இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் பாளையக்காரர்களாக மாற்றுவது தான் பாஜகவின் அரசியல் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று (ஏப்ரல் 6) குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை டெல்லியில் நேற்று (ஏப்ரல் 5) அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட்டனர்.
இதுகுறித்து சிவகங்கையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம்,
“காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகிய மூன்று நீதிகளை வலியுறுத்துகிறது. இந்தியாவின் அவலநிலையை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் படம்பிடித்து காட்டியிருக்கிறோம். இதனை களைவதற்கு எங்களது கருத்துக்கள், யோசனைகள், பரிந்துரைகளை சொல்லியிருக்கிறோம்.
தேர்தல் அறிக்கையை சுற்றி தான் எங்களது பரப்புரை இருக்கும். தேர்தல் அறிக்கையின் பல கருத்துக்களில் பாஜக உடன்படாது என்று எனக்கு தெரியும். குறிப்பாக கூட்டாட்சி அரசு அமைப்பு என்ற அத்தியாயத்தில் 12 வாக்குறுதிகள் இருக்கின்றன.
உண்மையிலேயே பாஜகவுக்கு கூட்டாட்சி அரசு அமைப்பதில் நம்பிக்கை இருந்தால், 12 வாக்குறுதிகளில் எதில் உடன்படுகிறீர்கள்? நான் அறுதியிட்டு சொல்கிறேன், அவர்கள் 12 வாக்குறுதியிலும் உடன்பட மாட்டார்கள். இதற்கு காரணம் அவர்கள் கூட்டாட்சி அரசு முறையை எதிர்ப்பவர்கள்.
பழைய காலத்தில் சக்கரவர்த்தி என்ற ஒருத்தர் இருப்பார். அவருக்கு கீழே சிற்றரசர்கள், பாளையக்காரர்கள் இருப்பார்கள். அதைப்போல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் பாளையக்காரர்களாக மாற்றுவது தான் அவர்கள் நம்புகிற அரசியல். அதுதான் ஆர்எஸ்எஸ் அவர்களுக்கு கற்றுத்தந்த பாடம். ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பேச்சு, எழுத்தில் ஒரு அரசு தான் இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் இருக்கும்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஜமீன்தார், மிராசுதார் வரிவசூலிப்பதற்காக நியமித்திருப்பார்கள். அதேபோல மாநிலங்களிடம் பாஜக அரசு வரிவசூலிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நீட் தேர்வு குறித்து பேசும்போது,
“ஒரு மாநில அரசு தன்னுடைய மாநிலத்தில் வாழும் மாணவர்களுக்காக அரசு செலவில் அரசு மருத்துவக்கல்லூரிகளை கட்டியுள்ளது. அதில் எந்த மாணவரை படிக்க அனுமதிப்பது என்பது மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதில்லையா?
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை எதிரில் டாக்டர்.ரங்காச்சாரி சிலை, டாக்டர் குருசாமி முதலியார் சிலை இருக்கிறது. அவர்களெல்லாம் நீட் தேர்வு எழுதியா மருத்துவர் ஆனார்கள்?
அண்மையில் காலமான புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத், அப்பல்லோ மருத்துவர் டாக்டர் ரெட்டி நீட் தேர்வு எழுதியா மருத்துவரானார்கள்? அதனால் நீட் தேர்வு என்பது தேவையல்ல. அந்தந்த மாநிலம் நீட் தேர்வை ஏற்றுக்கொள்கிறோம் என்றால் நீட் தேர்வை நடத்தட்டும். தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் நீட் தேர்வை வேண்டாம் என்கிறோம். தமிழ்நாடு அரசு மருத்துவனை மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று முடிவெடுத்தால் நீட் தேர்வு கொண்டுவரப்படாது” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
களமிறங்கும் மாஸ் ஹீரோக்கள்… இந்தியன் 2, தங்கலான், ராயன் படங்களின் ரிலீஸ் தேதி இதுதான்!
“புகழேந்தியின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பு”: ஸ்டாலின் இரங்கல்!