விஜய் தேவரகொண்டாவின் ‘தி பேமிலி ஸ்டார்’ எப்படி இருக்கிறது?- திரை விமர்சனம்!

சினிமா

‘அரைச்ச மாவை அரைப்போமா துவைச்ச துணிய துவைப்போமா’ என்ற பாடல், யுவன் இசையில் ‘வல்லவன்’ படத்திற்காக இயக்குனர் பேரரசு எழுதியது. ஒவ்வொரு முறை அதனைக் கேட்கும்போதும் விதவிதமாகத் துள்ளலை உணர்பவரா நீங்கள்? அப்படியென்றால், அவ்வரிகளின் அர்த்தமும் உங்களுக்குப் பிடித்துப் போகும்.

போலவே, தியேட்டருக்கு சென்று திரும்பத் திரும்ப ஒரேமாதிரியான கதையைத் திரையில் பார்ப்பதும் அசூயையை ஏற்படுத்தாது. நல்லதொரு தொழில்நுட்பக் குழு மற்றும் நடிகர் நடிகைகளுடன் அப்படம் உருவாக்கப்படும்போது, அதனைப் பெரிதாக வரவேற்கத் தோன்றும். எதற்கு இந்த ‘பில்டப்’ என்கிறீர்களா?

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், ஜெகபதி பாபு, அச்யுத் குமார், ரோஹினி ஹட்டங்காடி, வாசுகி, அபிநயா, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தி பேமிலி ஸ்டார்’ படத்தைப் பார்த்தபோது, மேற்சொன்ன விஷயங்களே நினைவுக்கு வந்தன.

புளித்துப்போன மாவில் காரசாரமான மசாலாவைச் சேர்த்துச் சுடப்பட்ட தோசையாக இருந்தாலும், ரசிகர்களான நமக்குப் பிடிக்கிறதா? என்பதுதான் முக்கியமான விஷயம். சரி, படம் எப்படியிருக்கிறது? என்பதை இங்கே பார்க்கலாம்.

பழகிய கதை

கோவர்தன் (விஜய் தேவரகொண்டா) ஒரு மிடில்கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். அண்ணன்கள், அண்ணிகள், அவர்களது குழந்தைகள், பாட்டி ஆகியோருடன் வாழ்பவர். அவர்களது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருபவர்.

குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாகச் சரி செய்வதே அவரது முழுநேர வேலையாகவும் இருக்கிறது. அதற்கு நடுவே, ஒரு நிறுவனத்தில் ஆர்க்கிடெக்ட் ஆகவும் பணியாற்றுகிறார்.

தன்னை எப்போதும் பிசியாக வைத்துக்கொள்ளும் கோவர்தன், இளம்பெண்களுக்குப் பிடித்தமான ஆணாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்புவதே இல்லை. ஆனால், அதுவே அவரைப் பலர் விரும்பக் காரணமாகிறது.

Thalaivar 171: மாநகரம், கைதி கனெக்ட்… பாலிவுட்டின் பெரிய ஹீரோவை களமிறக்கும் லோகேஷ்

அந்த வகையில், அவரது வீட்டு மாடியில் வாடகைக்கு குடியேறுகிறார் இந்து (மிருணாள் தாகூர்). முதலில் கோவர்தனை நேசிக்கத் தொடங்குபவர், பின்னர் அவரது குடும்பத்தில் ஒருவராக மாறும் அளவுக்குப் பழகுகிறார்.

தனது குடும்பத்தை, அதன் நலனுக்காகவே உழைக்கும் தன்னை, அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒரு பெண்ணுக்காகக் காத்திருக்கும் கோவர்தனுக்கு, இந்துவை ரொம்பவே பிடித்துப் போகிறது. அவரிடம் காதலைத் தெரிவிக்க எண்ணுகிறார்.

மிருணாள் தாகூர்

அந்த நேரத்தில், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆந்த்ரோபோலஜி மாணவியாக இருக்கும் இந்து தனது ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்கும் நோக்கில் கோவர்தன் குடும்பத்தினரை ஒரு மாதிரியாக எடுத்துக்கொண்டது தெரிய வருகிறது.

தன்னையும் குடும்பத்தினரையும் ரகசியமாகக் கண்காணித்ததாக உணரும் கோவர்தனுக்கு, அது பெரிய அசிங்கமாகத் தெரிகிறது. அதனால், இந்துவைக் கன்னாபின்னாவென்று திட்டுகிறார். இனி, தனது வாழ்வில் காதலே இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்.

தான் இதுவரை வாழ்ந்த நடுத்தரக் குடும்ப வாழ்வை ரொம்பவே தாழ்வாக இந்து எடுத்துக் கொண்டதாகக் கருதுகிறார் கோவர்தன். அதையடுத்து, அந்தக் கருத்துகளைப் பொய்யாக்கும் வேட்கையாக்குடன் ஒரு பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்துடன் வேலைக்குச் சேரும் வாய்ப்பைப் பெறுகிறார்.

அதன்மூலமாக, இந்துவிடம் தான் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் ஆண் இல்லை என்று நிரூபிக்க விரும்புகிறார். ஆனால், விதி கோவர்தனை மீண்டும் இந்துவிடமே கொண்டு வந்து சேர்க்கிறது. அவரைத் தினமும் பார்க்கும் நிலையை உருவாக்குகிறது.

Video: ‘இந்த பாட்டு நல்லாருக்கு’… ஹீரோவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட பிராவோ!

அதன்பின் என்ன நடந்தது? உண்மையிலேயே, இந்து எழுதிய புத்தகத்தில் கோவர்தன் குடும்பத்தைப் பற்றிக் கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டிருந்ததா? கோவர்தன் – இந்து காதல் என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

குடும்பத்தின் மீது பாசத்தைக் கொட்டும் நாயகன்; அவனை விரும்பும் பெண்களுக்கு அதுவே ‘உவ்வேக்’ உணர்வைத் தருகிறது என்று ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் நாம் பார்த்த அதே கதை தான்.

பழகிய கதை என்றபோதும், அதில் ஆங்காங்கே ஹீரோயிசம், கொஞ்சம் ரொமான்ஸ், லேசாய் காமெடி, திணிக்கப்பட்ட ஆக்‌ஷன் என்று அனைத்தையும் சேர்த்துத் திரையில் பரிமாறியிருக்கிறார் இயக்குனர் பரசுராம்.

ஹீரோவுக்கு முக்கியத்துவம்

விஜய் தேவரகொண்டாவுக்குப் பெண்கள் மத்தியில் இருக்கும் இமேஜுக்கு தகுந்தாற்போல ஒரு கதையை உருவாக்க முனைந்திருக்கிறார் இயக்குனர்.

கூடவே, இளைஞர்களைக் கவரும் வகையில் காதலையும் சண்டைக்காட்சிகளையும் இணைத்திருக்கிறார். அதனால், படம் முழுக்க நாயகனான விஜய் தேவரகொண்டாவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விஜய் தேவரகொண்டா ஒரு கமர்ஷியல் படத்திற்குத் தேவையான நடிப்பைக் கொட்டுவதில் ‘பாஸ்’ ஆகியிருக்கிறார். காதல், குடும்பப் பாசம், தெனாவெட்டு காட்டும் காட்சிகளில் சட்டென்று நம்மை ஈர்க்கிறார்.

சீதா ராமம் போன்றே (?!) இதிலும் வந்து போயிருக்கிறார் மிருணாள் தாகூர். அவரது முகத்தில் தென்படும் தளர்ச்சி, அவருக்கும் விஜய்க்குமான ‘கெமிஸ்ட்ரி’யை குலைத்திருக்கிறது. மற்றபடி, அவரது நடிப்பில் பெரிய குறையேதுமில்லை.

களமிறங்கும் மாஸ் ஹீரோக்கள்… இந்தியன் 2, தங்கலான், ராயன் படங்களின் ரிலீஸ் தேதி இதுதான்!

விஜய் தேவரகொண்டாவின் பாட்டியாக வரும் ரோஹினி ஹட்டங்காடிக்குக் கூடுதலாக இரண்டு காட்சிகள் தரப்பட்டுள்ளன. அதனால் வாசுகி, அபிநயா, ரவி பிரகாஷ் மற்றும் குழந்தைகளாக நடித்தவர்களுக்குப் பெரிதாக வாய்ப்புகள் இல்லை.

ரவி பாபு, அஜய் கோஷ் ஆட்கள் உடன் விஜய் மோதுவதாக வரும் சண்டைக்காட்சிகள் திரைக்கதையில் திணிக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களது வில்லத்தனம் பெரிதாகத் தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஜெகபதிபாபு, அச்யுத் குமாரும் அந்த வரிசையில் சேர்ந்து நம்மை ஏமாற்றுகின்றனர்.

பின்பாதியில் வரும் வெண்ணிலா கிஷோர் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். இவர்கள் தவிர்த்து ஒரு டஜன் பேராவது திரைக்கதையில் தலைகாட்டியிருப்பார்கள். ஆனால், அவர்களது முகங்கள் நம் மனதில் பதிவதே இல்லை. அந்த அளவுக்கே அவர்களுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார் இயக்குனர்.

இந்த படத்தில் கே.யு.மோகனனின் ஒளிப்பதிவு ஒவ்வொரு பிரேமிலும் அழகியல் உணர்வை வாரியிறைத்திருக்கிறது.போலவே, கோபி சுந்தரின் பாடல்களும் பின்னணி இசையும் நம்மை ஈர்க்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து, நல்லதொரு கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்துகின்றன.

திரையில் ‘ரிச்னெஸ்’ தெரியக் கடுமையாக உழைத்திருக்கிறது தயாரிப்பு வடிவமைப்பாளர் ஏ.எஸ்.பிரகாஷின் குழு. இன்னும் டிஐ, விஎஃப்எக்ஸ், ஒலி வடிவமைப்பு, ஆடை மற்றும் ஒப்பனையைக் கையாண்ட கலைஞர்கள் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பினால் ஒரு ‘கலர்ஃபுல்’ அனுபவத்தைத் தருகிறது ‘தி பேமிலி ஸ்டார்’.

சில காட்சிகள் ஆங்காங்கே வசீகரித்தாலும், ஒட்டுமொத்தமாக இந்தப் படம் நம்மை ஈர்க்கிறதா? என்று கேட்டால் பதில் சொல்வது கடினம். காரணம், இந்த திரைக்கதையில் பல இடங்களில் ஓட்டைகள் தென்படுகின்றன. அதனை எல்லாம் மறந்து, நம்மால் இப்படத்துடன் ஒட்ட முடிகிறதா என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.

தெளிவான ‘ஸ்கிரிப்ட்’ இல்லை

இயக்குனர் பரசுராம் இந்த படத்தின் எழுத்தாக்கத்தினைக் கையாண்டிருக்கிறார். ஒரு நடுத்தரக் குடும்பத்து இளைஞன், சமூகத்தில் இருக்கும் இதர இளைஞர்களைப் போன்று இல்லாமல் தனது குடும்பத்திற்காகவே உழைக்கிறான் என்பது நிச்சயம் கொஞ்சம் ‘ப்ரெஷ்னெஸ்’ஸை திரையில் உணர வைக்கும்.

அதேநேரத்தில், அதைத் தவிர மற்ற விஷயங்களும் அதே போன்று அமைக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த படத்தில், இந்து ஏன் ஆந்த்ரோபோலஜி படிக்கிறார் என்பதோ, அவர் ஏன் கோவர்தன் குடும்பத்தினரைப் பற்றி அறிய விரும்புகிறார் என்பதோ தெளிவாகச் சொல்லப்படவில்லை.

அதற்கான லாஜிக்கை திரைக்கதையில் சேர்த்திருந்தால் படம் ‘செம’ எனும்படியாக இருந்திருக்கும். நாயகனை மட்டுமே முன்னிலைப்படுத்தாமல், அவரது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் நாம் அறியும் விதமாகத் தெளிவாக ‘ஸ்கிரிப்ட்’ அமைக்கப்பட்டிருந்தால் இந்தப் படம் தொட்டிருக்கும் உயரமே வேறு.

ஏற்கனவே நமக்குத் தெரிந்ததொரு கதையைக் கொஞ்சம் வித்தியாசமாக உணரவைக்க அது போன்ற சில விஷயங்கள் உதவியிருக்கும். இப்போது, ‘ஓகே’ எனும் அளவைத் தொட்ட ஒரு வழக்கமான தெலுங்குப் படமாகவே உள்ளது.

இது தமிழிலும் வெளியாகியிருக்கிறது. திரையில் நடிப்புக்கலைஞர்களின் உதடுகளோடு வசனங்கள் ஒட்டாதபோதும், நாம் கேட்கும்போது அவை ‘நாராசமாக’ இல்லை என்பது ஆறுதல். ஸ்பாய்லர் என்றபோதும், இதில் இரண்டு முத்தக் காட்சிகள் இருக்கின்றன என்பதைச் சொல்லியாக வேண்டும்.

அதை சகஜமாக எடுத்துக்கொள்ளத் தயார் என்றால், ‘ஜாலியாக’ விடுமுறையைக் கழிக்க உதவும் திரைப்படமாக ‘தி பேமிலி ஸ்டார்’ அமையக்கூடும். மொத்தமாக இப்படம் ‘பேமிலி’ மசால் தோசை அனுபவத்தை உங்களுக்குத் தரக்கூடும்!

-உதய் பாடகலிங்கம் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மாநிலங்களை பாளையக்காரர்களாக மாற்றும் பாஜக: ப.சிதம்பரம் தாக்கு!

“புகழேந்தியின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பு”: ஸ்டாலின் இரங்கல்!

“தமிழகத்தின் வளர்ச்சிக்கு 1.48 லட்சம் கோடி”: சென்னை பிரச்சாரத்தில் ஸ்மிருதி இரானி

தஞ்சை பெரியகோவில்: கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை பெருவிழா!

+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *