விலைவாசி உயர்வு : திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

Published On:

| By Monisha

admk protest against price hike

காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று (ஜூலை 20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது. தக்காளி விலை மட்டுமல்லாது பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி, குடை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. காய்கறி ஒரு பக்கம் விலை ஏறிய நிலையில் மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

மாவட்டம் தோறும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, திருவாரூர், சென்னை, சேலம், திருச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ஈரோடு, கரூர், தென்காசி, திருவள்ளூர், சிவகங்கை, பெரம்பலூர், தர்மபுரி, வேலூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கோவை, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, அரியலூர், இராமநாதபுரம், விழுப்புரம், விருதுநகர், தஞ்சாவூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

சேலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் இருந்த போது விலைவாசி உயர்வை கண்டித்து ‘கும்பி எரியுது, குடல் கருகுது’ என்று வசனம் பேசிக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆனால் இன்று உயர்ந்துள்ள விலைவாசியைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்காவது போராட்டம் நடத்தியுள்ளனரா?” என்று கேள்வி எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் தக்காளி, பச்சைமிளகாய், வெண்டைக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளால் செய்யப்பட்ட மாலைகளை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சேலத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

1020 தியேட்டர்களில் ‘கொலை’ படம் வெளியாகிறது!

செந்தில் பாலாஜி வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel