கடந்த ஜனவரி 7,8 தேதிகளில் சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்ற நிலையில்… அதன் பின் ஸ்பெயின் சென்று வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதன் அடுத்த கட்டமாக விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருக்கிறார் என்று கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின். “தமிழ்நாட்டை 2030-க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே எங்கள் இலக்கு. இதற்காகவே தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சிறந்த முதலீட்டு சூழலை உருவாக்கியிருக்கிறோம்” என்று குறிப்பிட்டு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உலக தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் நிறைவுரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ” என்று அறிவித்தார்.
இதன் பின் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 7 வரை ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், ’இந்த ஸ்பெயின் பயணம் மூலமாக 3 ஆயிரத்து 440 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டதாக கூறினார்.
இந்த வரிசையில் முதலீட்டை ஈர்க்கும் நோக்கிலான அடுத்த கட்ட பயணமாக வரும் ஆகஸ்டு மாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார் முதலமைச்சர்.
முன்னதாக 2023 ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
அப்போது தமிழ்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பு பற்றி அப்போது தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, “ தமிழ்நாடு முதலமைச்சருடன் மகிழ்ச்சியான சந்திப்பு. தமிழ்நாட்டைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கும், இந்த செழிப்பான மாநிலத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான பொருளாதார உறவுகளை எவ்வாறு மேலும் அதிகரிக்கலாம் என்பதைப் பற்றி விவாதித்தோம்” என்று பதிவிட்டிருந்தார்.
தமிழ்நாட்டை செழிப்பான மாநிலம் என அமெரிக்க தூதர் குறிப்பிட்ட பின்னணியில் சரியாக ஒரு வருடம் கழித்து இந்த ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத் தக்கது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் தோனிக்கு கோவில்: அம்பத்தி ராயுடு சொன்ன நச் கமென்ட்!