|

நூற்றாண்டு பிறந்தநாளை நினைவு நாளாக காணும் கே.என்.ராஜ் 13.5.1924 – 13.5.2024

எஸ்.கீதா,  தார்சிஸ் ஆல்பின்

தனது இறப்பிற்குப் பின்னும் வரலாற்றின் பக்கங்களில் நாம் (இச்சமுதாயம்) அனுபவிப்பதற்கென்றே பல அரிய பெரிய செல்வங்களையும் மதிப்பீடுகளையும் விட்டுச் சென்றிருக்கும் ஒரு அசாதாரணமான எதார்த்த பொருளியல் வல்லுனர் தான் பேராசிரியர் கே.என்.ராஜ்.

இவர் கேரளா மாநிலத்தின் திருச்சூரில் 13.5.1924-ம் ஆண்டு பிறந்தார். இவரது முழு பெயர் கக்கதன் நந்தநாத் ராஜன் என்பதாகும். பொருளியல் துறையில் நிபுணத்துவம் பெற்று பல அரிய பெரும் சாதனைகளையும் புரிந்துள்ள பொருளியல் வல்லுனர்களில் மிகவும் போற்றி குறிப்பிடத்தக்க ஒருவர் தான் பேராசிரியர் கே.என்.ராஜ்.

சென்னை கிறுத்துவ கல்லூரி (Madras Christian College)-ல் இளங்கலைப் பொருளியல் பட்டப்படிப்பு படிக்கும் போது பேராசிரியர் மால்கம் ஆதிசேக்ஷையாவாலும் பயிற்று விக்கப்பட்ட இவர் இலண்டன் பொருளியல் பள்ளி (London School of Economics)-ல் பேராசிரியர் ஃபிராங் பெய்ஸின் அவர்களின் வழிகாட்டுதலில் தனது 23-ம் வயதிலேயே முனைவர் பட்டம் முடித்துவிட்டு இந்திய ரிசர்வ் வங்கியில் 1947-ல் இணைந்து பணியாற்றி இந்தியாவின் முதல் வரவு செலவு சமநிலை (Balance of Payment) அறிக்கையை தயார் செய்து வழங்கினார்.

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் அழைப்பை ஏற்ற கே.என்.ராஜ் தனது 26-வது வயதில் அப்போது புதிதாக உருவாக்கப்பட்டிருந்த இந்திய திட்டக்குழு (Indian Planning Commission)-ல் இணைந்து இந்தியாவின் முதலாவது ஐந்தாண்டு திட்டங்களின் வரைவுகளை (Draft) தயாரிப்பதில் தனது பெரும் பங்களிப்பை நல்கினார். இக்காலக்கட்டத்தில் இந்தியாவின் சேமிப்பின் போக்கை மிகத் துல்லியமாக கணித்து முன்னறிவித்திருந்தார்.

ஆகையால், அதிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியாவின் அதிகாரப்பூர்வமான சேமிப்பு மற்றும் முதலீடு குறித்தான தரவுகளை (Data) உறுதிப்படுத்தும் வாய்ப்பும், பொறுப்பும் அவரிடமே தரப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் தலைச்சிறந்த மூன்று பொருளியல் கல்வி சார்ந்த நிறுவனங்களான பொருளியல் மற்றும் அரசியல் வார பத்திரிக்கையை (Economics and Political Weekly) அதன் நிறுவனர் சச்சின் சௌத்திரியுடன் இணைந்து சமேக்க்ஷா அறக்கட்டளை (Sameeksha Trust)-யின் நிறுவனர் அறங்காவலர் (Founder Trustee)-களில் ஒருவராக இருந்து அந்த சமூக அறிவியல் இதழை திறம்பட உருவாக்கினார். 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் நாள் அவர் இறக்கும் வரையிலும் சமேக்க்ஷா அறக்கட்டளையின் உறுப்பினராகவும் இருந்தார்.

டெல்லி பொருளியல் பள்ளி (Delhi School of Economics)-ஐ உருவாக்கிய பேராசிரியர் வி.கே.ஆர்.வி.ராவுடன் இணைந்து அதை அதன் புகழின் உச்சம் தொட மூலக் காரணமானவராகவும் இருந்தார். அதன் இயக்குனராகவும் செயலாற்றினார். அதிகாரங்களின் குவியல் மையமாக இருந்த டெல்லியிலிருந்து 1971-ம் ஆண்டில் விலகி தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கு வந்து, ஒரு காந்தியவாதியும் கட்டிட கலைஞருமான திரு.லாரி பேக்கர் மற்றும் அப்போதைய முதல்வராக இருந்த திரு.சி.அச்சுதமேனனுடன் இணைந்து திருவனந்தபுரத்தில் ‘வளர்ச்சி ஆராய்ச்சி மையம்’ (Centre for Development Studies)-ஐ உருவாக்கி கட்டமைத்து அதை இன்றளவும் உலகறிய செய்திருப்பதில் அரிய பெரும் பங்களிப்பை நல்கினார்.

மேலும் கே.என்.ராஜ் என்ற தனி ஒரு நபரின் இருப்பே (Raj’s Presence) உலகப் புகழ் வாய்ந்த பல பொருளியல் வல்லுனர்களை CDS பக்கமாக ஈர்த்து வர காரணமாயிற்று. இதில், பொருளியல் அறிஞர் திருமதி.ராபின்சன் தனது இறுதி காலக்கட்டம் வரைக்கும் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் தொடர்ச்சியாக CDS-க்கு வருகை புரிந்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். இச்செய்திகளை ராஜின் மாணவரான பேராசிரியர் கே.பி.கண்ணன் அவர்களும் அவ்வப்போது மனமகிழ்ச்சியோடு பாராட்டி சொல்வதும் உண்டு தான்.

இடது சார்பு நிலையில், கினீசியன் பொருளியலில் (Left – Keynesian Economist) அதீத, ஆழ்ந்த நிபுணத்துவமும் அனுபவமுமிக்க கே.என்.ராஜின் கருத்துக்களை வலது சார்பு பொருளியல் சிந்தனை வாதிகளிலும் பலர் வியந்து ராஜின் ரசிகர்களாகவே இருந்ததுமுண்டு. அவ்வகையில், தடையற்ற வணிகத்தின் வல்லுனரான (Free Trade Champion) பேராசிரியர் ஜகதீஸ் பகவதி, கே.என்.ராஜின் பல கருத்துக்களோடு உடன்படாத நிலையிலும் கூட ராஜிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளமுண்டு என்று வியந்து சொல்வார்.

மேலும், ராஜ் மீது பெரும் மரியாதையையும் கொண்டிருந்தார். அதை 1986-ல் ராஜுக்கு ஒருமுறை உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்த போது,  ஜகதீஸ் பகவதி எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பின்வரும் வரிகளிலிருந்து அறியலாம், “நீங்கள் இந்திய நாட்டின் மிகவும் மதிப்பு வாய்ந்த பொக்கிஷம். எனவே, நீங்கள் உங்கள் உடல்நலத்தை பேணிக்காக்க வேண்டியது உங்களுக்கும் உரிய பெரும் சமுதாய கடமையாகும்”.

கே.என்.ராஜின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளிலிருந்து ஒவ்வொரு பொருளியல் அறிஞர்களும், கொள்கை பயிற்சியாளர்களும் (Policy Practitioners) கற்று தெரிந்துக் கொள்ள வேண்டிய பல பாடங்கள் ஏராளம் உண்டு தான். ஆனாலும், அவற்றில் ராஜ் அவர்களின் மூன்று உயர் பண்புகளை குறித்து இங்கே குறிப்பிடுவது சாலச் சிறந்ததாக இருக்கும். அவை முறையே, பொருளாதாரம் குறித்தான அவரது சீரிய மிக நுட்பமான புரிதல், ஆழ்ந்த அனுபவ வாதம் மற்றும் அசைக்க முடியாத, குழப்பமேயற்ற ஒருமைப்பாடு என்பவைகளாகும்.

தனது சொந்த மாநிலமான கேரளா மீதான ஆராய்ச்சியில் அவர் காட்டிய தீவிரமான, கூர்மையான மற்றும் காரசாரமான அணுகுமுறையே ராஜின் உலகப் புகழுக்கு முக்கிய காரணமாயிற்று. கேரளாவின் வளர்ச்சியின் பாதையில் இருந்த தனித்துவத்தை முதன் முதலில் வெளிச்சம் போட்டு காட்டியவரே ராஜ் தான். கேரளாவின் அந்த தனித்துவமே பின்னாளில் ‘கேரளா மாடல்’ என்று அறியப்பட்டது. இந்த தனித்துவம் யாதெனில், பிற மாநிலங்களை விட குறைந்த அளவிலான தலா வருமானத்துடன் (Per-Capita Income) இருந்து வந்த கேரளா, கல்வி மற்றும் சுகாதாரத்தில் பிற மாநிலங்களை விடவும் முன்னணியில் திகழ்கிறது என்று 1975-ல் வெளியிட்ட ‘கேரளாவின் வளர்ச்சியின் பாதை’ என்ற தனது முக்கியமான ஆய்வின் முடிவுகளாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சுதந்திரத்திற்கு முன் இருந்த ‘சமஸ்தான ஆட்சியாளர்களும்’, சுதந்திரத்திற்கு பின் தொடர்ந்து வந்த மாநில அரசுகள் ‘ஏழைகளுக்கு ஆதரவாக’ மேற்கொண்ட பல பொருளாதார கொள்கைகளுமே கேரளாவின் இந்த தனித்துவ வளர்ச்சிக்கு காரணம் என்றார். மேலும் கேரளாவின் இருபெரும் பிரச்சினைகளான வேலையின்மை (Unemployment) மற்றும் தகுதிக்கும் குறைவான வேலை வாய்ப்பு (Under-employment) இவற்றிற்கு தீர்வாக, கேரளா, ‘தொழில் மயமாகுதலின்’ தேவையையும் முன்னிலைப்படுத்தி சொன்னார் கே.என்.ராஜ்.

மிகச் சிறந்த அனுபவ பயிற்சியாளரான (Empricist) ராஜ் அவர்கள், ‘தொடர்பு போக்கு படிமம்’ அல்லது ‘சார்பலனாக்க முறை’ (Regression Models) சார்ந்த ‘முடிவற்ற’ மற்றும் ‘அறிவிலித்தனமான’ ஆய்வு முறைகளில் ஒரு போதும் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளவில்லை. மாறாக, அனைத்து தரவுகளையும் சமரசமே இல்லாத வகையில் தொடர் குறுக்கு சோதனைக்கும், பரிசோதனைக்கும் உட்படுத்த ஒரு போதும் அவர் தவறினதுமில்லை. மாறாக, ‘அடிப்படை விளக்கம்’ மற்றும் ‘விவரிப்பு’ (Descriptive) சார்ந்த தரவுகளைக் கொண்டு சக்தி வாய்ந்த நுண்ணறிவுடன் கூடிய அனுமானங்களையும் (Inferences), வலுவான கருத்துக்களையும் அவரால் உருவாக்க முடிந்தது.

1975-ம் வருடத்திய கேரளா குறித்த அவரது ஆய்வில் விவசாய உற்பத்தி, ஊட்டச்சத்து மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்தான தகவல்களை முதன்மை ஆய்வு (Primary Survey) மூலம் தரவுகளாக பெற்று ‘தேசிய மாதிரி அளவெடுப்பு’ (National Sample Survey) வெளியிட்ட ‘நுகர்வோர் செலவின அறிக்கை’ (Consumer Expenditure Reports)-ல் இருந்த பல குறைபாடுகளையும் அதன் பலவீனங்களையும் சுட்டிக் காட்டினார்.

அதிலும் குறிப்பாக தேங்காய் நுகர்வை தனது உணவு அட்டவணையில் NSS சேர்த்துக் கொள்ளவில்லை என்பதையும், கேரளா மக்களின் உணவு நுகர்வில் முக்கிய பங்கு வகிக்கும் மரவள்ளிக்கிழங்கு மற்றும் வாழைப்பழங்களின் நுகர்வின் அளவை NSS குறைத்து கணக்கீடு செய்துவிட்டது என்ற உண்மையையும் சுட்டிக்காட்டி, கேரளாவின் உணவு நுகர்விற்கான மதிப்பீடு/அளவீடு (Estimates)-க்கு மாற்று முறையையும் தந்து கேரளாவின் உணவு நுகர்விற்கான தனது மதிப்பீடுகளே அம்மாநிலத்தின் உண்மை நிலையை சிறந்த முறையில் பிரதிபலிக்க வல்லது என்றும் வாதிட்டார் கே.என்.ராஜ்.

இந்தியாவின் பிரதமர்களில் நேரு முதற்கொண்டு மன்மோகன்சிங் வரைக்கும் அவர்களின் நன்மதிப்பையும் செல்வாக்கையும் பெற்று விளங்கினார். கேரளாவின் முதல்வர்களான ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு முதற்கொண்டு சி.அச்சுதமேனன் வரைக்கும் அவர்களின் நன்மதிப்பும் செல்வாக்கும் பெற்று விளங்கினார். ஆனாலும், தேவை ஏற்பட்ட போதெல்லாம், இந்த தலைவர்களின் கருத்துக்களோடு தனது கருத்து உடன்படவில்லை என்றால், அதை வெளிப்படையாகவே அவர்களுக்கு தெரியப்படுத்துவதில் ராஜ் ஒரு போதும் தயக்கமே காட்டியதில்லை.

ஒரு முறை 1974-ம் ஆண்டு அகில இந்திய வானொலிக்கு ராஜ் வழங்கிய நேர்காணல் தணிக்கை செய்யப்பட்டு ஒலிபரப்பு செய்யப்பட்டபோது, உடனே அந்த தகவலை அப்போதைய ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஐ.கே.குஜராலிடமும், பிரதமர் இந்திராகாந்தியிடமும் முறையிட்டுவிட்டார். குஜரால் அவர்கள் தணிக்கை செய்யப்பட்டதை நியாயப்படுத்தினார். இந்திரா காந்தி அவர்களோ அதற்கு ஒப்புக் கொள்ளாமல் சிறிதளவு கூட தணிக்கை செய்திருக்கக் கூடாது என்ற தனது கருத்தை தெரிவித்திருந்தார். இவ்வாறு அரசியல் பொறுப்பிலுள்ள இருபெரும் தலைமைகளுக்கிடையே இருக்கும் கருத்து முரண்களை தனது கடிதத்தின் மூலம் குஜராலுக்கு ராஜ் தெரிவித்தார். ஆனாலும், உரிய பதில் வராததால் தனது கவலையை பொது வெளியில் தெரிவித்துவிட்டார் ராஜ் அவர்கள்.

இதுகுறித்தான முழு தகவல் தொடர்புகளையும் ராஜ் அவர்கள் இந்திராகாந்தியால் ஏற்படுத்தப்பட்ட அவசர காலக்கட்டத்தில் (Emergency 1975-77) நிகழ்ந்த விதிமீறல்களை விசாரித்த ஷா (Shah) கமிஷனுக்கு தெரிவித்துவிட்டார். அப்போதும், ராஜ் அவர்களின் நிலைப்பாடு என்னவென்றால், ‘அதிகார துஷ்பிரயோகம்’ அவசர காலக்கட்டத்தில் மட்டுமே புதிதாக ஒன்றும் முளைத்துவிடவில்லை. அது எல்லாக்காலக்கட்டத்திலும் அதற்கேற்ற சூழல் உருவாக்கப்பட்டால் அது அவ்வப்போது வளர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று தான் ராஜ் தனது வாதத்தை ஷா கமிஷனுக்கு தெரிவித்தார். இதை அவரது வார்த்தைகளில் அப்படியே சொல்வதானால், “இந்த நாட்டின் நடுத்தர மற்றும் உயர் வகுப்பை சார்ந்தவர்கள் அவசர காலக் கட்டத்தின் கொடுமைகளை தங்களுக்கு எந்தவித நேரடி பாதிப்பும் இல்லாத வரைக்கும் பொதுவாக குறை சொல்வார்கள். ஒரு தனிப்பட்ட நபருக்கு எதிராக மட்டுமே இதுபோன்று கொடுமைகள் நடக்கும் என்ற தவறான புரிதலிலிருந்து (aberation) விடுபட்டு, இது சரியான காரணம் மற்றும் புரிதல் இல்லாத (Malaise) நிலையில் நடக்கும் ஒரு தவறேயாகும்” என்றறியலாம்.

இவை அனைத்துக்குப் பின்னரும், 1980-களில் இந்திராகாந்தி பிரதமராக மீண்டும் பதவியேற்றதும், இந்தியாவின் பொருளாதார பிரச்சனைகள் குறித்து ராஜிடம் கலந்து ஆலோசிக்காமல் ஒருபோதும் இருந்ததில்லை. கேரளாவிலும் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடுக்கு எதிராக தனது கருத்து வேறுபாடுகளை எடுத்துரைக்க ஒருபோதும் ராஜ் தனது போர்வாளை எடுக்க தயங்கியதும் இல்லை. ஆனாலும், இவர்கள் இருவரும் தொடர்ந்து தங்களது வேறுப்பட்ட கருத்துக்களை ஒருவருக்கொருவர் இறுதிவரை பரிமாறிக்கொள்ள தயங்கியதும்,தவறியதுமே இல்லை.

கே.என்.ராஜ் அவர்கள் ஒருபோதும் தனது பெயர், புகழ் மற்றும் பதவிக்காக எதுவுமே செய்ததில்லை. பொது நலம் ஒன்றே அவரை இறுதிவரை இயக்கியது. இத்தகைய அவரது நல்ல குணங்களே, பல்வேறு கருத்து வேறுபாடுகளையும், அரசியல் வேறுபாடுகளையும் கடந்து அவருக்கே உரிய மரியாதையையும், பெரும் புகழையும் தொடர்ந்து பெற்று தருகிறது. அது இனிவருங்காலங்களிலும் தொடரும்.

நன்றி – Hindustan Times – Extraordinary legacy of a grounded economist

தமிழில் மொழிப்பெயர்ப்பு…

கீதா : முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மாணவி, தூய சவேரியார் கல்லூரி,
பாளையங்கோட்டை – 627002.  Email : [email protected]

தார்சிஸ் ஆல்பின் : பொருளியல் பேராசிரியர், தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை – 627002. பேராசிரியர் ராஜ் அவர்களால CDS-ல் பயிற்றுவிக்கப்பட்டவரும் ஆவார். Email: [email protected]

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

17.7 கோடி வாக்காளர்கள்… தொடங்கிய 4ஆம் கட்ட தேர்தல் – விறுவிறு வாக்குப்பதிவு!

பியூட்டி டிப்ஸ்: சருமப் பராமரிப்புக்கு இதுவே போதும்!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

டாப் 10 செய்திகள் : 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் முதல் ஐபிஎல் அப்டேட் வரை!

கிச்சன் கீர்த்தனா: காட்டேஜ் சீஸ் சாலட்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts