காயமடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர் பத்திரனா, கூடுதல் சிகிச்சைக்காக இலங்கை திரும்பவுள்ளதாக அணி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது சென்னை அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு 2024 ஐபிஎல் தொடரில், இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
பிளே-ஆஃப் சுற்றில் தனது இடத்தை உறுதி செய்ய, மீதமுள்ள 3 போட்டிகளிலுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.
இந்நிலையில், அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படும் மதீச பத்திரனா, தற்போது இந்த 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பத்திரனா இந்த தொடரில் சென்னை அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். தற்போது, 2024 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில், அவர் 7வது இடத்திலும் உள்ளார்.
இந்நிலையில், அவருக்கு தசை நார் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இதன் காரணமாக ஓய்வில் உள்ள பத்திரனா, கூடுதல் சிகிச்சைக்காக இலங்கை திரும்பவுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, சென்னை அணிக்கு சிறப்பாக பந்துவீசி வந்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி தாயகம் திரும்பியிருந்தார்.
இவர் நடப்பு தொடரில், சென்னை அணிக்காக 9 போட்டிகளில் 14 விக்கெட்களை கைப்பற்றி, தற்போது அதிக விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
முன்னதாக, சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணியின் ஆஸ்தான பந்துவீச்சாளரான தீபக் சஹார் காயம் காரணமாக வெளியேறினார். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற தகவல் இல்லை.
இப்படி, சென்னை அணியின் 3 முக்கிய பந்துவீச்சாளர்கள், போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, சென்னை அணி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், தர்மசாலாவில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சிமர்ஜீத் சிங், துஷார் தேஸ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா அடங்கிய சென்னை அணியின் இளம் பந்துவீச்சாளர் படை, சிறப்பாக பந்துவீசி, அணிக்கு 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி தேடி தந்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ்க்கு தர்ம அடி கொடுத்த சென்னை கிங்ஸ்!
நடிகர் ராமராஜன் வீட்டில் நடந்த சோகம்!