count down started against bjp in the country: RS Bharathi

பாஜகவுக்கு எதிரான கவுண்ட் டவுன் ஆரம்பித்துவிட்டது: ஆர்.எஸ். பாரதி

அரசியல்

அமலாக்கத்துறையின் மூலம் அச்சுறுத்த நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான கவுண்ட் டவுன் நாடு முழுவதும் ஆரம்பித்துவிட்டது என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று (ஜூலை 17) காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோன்று, விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கௌதம சிகாமணி விக்கிரவாண்டியில் நடத்தி வரும் சூர்யா பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சோதனை நடைபெற்று வரும் சைதாபேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வந்தார்.

அவர் வீட்டின் உள்ளே செல்வதற்கு அனுமதி கேட்ட நிலையில், அமலாக்கத்துறையினர் மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து வீட்டின் வாசலில் செய்தியாளர்களை சந்தித்து ஆர்.எஸ்.பாரதி பேசுகையில்,

“கடந்த மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்தநாளை தேசிய தலைவர்கள் முன்னிலையில் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின், ’யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பது தான் முக்கியம்’ என்று கூறியிருந்தார்.

அன்றிலிருந்து மத்திய அரசு ஆளுநரை வைத்து நெருக்கடி கொடுக்க முயற்சித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது.

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது.

பெங்களூருவில் தற்போது இரண்டு நாட்கள் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதன் மீதான கவனத்தை திசை திருப்புவதற்காக இன்று அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.

என்ன வழக்கின் கீழ் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நட்த்துகிறது என்பதை அறிவதற்காக நான் இங்கு வந்தேன். ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் எனக்கு அதற்கான உரிமை உள்ளது. ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை.

கடந்த 2006 முதல் 2011 வரை பொன்முடி அமைச்சராக இருந்த போது எழுந்த புகாரின் பேரில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பதியப்பட்ட வழக்கின் பேரில் தற்போது சோதனை நடத்தப்படுகிறது.

ஏறக்குறைய 12 ஆண்டுகள் முன்பு பதியப்பட்ட வழக்கிற்காக தற்போது சோதனை நடத்தப்படுவது மிகப்பெரிய கூத்தாக தான் உள்ளது.

அமலாக்காத்துறை தொடர்ந்த எந்த வழக்கிலும் இதுவரை குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

கர்நாடகாவில் இதேபோல் தான் தற்போது துணை முதல்வராக உள்ள டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறையின் மூலம் கடும் நெருக்கடி கொடுத்தார்கள். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்தியாவிலேயே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாஜகவுக்கு கர்நாடகாவில் என்ன நிலை ஏற்பட்டதோ, அதே நிலை தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏற்படும்.

தற்போது பொன்முடி விவகாரம் தேசிய பிரச்சனையாகி விட்டநிலையில், அமலாக்கத்துறையின் மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த நினைக்கும் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் கவுண்ட் டவுன் ஆரம்பித்துவிட்டது” என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

அமலாக்கத்துறை சோதனை எதிரொலி: தலைமைச்செயலகத்தில் போலீஸார் குவிப்பு!

செந்தில் பாலாஜியை தொடர்ந்து பொன்முடி வீட்டில் ரெய்டு : நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *