“புகழேந்தியின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பு”: ஸ்டாலின் இரங்கல்!

அரசியல்

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், விக்கிரவாண்டி எம்எல்ஏ-வுமான புகழேந்தி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்ட மேடையின் அருகே நேற்று (ஏப்ரல் 5) மயக்கடைந்தார். உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி இன்று (ஏப்ரல் 6) காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்தநிலையில், புகழேந்தியின் மறைவுக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“விழுப்புரம் தெற்கு மாவட்ட  செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது.

கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் திமுகவின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார்.

நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

1973-இல் திமுகவின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி, அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, திமுகவின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார்.

1996-இல் ஒன்றியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த புகழேந்தி சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர்.

எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன் தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடிக்கு உற்ற துணையாக விளங்கி  மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, திமுகவிற்கும் பேரிழப்பாகும்.

ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் திமுகவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

Thalaivar 171: மாநகரம், கைதி கனெக்ட்… பாலிவுட்டின் பெரிய ஹீரோவை களமிறக்கும் லோகேஷ்

“தமிழகத்தின் வளர்ச்சிக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு”: ஸ்மிருதி இரானி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2