பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கிலி. இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், முத்துராமலிங்க தேவரின் 116ஆவது ஜெயந்தி விழா மற்றும் 61ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே வாடகை வாகனத்தில் பசும்பொன் செல்ல போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்தேன். இதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. எனவே, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்காக வாடகை வாகனங்களில் பசும்பொன் செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று (அக்டோபர் 19) நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் விசாரித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அப்போது தமிழக அரசு சார்பில், “பசும்பொன்னுக்கு வாடகை வாகனங்களில் செல்ல உயர் நீதிமன்றம் 2017ல் தடை உத்தரவு பிறப்பித்தது. இதை பின்பற்றிதான் அனுமதி வழங்கப்படவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அதனால் வாடகை வாகனங்களை அனுமதிக்க முடியாது.
பசும்பொன்னுக்கு பொதுமக்கள் இடையூறு இல்லாமல் சென்று வர 5 மாவட்டங்களில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன” என்று வாதிடப்பட்டது.
அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. வாடகை வாகனத்தில் செல்ல அனுமதியில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
பிரியா
5 மாநில தேர்தலில் வெற்றி யாருக்கு? தமிழ்நாட்டில் இருந்து ஒரு கருத்துக் கணிப்பு!
பொன்முடி மீதான சூமோட்டோ வழக்கு ஒத்திவைப்பு!