பீகாரின் அரசியலில் 34 வயது இளைஞரான தேஜஸ்வி யாதவின் எழுச்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பீகாரில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்டத் தேர்தல்கள் 9 தொகுதிகளில் முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்டத் தேர்தல் பிரச்சாரங்களில் தேஜஸ்வி யாதவின் பிரச்சாரம் நாடு முழுக்க கவனம் பெற்று வருகிறது.
இந்தி பெல்ட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல் அல்லாமல், பீகாரில் வேலைவாய்ப்பு என்பதே தேர்தலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. அந்த விவாதத்தினை வீரியமாக வளர்த்தெடுத்துக் கொண்டிருப்பது தேஜஸ்வி யாதவ்தான். இந்தி பெல்ட்டில் பாஜக பலமாக உள்ளதாக சொல்லப்படும் நிலையில், அந்த பெல்ட்டின் முக்கிய மாநிலமான பீகாரைக் கைப்பற்றுவது இந்த முறை பாஜகவிற்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது என்பதே அரசியல் விமர்சகர்கள் சொல்லக் கூடிய கருத்தாக இருக்கிறது.
இதற்கெல்லாம் காரணமாக பார்க்கப்படுவது தேஜஸ்வி யாதவின் வியூகங்களும் அனல் பறக்கும் பிரச்சாரமும் தான். தேஜஸ்வி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்கு முன்பு யார் இந்த தேஜஸ்வி என்பதைப் பார்ப்போம்.
யார் இந்த தேஜஸ்வி யாதவ்?
பீகாரில் நடப்பது காட்டாட்சி என்று சொல்லி 1990 லிருந்து 2005 வரை இந்தியா முழுக்க ஒரு வில்லனைப் போல பாஜகவால் வர்ணிக்கப்பட்டவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ். அத்வானியின் ரத யாத்திரையால் நாடு முழுக்க மத ரீதியான பிரச்சினைகள் உருவானபோது, அந்த யாத்திரையை நிறுத்தி அத்வானியை கைது செய்ய உத்தரவிட்டவர் லாலு. அந்த காலக்கட்டத்திலேயே இந்துத்துவ அரசியலுக்கு சிம்ம சொப்பனமாக பார்க்கப்பட்டவர். அப்படிப்பட்ட லாலுவுக்கும் ராப்ரி தேவிக்கும் 1989 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் தேஜஸ்வி யாதவ்.
அரசியலில் பெரிதாக இல்லாமல் கிரிக்கெட் பிளேயராக இருந்த தேஜஸ்வி, 2008 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரையில் IPL கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.
2015 ஆம் ஆண்டு பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் தேஜஸ்வி. அரசியலில் எண்ட்ரி கொடுத்த தேஜஸ்விக்கான பாதை ஆரம்பத்திலேயே அவ்வளவு ஸ்மூத்தாக இல்லை. 2017 ஆம் ஆண்டு லாலு தொடர்பான ஒரு வழக்கில், சிபிஐ தேஜஸ்வி மீதும் வழக்கு பதிந்தது. 2004 ஆம் ஆண்டு லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை கொடுப்பதாகச் சொல்லி, வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடம் நிலங்களை குறைந்த விலையில் பெற்றார் என்று அவர் மீது பதியப்பட்ட வழக்கில் தேஜஸ்வி இணைக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு தேஜஸ்விக்கு 14 வயதே ஆகியிருக்கும் என்றபோது அவர் எப்படி ஊழல் செய்திருக்க முடியும் என்று வாதாடி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிணை பெற்றார். அந்த வழக்கில் இன்றும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார் தேஜஸ்வி.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனைக்கு உள்ளாகி லாலு பிரசாத் யாதவ் சிறைக்குச் சென்ற போது 28 வயதில் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு தலைமையேற்கும் பொறுப்பு தேஜஸ்விக்கு வந்தது. லாலு சிறைக்குச் சென்ற பிறகு ராஷ்டிரிய ஜனதா தளம் பல பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டிருந்தது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது ராஷ்டிரிய ஜனதா தளம். பாஜக-நிதிஷ் குமார் கூட்டணி பீகாரில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 39-ஐக் கைப்பற்றியது.
சவால்களை வென்று தனிப்பெரும் தலைமையாக உயர்ந்த தேஜஸ்வி
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் இனிமேல் மீண்டெழுவது கடினம் என்று அரசியல் விமர்சகர்கள் பேச ஆரம்பித்தனர். இந்த நிலையில் தான் தேஜஸ்வி பீகார் முழுதும் சுற்றிச் சுழல ஆரம்பித்தார். அடுத்த ஆண்டே 2020 இல் பீகாரில் சட்டமன்றத் தேர்தலும் வந்தது.
சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி மேற்கொண்ட பிரச்சாரம் பீகாரை புரட்டிப் போட்டது. தேய்ந்து கொண்டிருக்கிறது என்று விமர்சிக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தினை பீகாரின் தனிப்பெரும் கட்சியாக தூக்கி நிறுத்தினார் தேஜஸ்வி யாதவ். பீகாரின் மக்களுக்கு என்ன பிரச்சினை என்பதைப் புரிந்து கொண்டு தனித்துவமான முறையில் தேஜஸ்வி மேற்கொண்ட பிரச்சாரங்களில் கூட்டம் திரண்டு கொண்டே இருந்தது. 75 சட்டமன்றத் தொகுதிகளை ராஷ்டிரிய ஜனதா தளம் கைப்பற்றியது. மிகச் சிறிய எண்ணிக்கை வித்தியாசத்தில் தான் முதல்வராகும் வாய்ப்பை இழந்தார் தேஜஸ்வி.
17 மாதங்கள் துணை முதல்வர்
2022 ஆம் ஆண்டு நிதிஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கூட்டணியில் இணைந்ததால் பீகாரின் துணை முதல்வரானார் தேஜஸ்வி யாதவ். மீண்டும் நிதிஷ் குமார் பாஜக கூட்டணிக்கு செல்வதற்கு முன்பு 17 மாதங்கள் துணை முதல்வராக இருந்தார் தேஜஸ்வி. அப்போது பீகாரில் லட்சக்கணக்கான அரசு வேலை வாய்ப்புகளை அவர் புதிதாக ஏற்படுத்தியது இளைஞர்கள் மத்தியில் தேஜஸ்விக்கான ஆதரவினை கூட்டியிருக்கிறது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பீகார் முழுதும் தேஜஸ்வி மேற்கொண்ட யாத்திரையில் அவருக்கு திரண்ட கூட்டம் அனைவரின் கவனத்தையும் அவரை நோக்கி திருப்பியுள்ளது. தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக தேஜஸ்வி மாறியிருக்கிறார்.
நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு பீகாரில் இந்தியா கூட்டணி வலுவிழந்து விட்டது என்று நடந்த பிரச்சாரங்களை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது தேஜஸ்விக்கு கூடிய கூட்டம். பீகாரின் மக்கள் தொகையில் 30% சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள் என்பதால் இந்த தேர்தலிலும் வேலைவாய்ப்பு என்பதையே முக்கிய வாக்குறுதியாக கையெலெடுத்துள்ளார் தேஜஸ்வி. தனித் தலைமையாய் நின்று கொண்டு பீகாரில் மோடி மற்றும் நிதிஷ் குமாரின் பிரச்சாரங்களை எதிர்கொண்டு வருகிறார்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் அடையாளத்தை மாற்றும் தேஜஸ்வி
பீகாரில் அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர் தேர்வில் சாதி என்பது மிக முக்கியமான காரணியாக இருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை பீகாரின் முன்னேறிய சாதிகள் மத்தியில் பெரும் செல்வாக்கை செலுத்துகிறது. பாஜக போட்டியிடும் 17 தொகுதிகளில் 10 வேட்பாளர்கள் முன்னேறிய வகுப்பினைச் சேர்ந்தவர்கள்.
இதர பிற்படுத்தப்பட்டவர்கள் (ஓபிசி) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (ஈ.பி.சி) மத்தியில் நிதிஷ் குமாரின் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் அக்கட்சியின் வேட்பாளர்கள் இப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தைப் பொறுத்தவரை அது எப்போதும் யாதவ்-முஸ்லீம் கட்சியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. யாதவ் மற்றும் முஸ்லீம்கள் சேர்ந்து பீகாரின் மக்கள் தொகையில் 31% இருப்பது ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு பலம் தான். ஆனால் அதைத் தாண்டிய ஒரு அடையாளத்தை உருவாக்க தேஜஸ்வி முயற்சித்து வருகிறார்.
அக்கட்சி போட்டியிடும் 26 தொகுதிகளில் 9 வேட்பாளர்கள் யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற 17 வேட்பாளர்களில் ஓபிசி, ஈபிசி, தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் என்று அனைவரும் இடம்பெற வேண்டுமென்று கணக்கு போட்டு வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார் தேஜஸ்வி.
சாதிக் கணக்குகளுக்கு அப்பால் முக்கியத்துவம் பெறும் கோரிக்கைகள்
பீகாரில் சாதிகளுக்கு அப்பாற்பட்டு இந்த தேர்தலில் வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வறுமை போன்றவை முக்கியமான விவாதங்களாக உள்ளன.
பீகார் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருப்பதால் அம்மாநிலத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்க சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. மோடி மற்றும் நிதிஷ் குமார் இருவரும் இந்த தேர்தலில் இந்த கோரிக்கை குறித்து மவுனம் காக்கும் நிலையில், இதனை மிகவும் வலுவாக கையிலெடுத்திருக்கிறார் தேஜஸ்வி.
”பீகார் முதல்வரான நிதிஷ்குமார் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வந்தவர். ஆனால் பிரதமர் மோடி அதனை நிராகரித்து வருகிறார். பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க முடியாதென்றால் வெளிப்படையாக பொதுவெளியில் சொல்லுங்கள். அதன்பிறகு நாங்கள் என்ன செய்வதென்று முடிவு செய்து கொள்கிறோம். பீகாரின் வளர்ச்சிக்கு எங்களின் சொந்த வழியை நாங்கள் உருவாக்கிக் கொள்கிறோம்” என்று தேஜஸ்வி பேசி வருவது பல ஆதரவை அவருக்கு உருவாக்கி உள்ளது.
போகும் இடமெல்லாம் மோடி அவர்களே நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பீகாருக்கு கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது என்ற கேள்வியை தவறாமல் எழுப்பி வருகிறார்.
பாஜகவின் பரப்புரைக்கு பதிலடி
தேஜஸ்வி யாதவ் பொறித்த மீனை சாப்பிடும் வீடியோவை பரப்பி நவராத்திரி நாளன்று அசைவம் சாப்பிடுகிறார் என்று சொல்லி மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக பாஜக தலைவர்கள் தேஜஸ்வி மீது சமூக வலைதளங்களில் தாக்குதல் தொடுத்தனர்.
அதற்கு தேஜஸ்வி ஹெலிகாப்டரில் இருந்து ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டுக் கொண்டே வீடியோ போட்டு பதிலடி கொடுத்தார். இன்று நான் ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் பாஜக தலைவர்கள் எரிச்சலடைவார்கள். ஆரஞ்சு கலர் கொண்ட பழத்தை நான் சாப்பிடுவதால் அவர்கள் மனம் புண்படலாம் என்று பதிலடி கொடுத்தார்.
”அவர்கள் உணவில் அரசியல் செய்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் உண்மையான பிரச்சினைகளை பேச விரும்புவதில்லை. ஆனால் நாங்கள் உண்மையான பிரச்சினைகளைத் தான் பேசுவோம். வேறு எதையும் பேசமாட்டோம்” என்று அதனை அசால்ட்டாக எதிர்கொண்டார். இப்படி அவரை நோக்கி பாஜகவினர் வீசும் பவுன்சர்களையெல்லாம் சிக்சருக்கு விளாசிக் கொண்டிருக்கிறார் தேஜஸ்வி.
மோடியின் கேரண்டிகளை டார்கெட் செய்யும் தேஜஸ்வி
மோடியின் கேரண்டிகள் எல்லாம் சீப்பான சைனீஸ் ஐட்டங்களைப் போன்றது. நீண்ட காலம் நீடிக்காது என்று மோடியின் பழைய வாக்குறுதிகளையெல்லாம் விமர்சித்து வருகிறார்.
17 மாத ஆட்சியில் நாங்கள் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை கொடுத்தோம். காண்ட்ராக்ட் பணியில் இருந்த மூன்றரை லட்சம் பள்ளி ஆசிரியர்களை அரசுப் பணியாளர்களாக உயர்த்தினோம். ஆனால் 10 ஆண்டு காலத்தில் நீங்கள் செய்தது என்ன என்று மோடியை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறார்.
அதேபோல் சாதி வாரி கணக்கெடுப்பிற்காக தேஜஸ்வி செய்த வேலைகளும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. சாதிவாரி கணக்கெடுப்பும், சமூக நீதி முழக்கமுமே பாஜகவின் இந்துத்துவ அரசியலை பின்னுக்குத் தள்ளும் முக்கியமான கருவி என்று அதனை வீரியமாக கையில் எடுத்துள்ளார் தேஜஸ்வி.
மேடையில் பயன்படுத்தும் வித்தியாசமான யுக்தி
இந்த முறை பல வித்தியாசமான யுக்திகளை பிரச்சார மேடைகளில் காட்டி வருகிறார் தேஜஸ்வி. அதில் சமீபத்தில் மேடையில் ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கரோடு மைக்கை நோக்கி வந்தார் தேஜஸ்வி. மேடையில் இருந்த அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, அந்த ஸ்பீக்கரை கையில் வைத்துக்கொண்டு ஆன் செய்து மைக்கின் முன்பு நீட்டினார். அதில் 2014 ஆம் ஆண்டு மோடி தேர்தல் பிரச்சாரங்களில் பீகாரில் பேசிய பல க்ளிப்புகள் இணைக்கப்பட்ட ஆடியோ ஓடியது. மோடி விலைவாசி உயர்வைப் பற்றியும், வேலைவாய்ப்பின்மையைப் பற்றியும், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன் என்றும் பேசிக் கொண்டிருந்தார்.
”இப்படியே விலைவாசி ஏறிக்கொண்டே போனால் மக்கள் எதை சாப்பிடுவது, ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் இது பற்றி வாய் திறப்பதே இல்லை. நீங்கள் ஓட்டு போடப் போகும்போது, உங்கள் வீட்டில் உள்ள சிலிண்டருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டுப் போங்கள்” என்று சிலிண்டர் விலை உயர்வைப் பற்றி மோடி பேசிக் கொண்டிருந்த ஆடியோவைக் கேட்டதும் கூட்டத்தில் சிரிப்பலை வீச அப்ளாசை அள்ளினார் தேஜஸ்வி.
மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால் பீகாரின் பிரச்சினைகளை சரிசெய்ய 1.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்குவோம் என்றும், தேவைப்பட்டால் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என்றும் மோடி பேசியிருந்தார். அதுவும் ஸ்பீக்கரில் ஓடியது.
மேலும் 500,1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த போது, ”50 நாட்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள், எல்லா பிரச்சினைகளும் சரியாகாவிட்டால் நீங்கள் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்” என்று மோடி பேசியது ஓடிக்கொண்டிருக்கும்போதே, ”50 நாட்களை விடுங்க..10 ஆண்டுகள் உங்களை நாங்கள் சகித்துக் கொண்டு விட்டோம். இனியாவது எங்களை விட்டு விடுங்கள்” என்று தேஜஸ்வி அடித்த கமெண்ட் நேஷனல் நியூசாக எகிறியது.
மோடியின் பிரச்சாரங்களை எதிர்கொள்ளும் விதம்
400 சீட்டுகளை கைப்பற்றுவோம் என்று மோடி பேசியதைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, ”அவர் இப்போது அந்த முழக்கத்தை மறந்துவிட்டார். அவரோட ’400 சீட்டு’ என்கிற படம் முதல் கட்டத் தேர்தலிலேயே ஃப்ளாப் ஆகிவிட்டது. இரண்டாம் கட்டத் தேர்தலில் அந்த படம் ரிலீசே ஆகாது. பீகார் உங்களுக்கு பெரிய ஷாக்கை கொடுக்கப் போகிறது” என்று கூலாக பதில் கொடுத்தார்.
இதையெல்லாம் தாண்டி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்துகளை எல்லாம் முஸ்லீம்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்று பிரதமர் மோடி மத ரீதியாக பேசியதற்கு, தேஜஸ்வி வைத்த எமோஷனல் அப்பீல் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.
“நான் பிரதமரிடம் இந்த ஒன்றை மட்டும்தான் சொல்ல வேண்டும். நான் கையெடுத்துக் கும்பிட்டு இதை சொல்கிறேன். வெறுப்பு அரசியலை விட்டுவிடுங்கள். உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேசுங்கள். இங்கு வறுமையிலிருந்து மீள்வதற்கும், விலைவாசியை எதிர்கொள்வதற்கும் எல்லோருக்கும் வேலை தேவை. நீங்கள் சொல்லுங்கள். இந்த 10 ஆண்டுகளில் இந்த நாட்டுக்கோ அல்லது பீகாருக்கோ செய்தது என்ன? இதைப் பற்றி பேசாமல் எப்போது பார்த்தாலும் கோவில்களைப் பற்றியும் முஸ்லீம்களைப் பற்றியுமே குரலை உயர்த்திக் கொண்டிருப்பது நல்லதல்ல” என்று சொல்லி, பாஜகவின் பிரச்சாரத்திற்கு பின்னால் ஓடாமல், மீண்டும் வேலைவாய்ப்பு சிக்கலை பீகாரின் மைய விவாதத்துக்கு கொண்டுவந்து நிறுத்தினார்.
அதேபோல் பாஜக அரசியல் சாசனத்தை மாற்றுவதற்காகவே 400 சீட்டுகள் என்பதை சொல்லி வருகிறது என்பதையும் எல்லா மேடைகளிலும் சொல்லி வருகிறார்.
34 வயது இளைஞரான தேஜஸ்வி மோடிக்கும், நிதிஷ்குமாருக்கும் பீகாரில் கொடுத்துக் கொண்டிருக்கும் சவால் நாடு முழுவதுள்ள அனைத்து அரசியல் விமர்சகர்களின் பார்வையையும் பீகாரின் பக்கம் திருப்பியுள்ளது. கடந்த முறை 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை வென்ற பாஜகவை, இந்த முறை எத்தனை தொகுதிகளை இழக்கச் செய்யப் போகிறார் தேஜஸ்வி என்று நாடு முழுவதும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அத்வானியின் ரதத்தினை லாலு நிறுத்தினார்; மோடியின் ரதத்தினை தேஜஸ்வி நிறுத்துவார் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் அடித்துச் சொல்லி வருகிறார்கள்.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காங்கிரஸ் தலைவருக்கே இந்த நிலைமையா?: உண்மையை வெளிக்கொண்டு வர அண்ணாமலை வலியுறுத்தல்!
இரண்டாம் கட்டத் தேர்தல்: பின்னடைவை சந்திக்கிறதா பாஜக? எத்தனை தொகுதிகளை இழக்கிறது?