சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 4) நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், “தமிழகத்தில், ஆட்சியில் இருக்கும் கட்சி ஆதரவில், போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பது, எனது மனதை வருத்தமடையச் செய்திருக்கிறது. நமது வருங்கால சந்ததியினரான குழந்தைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருள்கள் விற்பனை, பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் இந்த போதைப் பொருள் கடத்தலுக்குத் துணைபோகும் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் முழு ஆதரவுடன், பாஜக போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்பதே மோடியின் கேரன்டி” என்று பேசினார்.
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி டெல்லியில் போதை மருந்து கடத்தலின்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் சிக்கிய நிலையில் அவர்களின் தலைவராக திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர் செயல்பட்டது தெரியவந்தது. தகவல் வெளிவந்ததுமே ஜாபர் சாதிக்கை திமுக டிஸ்மிஸ் செய்தது, ஆனபோதும் போதை மருந்துக் கடத்தலில் திமுக மீதான விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் கூர்மைப்படுத்தினார்கள்.
நேற்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டதும் ஜாபர் சாதிக் விவகாரம் பற்றித்தான். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி ஆதரவோடு போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என்று நாட்டின் பிரதமரே குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும், போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ரீதியாகவும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருக்கின்றன.
பிரதமர் நேற்று மாலை இந்த அஸ்திரத்தை ஏவியிருக்கும் நிலையில், நேற்று காலை தமிழகம் முழுதும் அதிமுகவும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
இந்த நிலையில் அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளின் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் கடலூரில் நேற்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து,
“இந்தியாவிலேயே அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலம் குஜராத். அதானிக்குச் சொந்தமான துறைமுகத்தில்தான் இந்தியாவினுடைய மொத்த போதைப் பொருள் கடத்தலும் நடக்கிறது என்று அனைத்துத் தரப்பினரும் கூறுகிறார்கள். இந்தியா முழுக்கப் போதைப் பொருள் பரவலுக்குக் காரணம் பாஜ.க.தான்.
போதைப் பொருள் விற்பனையில் பா.ஜ.க. தலைவர்கள் பட்டியல் என்னிடத்தில் இருக்கிறது. பஞ்சாப் – ஷோன்தி (23 கிலோ heroin வழக்கு) இவர் 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். அவரை அமித்ஷா கட்சியில் சேர்க்கிறார். அதேபோல பா.ஜ.க. எம்.பி.,யின் மகன் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் குட்கா வழக்கில் பலரும் சிக்கினர். யார் யார் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள் என்பது பத்திரிகைகளில் வந்தன.
கட்சியைச் சேர்ந்த ஒருவர், போதைப்பொருள் புழக்கம் தொடர்பாகச் செயல்பட்டார் என கேள்விப்பட்டவுடன், அடுத்த, 24 மணி நேரத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது தி.மு.க. ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி செய்தாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
நேற்று விழுப்புரத்தில் நடந்த அதிமுகவின் ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், இதில் திமுகவோடு பாஜகவையும் சேர்த்து குற்றம் சாட்டினார்.
“போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனாக இருக்கும் ஜாபர் சாதிக், இன்னும் கைது செய்யப்படவில்லை. 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இதுவரை அவர் போதை மருந்து கடத்தல் செய்திருக்கிறார். இதற்கு தமிழ்நாடு அரசு மட்டும் பொறுப்பு அல்ல, டெல்லியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு என்ன செய்துகொண்டிருந்தது? அவர்கள் கண்டுபிடித்தார்களா?
இதை நியூசிலாந்து அரசும், ஆஸ்திரேலிய அரசும், அமெரிக்க உளவு நிறுவனமும் தகவல் கொடுத்துதான் கண்டுபிடித்திருக்கிறார்கள். மாநில அரசும் மத்திய அரசும் கண்டுபிடிக்கவில்லை.
கடத்தல் கும்பலின் தலைவர் ஜாபர் சாதிக் திமுக நிர்வாகி. அமைச்சர் உதயநிதியின் அறக்கட்டளைக்கு நிதி கொடுத்திருக்கிறார். இதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.
இதுவரை ஜாபர் சாதிக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. ஜாபர் சாதிக் உயிரோடு கிடைப்பாரா? அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” என்று பேசி அதிர வைத்திருக்கிறார் சி.வி. சண்முகம்.
இந்நிலையில் பிரதமர் நேற்று மாலை சென்னையில் பேசிய அதேநேரம் மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக் எங்கே என்ற தேடுதலில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ஜாபர் சாதிக் கென்யாவுக்கு பயணம் சென்றதை அறிந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கென்யாவுக்கு ஜாபர் சென்றதன் நோக்கம், அவருடன் சென்றவர்கள் யார் யார் என்ற விசாரணையிலும் இறங்கியிருக்கிறார்கள்.
மேலும் ஜாபர் சாதிக்குடன் தொழில் முறையிலும் அரசியல் ரீதியாகவும் நெருங்கிய தொடர்பில் இருந்த சிலரின் பட்டியலைத் தயாரித்து அவர்களிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதில் சென்னையைச் சேர்ந்த அரசியல் புள்ளிகளின் பெயரும் உள்ளது. இதனால் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
பெங்களூரு குண்டுவெடிப்பு : சென்னை இளைஞர்களுக்கு தொடர்பா?
வேலைவாய்ப்பு:. திருச்சி என் ஐ டி யில் பணி!