சவுக்கு சங்கர் கைதுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சவுக்கு சங்கர் கைதை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் கைது, நீதி வழங்குவது போல் இல்லாமல், பழி வாங்குவது போல் உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட “நீதிமன்ற அவமதிப்பு” என்னும் அதிகாரம், நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என்கிற அச்சுறுத்தலை உருவாக்குவதாக உள்ளது.
நீதியையும் நேர்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிற போதும், விமர்சனங்களிலிருந்து நீதிமன்றங்களும் நீதிபதிகளும் அப்பாற்பட்டவர்களா என்கிற கேள்விகள் எழுகின்றன.

கருத்துச் சொன்னாலே, நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் சட்டம் பாயுமென நீதிபதிகள் வரிந்து கட்டுகின்றனர்.
அந்தவகையில் தான், சமூக ஊடகச் செயற்பாட்டாளர் சவுக்கு சங்கர் தண்டிக்கப்பட்டுள்ளார். அக்குற்றத்துக்கு அதிக அளவு தண்டனையாக ஆறு மாதங்கள் அளித்துள்ளனர்.
இது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சட்டப்பிரிவை நீக்குவதற்கு, தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நீதிமன்றத்தை அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சவுக்கு சங்கருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்த தண்டனை,இயற்கை நீதிக்கு எதிரானதாக உள்ளது. எனவே, இதனை நீதிமன்றமே ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும்.
பொதுவாக ஒரு வழக்கில் வாதி – பிரதிவாதி என இரண்டு தரப்பு இருக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டுத் தீர்ப்பளிக்கும் இடத்தில் நீதிபதி இருப்பார்.
ஆனால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவரெனக் கூறப்படும் நீதிபதியே தீர்ப்பு வழங்கும் இடத்தில் இருக்கிறார். எனவே தான் இது இயற்கை நீதிக்கு முரணானதாக உள்ளது என்கிறோம்.
பொதுவாக நீதிபதிகள் ஒரு வழக்கில் தாம் மறைமுகமாகத் தொடர்பு கொண்டிருந்தால் கூட, அந்த வழக்கை விசாரிக்காமல் விலகிக் கொள்வது வழக்கம்.
இந்த வழக்கில்,பாதிக்கப்பட்டவராகக் கூறப்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களே, வழக்கை விசாரித்து தண்டனையும் அளித்திருக்கிறார். இது சட்டப்படி முறையானதல்ல என்று பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

1971 ஆம் வருடத்திய நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் அதிகபட்ச தண்டனையே ஆறு மாதம் சிறைதான்.
இந்த வழக்கில் அந்த அதிகபட்ச தண்டனையை நீதிபதிகள் வழங்கி உள்ளனர். இது நீதி வழங்குவது என இல்லாமல் பழிவாங்குவதாக உள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் மன்னிப்பு கேட்கவில்லை என்ற காரணத்தைக் கூறித்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் பழிவாங்கும் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடாது. கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.
மக்களின் இந்த மனநிலையைப் புரிந்து கொண்டு இந்த தண்டனையை ரத்து செய்ய நீதிபதிகள் முன்வரவேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செல்வம்
திமுக மாவட்ட சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைப்பு!
நள்ளிரவில் நல்லடக்கம் செய்யப்படும் ராணியின் உடல்!