தமிழகத்தில் இன்று ராகுல் சுற்றுப்பயணம்! எங்கெல்லாம் செல்லப் போகிறார்?

அரசியல்

தமிழகத்தில் இருந்து பாதயாத்திரையை இன்று (செப்டம்பர் 7) தொடங்கவுள்ள ராகுல் காந்தி, அதற்கு முன்பாக அவரது தந்தையின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துகிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி, இன்று (செப்டம்பர் 7) முதல் பாதயாத்திரை செல்ல இருப்பதுதான் தற்போதைய அரசியலின் ஹாட்நியூஸாக இருக்கிறது.

இதற்காக நேற்று (செப்டம்பர் 6) இரவு 8.20 மணிக்கு டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்திறங்கிய ராகுல் காந்தியை,

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் எம்.பி. ஜெ.எம்.ஆரூண் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் சால்வை தந்து வரவேற்றனர்.

தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட ராகுல்காந்தி, பின்னர் காரில் ஏறி பரங்கிமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றார்.

நேற்று இரவு அந்த நட்சத்திர விடுதியில் தங்கிய அவர், இன்று (செப்டம்பர் 7) காலை 6 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தியின் நினைவிடத்திற்குச் செல்கிறார்.

இன்றைய நிகழ்ச்சி

அங்கு, ராஜிவ் காந்தியின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதற்குப் பிறகு ராஜிவ் நினைவிடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தரும் ராகுல், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வீணை காயத்ரியின் இசையஞ்சலியில் பொதுமக்களுடன் சேர்ந்து கலந்துகொள்கிறார்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு, ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அரச மரக்கன்றுகளை நட இருக்கிறார். பின்னர், நினைவிட ஊழியர்கள் மற்றும் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

இதைத் தொடர்ந்து, திருபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நினைவிட நுழைவுவாயில் அருகில் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றுகிறார். அந்த நிகழ்வுக்குப் பின் மீண்டும் சென்னைக்கு புறப்படுகிறார் ராகுல் காந்தி.

திருபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தியின் நினைவிடத்திற்கு ராகுல் காந்தி வருவது இதுவே முதல்முறை.

அரசியலில் தீவிரமாக களமிறங்கிய ராகுல், தமிழ்நாட்டுக்கு பலமுறை வந்தபோதும் இந்த நினைவிடத்துக்கு செல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில், தனது தந்தையின் நினைவிடத்தை பிரார்த்தனை செய்துவிட்டு தனது பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் ராகுல் காந்தி.

இதையடுத்து, ராஜிவ் நினைவிடத்துக்கு ராகுல் செல்வதால் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Rahul gandhi tour

பின்னர் சென்னையிலிருந்து காலை 11.40 மணியளவில் திருவனந்தபுரம் செல்லும் ராகுல், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைகிறார்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் சிலைக்கு செல்லும் ராகுல் காந்தி, காந்தி மண்டபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் உரையாடுகிறார்.

காந்தி மண்டபத்திற்கு அருகே ராகுல் காந்தியின் நடைப்பயணத்தைத் தேசியக்கொடி கொடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

அங்கிருந்து சுமார் 600 மீட்டர் நடந்துசென்று பொதுக்கூட்ட மேடையை ராகுல் காந்தி அடையவுள்ளார்.

மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் உள்பட மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்க இருக்கின்றனர்.

ஜெ.பிரகாஷ்

ராகுல் நடைபயணம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *