வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மாவட்டங்களுக்கு டூர் அடிப்பது பற்றிய அறிவிப்பு இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
”தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செல்வப் பெருந்தகை மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பே நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் மரபுப்படி புதிய மாநில தலைவராக வருகிறவர் தனக்கு ஆதரவான, தனக்கு வேண்டப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட தலைவராக நியமிப்பது வழக்கம்.
அந்த வகையில் செல்வப் பெருந்தகையும் புதிய மாவட்ட தலைவர்களை உடனடியாக நியமிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தேர்தலுக்கு மிக நெருக்கமான காலகட்டத்தில் தலைவராக நியமிக்கப்பட்டதால், அந்த சமயத்தில் மாவட்ட தலைவர்களை மாற்றி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தார் செல்வப் பெருந்தகை.
அதனால் அழகிரி மாநில தலைவராக இருந்தபோது நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களை கொண்டே தேர்தலையும் எதிர்கொண்டார்.
இந்த நிலையில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை தேதியான ஜூன் 4-ம் தேதிக்காக அனைவரும் ஓய்வெடுத்து காத்திருக்கும் நிலையில்… திடீரென மே 13ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார் செல்வப் பெருந்தகை.
கடந்த மே 10 வெள்ளிக்கிழமை மாலை, திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு சத்தியமூர்த்தி பவனில் இருந்து, ‘திங்கள்கிழமை உங்கள் மாவட்டத்திற்கு மாநில தலைவர் ஆய்வுக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்த வருகிறார். ஏற்பாடு செய்யுங்கள்’ என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து அவசர அவசரமாக கூட்டத்தை ஏற்பாடு செய்தனர், இன்று மே 13 காலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும், மாலை வேலூர் மாவட்டத்திலும் ஆய்வு கூட்டங்களை நடத்தியிருக்கிறார் செல்வப்பெருந்தகை.
கிராம காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டிகளின் செயல்பாடு பற்றியும் பலம் பற்றியும் ஆய்வு செய்வதுதான் இந்த பயணத்தின் நோக்கம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவர்களை மாற்றும் நேரம் வந்துவிட்டது என்றும் கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
வாக்கு எண்ணிக்கை வரை உள்ள கால இடைவெளியை பயன்படுத்திக் கொள்ள நினைத்த செல்வப்பெருந்தகை மாவட்டம் தோறும் சுற்றுப்பயணத் திட்டத்தை தீட்டினார். அதற்கு முன்பே புதிய மாவட்ட தலைவர்களின் உத்தேசப் பட்டியலையும் தயார் செய்திருக்கிறார் செல்வப் பெருந்தகை.
ஏற்கனவே மாநில தலைவராக இருந்த அழகிரி தன்னுடைய ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் மாநில தலைவர்கள் மற்றும் சீனியர் தலைவர்களின் ஆதரவாளர்கள் பட்டியலையும் கேட்டு வாங்கி தான் மாவட்ட தலைவர்களை நியமித்தார். அதேபோல செல்வப் பெருந்தகை நியமிப்பாரா? ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வருபவர்களை மாற்றாமல் தொடர அனுமதிப்பாரா? அல்லது தனது ஆதரவாளர்களை நியமிப்பாரா என்ற விவாதம் தான் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்து வருகிறது.
மே 13 ஆம் தேதி வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ‘காங்கிரஸ் கட்டமைப்பை உறுதிப்படுத்தினால் காமராஜர் ஆட்சி அமைக்க உதவியாக இருக்கும். காங்கிரஸ் ஆட்சியை இழந்து 57 ஆண்டுகளை வீணடித்துவிட்டோம். இனி ஒரு நொடி கூட வீணடிக்க மாட்டோம்’ என்று பேசியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்டமைப்பை உறுதி செய்வதற்காக உறுதியான முடிவுகளை எடுக்கத் தயாராகிறார் செல்வப்பெருந்தகை. அதன் தொடக்கமாக பல ஆண்டுகளாக மாவட்ட தலைவர்களாக பெயருக்கு இருக்கும் பலரை அகற்றிவிட்டு புதிய ரத்தம் பாய்ச்சப் போகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இதற்கும் ஒரு முடிவு கிடைக்கும்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை, பெங்களூரு 2 அணிகளுமே ஒன்றாக பிளே-ஆஃப் செல்லலாமா? எப்படி?
கருடன்: சூரி ஆக்சன் மிரட்டல்… ரிலீஸ் தேதி இதோ!