங் என்பது தெரியவந்தது.
வாக்களிக்கவே தகுதி பெறாத சிறுவன் வாக்குச்சாவடிக்குள் சென்று 8 முறை வாக்களித்திருக்கிறார் என்றால் அதற்குத் தேர்தல் அதிகாரிகளும் உடைந்தைதானே என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பாஜக தோல்வி பயத்தால் ஜனநாயகத்தைக் கொள்ளையடிக்க நினைக்கிறது.
தேர்தல் கடமையைச் செய்யும் அனைத்து அதிகாரிகளும் அரசியல் சாசனப் பொறுப்புகளை மறந்துவிடக் கூடாது.
இல்லை என்றால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஏன் இப்படிச் செய்தோம் என யோசிக்கிற வகையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜகவின் பூத் கமிட்டி கொள்ளை கமிட்டி போல தான் நடந்து கொள்ளும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக உதவி தேர்தல் அலுவலர் பிரதீப் திரிபாதி அளித்த புகாரின் பேரில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குத் தேர்தல் அலுவலர் பரிந்துரைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Gold Rate: ரூ.55 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை…!
விமர்சனம் ; ’குருவாயூர் அம்பலநடையில்’!