வைஃபை ஆன் செய்ததும் கொடைக்கானல் பயணம் முடிந்ததும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் சென்னை திரும்பிய செய்தி இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
தேர்தல் நடந்து முடிந்த பிறகு கிட்டத்தட்ட அனைத்து மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள், அந்த தொகுதிகளுக்கான பொறுப்பு அமைச்சர்களை சந்தித்த திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் சென்னை திரும்பி விட்டார்.
திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் முடிந்த பிறகு மிகச் சில அமைச்சர்களை மட்டுமே சந்தித்தவர், தன்னிடம் நேரம் கேட்ட பல மாசெக்களை சந்திக்கவில்லை.
இந்த சூழ்நிலையில், மே 1ஆம் தேதி அவர் தனது குடும்பத்தினரோடு சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு சென்று விட்டார். உதயநிதி மே 10ம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிந்த பிறகு ஒரு சிலரை மட்டுமே சந்தித்த உதயநிதி அந்த ஒருவார காலத்தில் சில முக்கிய விவகாரங்கள் பற்றி ஆய்வு செய்து இருக்கிறார் என்கிறார்கள் இளைஞர் அணி வட்டாரத்தில்.
தேர்தலுக்காக தமிழ்நாடு முழுதும் பயணப்பட்ட உதயநிதி திமுக மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் பற்றி அப்போதே கேட்டறிந்திருக்கிறார். அந்த இன் புட்டுகளை வைத்துக் கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுகவை இன்னமும் வலிமைப்படுத்த வேண்டும் என்றால், இப்போது கணிசமான மாவட்டச் செயலாளர்களிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் உதயநிதி.
அதாவது திமுகவில் இருக்கும் மாவட்ட செயலாளர்களில் சிலருக்கு மட்டுமே இரண்டு தொகுதிகள் இருக்கின்றன. மற்றவர்களுக்கு மூன்று தொகுதிகள் முதல் ஐந்து தொகுதிகள் என்று இருக்கின்றன. அதனால் மாவட்டச் செயலாளர்களின் விருப்பு வெறுப்புக்கு ஆளானவர்கள் பாதிக்கப்படுவதாகவும் உதயநிதிக்கு ரிப்போர்ட்டுகள் சென்றிருக்கின்றன.
சென்னையிலேயே சேகர்பாபுவிடம் 5 தொகுதிகள் இருக்கின்றன. சேகர்பாபு பற்றி எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன் தொடர்ந்து வெளிப்படையாகவே போராடுகிறார். உதயநிதியிடமும் தொடர்ந்து முறையிட்டு வருகிறார்.
அதேபோல மா.சுப்பிரமணியத்திடம் மதுரவாயல், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய 5 தொகுதிகள் இருக்கின்றன. இதில் தமிழகத்திலேயே பெரிய தொகுதியான சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ், ‘தனது தொகுதியை தனி மாவட்டமாக பிரித்துக் கொடுக்கும்படி’ உதயநிதியிடம் கேட்டிருக்கிறார்.
எடப்பாடி ஆட்சி காலத்திலேயே செங்கல்பட்டு மாவட்டம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு விட்டபோதிலும் திமுக மாவட்ட அமைப்பில் இன்னமும் செங்கல்பட்டு மாவட்டத்தை பிரிக்க விடாமல் காஞ்சி மாவட்டச் செயலாளர் தாமோ. அன்பரசன் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கிறார். இதை இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அப்துல் மாலிக், இ.கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்து உதயநிதியிடம் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் முத்துசாமியிடம் 5 தொகுதிகள் இருக்கின்றன. இவற்றைப் பிரித்து இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பிரகாஷை மாசெ ஆக்குவது, தூத்துக்குடியில் அனிதா, கீதா ஆகியோரிடம் தலா 3 தொகுதிகள் இருக்கின்றன. அதில் இருந்து 2 தொகுதிகளைப் பிரித்து மாநில துணைச் செயலாளர் ஜோயலை மாசெ ஆக்குவது என்று தேர்தலுக்குப் பிறகான காலகட்டத்தில் தமிழகம் தழுவிய அளவில் பெரிய பட்டியலை தயார் செய்திருக்கிறார் உதயநிதி.
லண்டன் சென்று வந்ததும் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசித்து தேர்தல் வெற்றியோடு மாசெக்கள் மாற்றம் செய்வது என்ற திட்டம் உதயநிதியிடம் இருக்கிறது. அதாவது இந்த மாற்றத்தில் இளைஞரணி நிர்வாகிகள் மாசெக்கள் ஆக ப்ரமோட் ஆவார்கள் என்பதுதான் இப்போது மாசெக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம்.
2023 இல் நடந்த உட்கட்சித் தேர்தலிலேயே உதயநிதி இளைஞரணி நிர்வாகிகள் பலரை மாவட்டச் செயலாளர் ஆக்குவதற்கு கடுமையாக முயற்சித்தார். ஆனால், சீனியர் மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலினிடம் சென்டிமென்ட் ஆக உருகிப் பேசி, அதை முறியடித்துவிட்டார்கள். சில மாவட்டச் செயலாளர்கள் வயது, சீனியாரிட்டி எல்லாம் மறந்துவிட்டு உதயநிதியிடமே காலில் விழாத குறையாக கெஞ்சி தங்களது பதவிகளைத் தக்க வைத்துக் கொண்டனர்.
ஆனால், இந்த முறை எந்த சென்டிமென்ட் வேண்டுகோளுக்கும் கரையாமல் 2026-க்காக சில உறுதியான முடிவுகளை எடுக்க உதயநிதி தயாராகி வருகிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய்யின் பாலிடிக்ஸ் புடிச்சிருக்கு: பாராட்டிய சிவராஜ் குமார்
கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி தான் எனது தந்தை: மதிஷா பதிரனா உருக்கம்!