செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்கான அமர்வில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகியதை தொடர்ந்து நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வுக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று அதிகாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அவரது சார்பில் நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார்.
அப்போது எந்த முன்னறிவிப்பும், சம்மனும் இல்லாமல் அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை கைது செய்திருப்பதாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகினார்.
இதனால் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க புதிய நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி இந்த வழக்கை விசாரிப்பார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கு இன்று மாலை 4 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
செல்வம்