தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் : மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்!

அரசியல்

விஜயகாந்த் உடலை தேமுதிக கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று (டிசம்பர் 28) காலை காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக, தேமுதிக அலுவலகத்திலும், தீவுத் திடலிலும் வைக்கப்பட்டது. தற்போது தீவுத் திடலில் இருந்து விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் கிளம்பியுள்ளது.

விஜயகாந்த்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  சொந்த இடம், பட்டா இடத்தில் இறந்தவரை அடக்கம் செய்ய முடியுமா என்ற சர்ச்சையும்  எழுந்தது.

இதுகுறித்து மின்னம்பலத்தில், சொந்த இடத்தில் கேப்டன் உடல் அடக்கம் – சட்ட சிக்கலா? என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், “திருவள்ளூரைச் சேர்ந்த ஜெகதீஷ்வரி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பஞ்சாயத்து சட்ட ரீதியாக மயானம் என ஒதுக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட இடத்தில்தான் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும். பட்டா நிலத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உயர்நீதிமன்றத்  தீர்ப்பின் அடிப்படையில் பட்டா நிலத்தில் இறந்தவரின் உடலை அடக்கமோ தகனமோ செய்ய முடியாது.  ஆனால் பஞ்சாயத்து சட்டத்தில் இன்னொரு பிரிவும் உள்ளது. அதாவது ஒருவரின் உடலை ஓர் பட்டா இடத்தில் அடக்கம் செய்ய முடிவெடுத்தால் அதற்கு சுற்றுப்புற மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதலோடு அங்கே அடக்கம் செய்யலாம்.

இப்போதைய திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், மறைந்த விஜயகாந்துக்கு அரசு மரியாதை வழங்குவதாக அறிவித்துவிட்டார். இந்தநிலையில்  மாநகராட்சியிடம் இருந்து  தேமுதிக அலுவலகத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கான நிர்வாக ஒப்புதலும் எளிதாகவே கிடைத்துள்ளது.

விஜயகாந்தின் உடலை தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்ய அந்த சுற்று வட்டாரத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவும் வாய்ப்பில்லை.  அந்த அலுவலகத்தின் ஒரு பக்கம் மேம்பாலம், இன்னொரு பக்கம் ஆம்னி பஸ் ஸ்டாண்டு என்று பொது இடங்களே இருப்பதால் தனி நபர்களின் எதிர்ப்பு என்பதும் இல்லை. எனவே விஜயகாந்தின் உடலை தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்வதற்கு சட்ட சிக்கல்கள் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்தசூழலில், விஜயகாந்த் உடலை தேமுதிக கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா, விஜயகாந்த் உடலை தேமுதிக கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை வாசித்தார். மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விஜயகாந்த் உடலை தீவுத்திடலில் வைக்கப்பட்டதற்கான ஏற்பாடு மற்றும் இறுதி ஊர்வல வாகன ஏற்பாடு உள்ளிட்ட செலவுகளை அரசு ஏற்றுள்ளது. இறுதிச் சடங்கில் அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் அஞ்சலி !

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் : மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்!

  1. மறக்க முடியாத செயலை செய்த முதல்வருக்கு கோடி கோடி நன்றிகள்..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *