செந்தில் பாலாஜி வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
செந்தில் பாலாஜி மனைவி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஒரு மாதம் நடந்த சட்டப் போராட்டத்திற்குப் பின் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்
கடந்த ஜூலை 14 ஆம் தேதி வழங்கிய இந்த தீர்ப்பில், ‘செந்தில் பாலாஜி இந்தியச் சட்டத்துக்கு உட்பட்டவர் தான். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததிலும் முதன்மை நீதிமன்றம் அவரை ரிமாண்ட் செய்ததிலும் சட்டரீதியாக எந்த நடைமுறை விதிமீறலும் இல்லை. செந்தில் பாலாஜி குணமடைந்த பிறகு அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம்’ என்று கூறினார்.
இந்த சூழலில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி , ஜூலை 17ஆம் தேதி சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். முன்னதாக அமலாக்கத் துறையும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்தது.
அதில் செந்தில் பாலாஜி மனைவி மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நீதிபதிகள் போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு இந்த மனுவை விசாரிக்கவுள்ளது.
பிரியா
அரசியலுக்காக நீதித்துறையை இழுக்காதீர்கள்? : உயர் நீதிமன்றம்!
பாலியல் புகார்: பிரிஜ் பூஷனுக்கு நிபந்தனை ஜாமீன்!