“பாஜக ஏமாற்றிவிட்டது” – கவனிக்க வைக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. Dr krishnasamy criticize bjp government
தேவேந்திர குல வேளாளர் மக்களின் நலனுக்காக போராடி வரும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், தொடர்ச்சியாக பாஜகவை ஆதரித்து வருகிறார்.
இந்தநிலையில், கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய பாஜக அரசால் தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்று தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் முக்கியமான விவாத பொருளாக மாறிவருகிறது.
புதிய தமிழகம் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் கோவை குனியமுத்தூரில் நேற்று (பிப்ரவரி 8) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து அவர் இன்று (பிப்ரவரி 9) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் இன்றைய நிலை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
களத்தில் இருக்கக்கூடிய நிலவரங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, புதிய தமிழகம் கட்சி ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியும்.
இந்த தேர்தல் புதிய தமிழகம் கட்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். வெற்றியை முதன்மையாக கொண்டு இந்த தேர்தலை அணுகுகிறோம்.
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் டெல்லியில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
மத்திய அரசு தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காதது, ஜிஎஸ்டி வரி வசூல் பங்கு முறையாக மாநிலங்களுக்கு கிடைக்காதது ஆரோக்கியமான சூழல் அல்ல.
மாநிலங்களுக்கான நிதிகளை பங்களிப்பதில் வெளிப்படைத்தன்மையான விதி இருக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வரும்
பாஜக, அதிமுக மீண்டும் இணைவதற்கான சூழல் இல்லை. வட துருவம், தென் துருவம் போல இரண்டு கட்சிகளும் உள்ளன.
எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்பது தேவந்திர குல வேளாளர் சமுதாயத்தின் 100 ஆண்டுகால கோரிக்கையாகும்.
பாஜக இந்த கோரிக்கையை செய்து கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ஏன் செய்ய மறுத்தார்கள் என்று தெரியவில்லை.
இந்த மக்கள் பாஜகவால் ஏமாற்றப்பட்டு விட்டார்கள். தேவந்திர குல வேளாளர் மக்களுக்கான நீதியை பாஜக பெற்றுத்தரவில்லை”, என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் செய்ய மாட்டேன்”: ஜி.வி.பிரகாஷ்
நரசிம்மராவ் தெறந்துவிட்ட கதவு: அப்டேட் குமாரு
Dr krishnasamy criticize bjp government