இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உச்சரிக்கும் சொல் அம்மா.
தந்தை பாசம் இல்லாத உயிர்கள் கூட உலகத்தில் உண்டு… தாய்ப் பாசம் இல்லாத உயிர்கள் எங்குமில்லை எனலாம்.
’ஈன்றாளின் எண்ணக் கடவுளும் இல்’ என்கிறது நான் மணிக்கடிகையில் ஒரு பாடல். அதாவது பெற்றதாயை விட பெரிய கடவுள் எதுவும் இல்லை என்கிறது.
மண்ணாசை பெண்ணாசை என புற உலகின் அனைத்து ஆசைகளையும் துறந்த பட்டினத்தாரால் கூட தாய் மீதான பாசத்தை விட முடியவில்லை.
தன் அன்னை இறந்தபோது பட்டினத்தார் எழுதிய பாடலைப் படித்தால் கல் நெஞ்சும் கண்ணீர் சிந்தும்.
”வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்?”
அதாவது, வட்டிலும், தொட்டிலிலும், மார் மேலும், தோள் மேலும், கட்டிலிலும், கிடத்தி எனக்கு அன்பு காட்டியவள் என் தாய். சேலையில் தொட்டில் கட்டி என்னை சீராட்டி காப்பாற்றியத் தாயின் உடம்பிற்கா நான் தீ மூட்டப் போகிறேன் என நொந்து அழுதார் பட்டினத்தார்.
இவ்வுலகில் தாய்ப்பாசம் இல்லாதவர்கள் யாருமில்லை. அந்த வகையில் உலகின் பல நாடுகளில் இன்று (12.05.2024) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தினம் கொண்டாடப்படுவது ஏன்?
அமெரிக்கவைச் சேர்ந்தவர் சமூக சேவகி அன் ரீவ்ஸ் ஜார்விஸ். அமெரிக்கா யுத்தத்தில் இறந்தவர்களுக்காகவும், போர்களினால் குடும்பத்தை இழந்தவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் கடுமையாக போராடினார் அன் ரீவ்ஸ் ஜார்விஸ். 1904ம் ஆண்டு இறந்துவிட்டார்.
அவர் இறந்த பின்பு அவரது மகள் அன்னா மரியா ஜார்விஸ் 1908ம் ஆண்டு அங்குள்ள சர்ச் ஒன்றில் தன் அன்னையின் நினைவாக, சிறப்பு வழிபாடு நடத்தினார். அதோடு இல்லாமல் உலகில் உள்ள அனைவரும் அவரவர் அன்னையை கொண்டாட வேண்டும் என்கிற எண்ணமும் அன்ன மரியா ஜார்விஸ்க்கு ஏற்பட்டது.
1913 ஆம் ஆண்டு பணி காரணமாக பென்சில்வேனியா மாநிலத்தில் குடியேறிய அன்னா மரியா ஜார்வீஸ், அங்குள்ள மாநில அரசுக்கு அன்னையர் தினம் வேண்டுமென கடிதம் எழுதினார்.
அதை ஏற்ற அம்மாநில அரசு அன்னையர் தினம் கொண்டாடப்படுமென உறுதியளித்தது. அதோடு மனம் நில்லாத அன்னா மரிய ஜார்வீஸ், அன்னையர் தினம் அமெரிக்கா முழுதும் கொண்டாடப்பட வேண்டுமென பல சமூக ஆர்வலர்களை திரட்டி ஒரு இயக்கத்தையும் ஆரம்பித்து அப்போதைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதை ஏற்றுக்கொண்ட அவர், வருடம்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுமென்றும் 1914ம் ஆண்டு அறிவித்தார். அன்று முதல் உலகின் பல நாடுகளில் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று நாம் அன்னையர் தினம் கொண்டாடுவதற்கு இப்படி ஒரு வரலாறு இருக்கிறது.
அன்னையர் தினத்தின் வரலாறை கொண்டாடுவதோடு நின்று விடாமல், இன்று ஒருநாளாவது நமது தாய்க்கு பிடித்த விஷயங்களை செய்து, அவர்கள் செய்யும் வேலைக்கு உதவிகள் செய்ய முற்படுவோம்.
ஒவ்வொருவரும் நமது தாயை கொண்டாடுவோம்: அன்னையை போற்றுவோம்.
லெனின்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என்னது டீக்கு சம்மர் ஸ்பெஷல் ஆஃபரா? அப்டேட் குமாரு
“நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அலை” – ராகுல்
அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த ஆக்சன் பிளான்…சற்றும் எதிர்பார்க்காத பாஜக!