ஐபிஎல் 2024: எந்தெந்த அணிக்கு எத்தனை புள்ளிகள்? CSK வின் சாய்ஸ் என்ன?

Published On:

| By indhu

2024 ஐபிஎல் தொடர் க்ளைமேக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று (மே 12) சென்னை சூப்பர் கிங்க்ஸ் வாழ்வா சாவா என்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

நேற்று கொல்கத்தாவுக்கும் மும்பைக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது.  அதனால் ஆட்டம் 16 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 16 ஓவர்களில் 157 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய மும்பை அணியால் 16 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதன்மூலம், 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மற்ற அணிகளின் புள்ளிகள் என்ன?  அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறும் வாய்ப்புகள் எந்தெந்த அணிகளுக்கு உள்ளன?

புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது ராஜஸ்தான் அணி.  99% தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், அதை 100% ஆக்க, இன்று சென்னை அல்லது அதன் பிறகு  பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற வேண்டும்.

தற்போது 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது  சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி,

இந்த இடத்தில் இருந்து பிளே-ஆஃப் வாய்ப்பை இழப்பதற்கான வாய்ப்பு குறைவு தான். ஒருவேளை மீதமுள்ள 2 போட்டிகளிலும் அந்த அணி தோல்வியடைந்தால், மற்ற அணிகளின் வெற்றியை பொறுத்து, அந்த அணி டாப் 4 இடங்களில் இருந்து கீழே செல்ல வாய்ப்பு உள்ளது. அதேபோல, மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால், முதல் 2 இடங்களுக்கு முன்னேறவும் ஐதராபாத் அணிக்கு வாய்ப்பு உள்ளது.

கடைசியாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்த நிலையில், அந்த அணி மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு சென்றுள்ளது.

ஒருவேளை ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் கூட, அதன் பிளே-ஆஃப் வாய்ப்பு மங்கிவிடும்.

அதே 12 உள்ளிகளுடன் 5வது மற்றும் 6வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகளுக்கும் அதே நிலை தான். அதுமட்டுமின்றி, இந்த 2 அணிகளின் நெட் ரன் ரேட் நெகடிவ்வில் உள்ள நிலையில், மீதமுள்ள 2 போட்டிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்திலும் இந்த 2 அணிகள் உள்ளன.

இந்த அணிகளை தொடர்ந்து, புள்ளிப்பட்டியலில் 7வது மற்றும் 8வது இடங்களில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இன்னும் பிளே-ஆஃப் வாய்ப்பு இருந்தாலும், அது மற்ற அணிகளின் வெற்றியை பொறுத்தே அமையும்.

முதலாவதாக இந்த 2 அணிகளும் மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அதை தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மீதமுள்ள 2 போட்டிகளிலும் தோல்வி அடைய வேண்டும். சென்னை, டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் மீதமுள்ள 2 போட்டிகளில் 1 போட்டியில் தோல்வியடைய வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில், பெங்களூரு மற்றும் குஜராத் ஆகிய அணிகள் ரன் ரேட் அடிப்படையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது.

இதனால், மீதமுள்ள 10 லீக் சுற்று ஆட்டங்களும் மிகுந்த எதிர்பார்ப்பு நிறைந்த ஆட்டங்களாகவே அமையவுள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”அன்னையர் தினம்” – வாழ்த்திய அரசியல் தலைவர்கள்!

HBD Edappadi: ’தாமரை’ மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து கேக் வெட்டிய எடப்பாடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel