முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விரைவில் வெளிநாடு செல்ல இருப்பதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில்.
இதுகுறித்து அவர்களிடம் பேசுகையில், “ஓ.பன்னீர் செல்வம் விரைவில் கோவையில் மாநாட்டை அறிவித்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தேவர் ஜெயந்தி அக்டோபர் 30 ஆம் தேதி நிறைவு பெற்ற பிறகு குறுகிய கால பயணமாக சிங்கப்பூர் சென்று வர திட்டமிட்டிருக்கிறார். இது அவரது மருத்துவ ரீதியான பயணமாக இருக்கலாம்” என்கிறார்கள்.
பன்னீரின் சிங்கப்பூர் பயணம் குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரிக்கையில்,
“ஓபிஎஸ் தொடர்ந்து முதுகுவலியாலும், கால் வலியாலும் அவதிப்பட்டு வருகிறார். ஆனாலும் தொடர்ந்து அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
ஆறு மாதத்துக்கு ஒரு முறை கேரளாவின் ஆயுர்வேத வைத்திய சாலைக்கு சென்று ரெஃப்ரெஷ் செய்து கொண்டு வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் நவம்பர் மாதம் சிங்கப்பூர் பயணத்துக்கு திட்டமிட்டுள்ளார். உடல் ரீதியாக மட்டுமல்ல மன ரீதியாகவும் அவர் கடந்த ஒரு வருடமாகவே காயப்பட்டுள்ளார்.
அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. இதை எதிர்த்து சட்ட ரீதியாக பன்னீர் போராட்டம் நடத்தினாலும் அவருக்கு அதில் பெரிய பலன் இல்லை.
இப்போது எடப்பாடி பழனிசாமி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில், பன்னீருக்கு மீண்டும் ஒரு அரசியல் பிடிமானம் தென்படுகிறது. தினமும் தன்னோடு பாஜக தலைவர்கள் பேசிவருவதாக பன்னீர் கூறியிருந்தார்.
இந்த பின்னணியில் பன்னீரின் சிங்கப்பூர் பயணம் என்பது மருத்துவப் பயணமாக மட்டுமல்ல… அவரது மன வலிக்கு மருந்து போடும் அரசியல் முக்கியத்தும் வாய்ந்த பயணமாகவும் இருக்க வாய்ப்புள்ளது” என்கிறார்கள் அவர்கள்.
–வேந்தன்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
தசரா கொண்டாட்டம் : சனாதன எதிர்ப்பாளர்கள் உருவபொம்மைகள் எரிப்பு!