தாமிரபரணி ஆற்றில் கடந்த ஆண்டு பெருக்கெடுத்த வெள்ளம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை என்ன பாடுபடுத்தியது என்பதை நாம் அறிவோம்.
தாமிரபரணியாற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி வெள்ள நீரை கன்னடியன் கால்வாயில் இருந்து வெள்ள நீர் கால்வாய் மூலமாக திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய வறட்சி பகுதிகளுக்கு திருப்பிவிடும் வகையில் தாமிரபரணி ஆற்றுடன் கருமேனியாறு நம்பியாறு இணைக்கும் திட்டத்தை 2009 இல் அறிவித்தார் அப்போதைய முதலமைச்சரான கலைஞர்.
இறுதி கட்டத்தை எட்டிய இந்தத் திட்டத்தில் ஏற்பட்டிருந்த தடையை தனக்கே உரிய பாணியில் நேரடியாக களத்தில் இறங்கி தீர்த்து வைத்திருக்கிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் உபரியாக கலக்கும் வெள்ள நீரை விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இதுதான் தமிழ்நாட்டின் முதல் நதி நீர் இணைப்புத் திட்டமும் கூட.
இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 69 கிலோ மீட்டர், தூத்துக்குடியில் 8 கிலோ மீட்டர் என 75 கிலோ மீட்டர் வெள்ள நீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் நான்காக பிரிக்கப்பட்டு அந்த நான்கு கட்டங்களில் மூன்று கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. இறுதி கட்டப் பணிகள் மேலும் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டன. அவற்றிலும் மூன்று கட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில், நான்காம் கட்டப் பணிகள் மட்டும் 45% மட்டுமே முடிவடைந்திருந்தன.
மொத்தம் ரூ.1,060 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்த நிலையில், இன்னும் 40 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மட்டுமே முடியவேண்டும்.
அதாவது கடைசி கட்ட கால்வாய் வெட்டும் பணிகள் தான் இப்போது பாக்கி. அதிலும் திட்டத்தின் கடைசி பகுதியான சாத்தான்குளம் தாலுகா அரசூர் பூச்சிக் காடு கிராமத்தில் கணேச நாடார் என்பவருக்கு சொந்தமான இடம் வழியாக இந்த கால்வாய் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், அவர் இழப்பீடு உள்ளிட்ட காரணங்களால் தனது இடத்தை இந்தத் திட்டத்துக்காக கொடுப்பதில் மறுப்பு தெரிவித்து வந்தார்.
அண்மையில் இந்தத் திட்டம் பற்றி ஆய்வு நடத்திய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் இத்தகவல் அதிகாரிகளால் கூறப்பட்டது. உடனடியாக மே 11 ஆம் தேதி சாத்தான்குளம் தாலுகா அரசூர் பூச்சிக் காடு கிராமத்துக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ‘இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படும் நன்மைகளை கணேச நாடாரிடம் எடுத்துக் கூறி அவரது இடத்தில் கால்வாய் அமைப்பதற்கான சம்மதத்தைப் பெற்றார். குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கால்வாயின் அகலத்தைக் குறைத்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டு அமைச்சர் தந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார் கணேசன்.
இதுகுறித்து பேசிய திட்ட அதிகாரிகள், “2009 இல் கலைஞர் இத்திட்டத்தைத் தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு சாத்தான்குளம் இடைத்தேர்தலின் போது இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆனாலும் இத்திட்டம் தாமதப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 175 குளங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 75 குளங்கள் என சுமார் 250க்கும் மேற்பட்ட குளங்கள் நிறையும்.
ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ராதாபுரம் ஆகிய பகுதிகளுக்கு வரப் பிரசாதமாக அமையும். ராதாபுரம் பகுதியில் இப்போது நிலத்தடி நீர் உப்பாக மாறி வருகிறது. இந்த இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு குளங்களில் தொடர்ந்து நீர் தேங்கினால், நிலத்தடி நீர் உப்பாக மாறும் அபாயம் தடுக்கப்படும்.
அமைச்சர் அனிதாவின் தலையீட்டால் கடைசி கட்டத்தில் இருந்த சில தடையும் நீக்கப்பட்டுவிட்டது. இன்னும் சில மாதங்களில் திட்டம் முடிவுக்கு வந்துவிடும். கலைஞரின் கனவுத் திட்டத்துடைய கடைசி தடையை உடைத்து அதை நிறைவேற்ற வைத்துவிட்டார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்” என்கிறார்கள்.
தாமிரபரணி -கருமேனி-நம்பியாறு திட்டம் முழுமையடைந்து நடைமுறைக்கு வந்துவிட்டால்… கடந்த ஆண்டு நெல்லை, தூத்துக்குடியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு இனி ஏற்படாது. எப்போது இத்திட்டம் நடைமுறைக்கு வருமென காத்திருக்கிறார்கள் இரு மாவட்ட மக்களும்!
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை – என்ன தெரியுமா?
சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்!