மதுரை – சிங்கப்பூர் இடையே வருகிற 22ஆம்தேதி முதல் தினசரி விமான சேவை தொடங்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது முதலே ரயில், பஸ் உள்ளிட்டவைகளில் வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் முன்பதிவு செய்து வருகிறார்கள். அதேபோல் வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் வசதிக்காக விமான நிறுவனங்களும் புதிய விமான சேவைகளை அதிரடியாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் பயணிகளின் வசதிக்காக மதுரை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவை வழங்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, வருகிற 22ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கும் தினசரி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இதையடுத்து சிங்கப்பூர்-மதுரை, மதுரை-சிங்கப்பூர் வழித்தடத்துக்கான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்