வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட நடை பயணத்தின் அட்டவணை இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட நடை பயணம் அக்டோபர் 25ஆம் தேதி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இருந்து தொடங்குகிறது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த நடைபயணத்தின் முதல் இரண்டு கட்டங்களிலும் இணை பொறுப்பாளராக இருந்து செயல்பட்ட பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தற்போது புழல் சிறையில் இருக்கிறார். அவர் இல்லாமல் மூன்றாம் கட்ட நடை பயணத்தை தொடங்குகிறார் அண்ணாமலை.
களரீதியாக மூன்றாம் கட்ட நடை பயணத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு கோவையை சேர்ந்த தமிழக பாஜக பொதுச்செயலாளர் ஏ. பி. முருகானந்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மொடக்குறிச்சி தற்போது பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்கும் தொகுதி என்பதால் அங்கே தொடங்கி பெருந்துறை, ஈரோடு கிழக்கு, மேற்கு என்று செல்கிறது நடை பயணம்.
அதற்கிடையில் தற்போது புழல் சிறையில் இருக்கும் அமர் பிரசாத் ரெட்டிக்கு எதிராக வேறு வேறு வழக்குகளைக் காட்டி, அவருக்கு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தி தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியுமா என்று ஆலோசனை காவல்துறை வட்டாரத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.
அமர் பிரசாத் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சவும் ஏற்பாடுகள் நடக்கின்றன என்பது நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் ஆருத்ரா கோல்டு கம்பெனி வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியை விசாரிக்க சம்மன் அனுப்புவதற்கான சட்ட ஆலோசனைகள் காவல்துறை தரப்பில் நடந்து வருவதாக தெரிகிறது.
மேலும் நடிகை கௌதமி தன்னை அழகப்பன் என்பவர் ஏமாற்றி விட்டதாகவும் அவருக்கு பாஜக பெரும்புள்ளிகள் ஆதரவளித்ததாகவும் கூறி அக்டோபர் 23ஆம் தேதி பாரதி ஜனதா கட்சியில் இருந்து விலகினார். அந்த அழகப்பனுக்கும் அமர் பிரசாத் ரெட்டிக்கும் தொடர்பு இருந்ததா என்ற ரீதியிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இப்படி அமர் பிரசாத் ரெட்டி மீது கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தி அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க காவல்துறையில் ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அக்டோபர் 22 ஞாயிற்றுக்கிழமை, 23 ஆயுத பூஜை, 24 விஜயதசமி விடுமுறைகளைத் தொடர்ந்து அக்டோபர் 25ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில் தமிழக பாஜக நிர்வாகிகள் மத்தியிலேயே இன்னொரு பேச்சும் சூடாக நடந்து வருகிறது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
அதாவது அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் தான் இருக்கிறார். அதே புழல் சிறையில் தான் அமர் பிரசாத் ரெட்டியும் அடைக்கப்பட்டிருக்கிறார். இருவருமே நீதிமன்ற காவலில் இருக்கும் விசாரணைக் கைதிகள்தான் என்பதால் ஒருவேளை சிறைக்குள் செந்தில் பாலாஜியை சந்திக்க அமர் பிரசாத் ரெட்டி முயற்சிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதுதான் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் இடையே நடக்கும் விவாதம்.
இது பற்றி சிறை துறை வட்டாரங்களில் விசாரித்த போது அமர் பிரசாத் ரெட்டி நீதிமன்ற காவல் கைதிகளுக்கான பகுதியில் உள்ளார். செந்தில் பாலாஜியும் விசாரணை கைதி தான் என்ற போதிலும் அவர் உயர் பாதுகாப்பு வளையத்தில் மருத்துவமனை சிறப்பு அறையில் இருக்கிறார். எனவே செந்தில் பாலாஜியை அமர் பிரசாத் ரெட்டி சிறைக்குள் சந்திப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்கிறார்கள் சிறைத்துறை வட்டாரங்களில்” என்று மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.
தசரா கொண்டாட்டம் : சனாதன எதிர்ப்பாளர்கள் உருவபொம்மைகள் எரிப்பு!
சாம்சங்கின் புதிய கேலக்சி A9 வரிசை டேப்கள்!
கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்டுங்களேன் இயக்குனர்களே?
All ‘digital thinnai’ links should be available to read.