கணக்கு வழக்கு: கலவர பூமியாகும் தெலுங்கு திரையுலகம்!

சினிமா

தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளர்- விநியோகஸ்தர்களுக்கு இடையில் பெரும்பாலும் பட வெளியீட்டுக்கு பின் பிரச்சினைகள் ஏற்படுவது இல்லை. அப்படியே வந்தாலும் வெளியுலகுக்கு தெரியாமல் பேசி முடிக்கப்படும் .

முதன் முறையாக தற்போது தயாரிப்பாளர்- விநியோகஸ்தர்களுக்கு இடையில் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. இது தெலுங்கு சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் தெலுங்கு, இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் 130 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஆகஸ்ட் 25 அன்று வெளிவந்த ‘லைகர்’. பான் இந்தியா படமாக அறிவிக்கப்பட்டு வெளியான இந்தப் படம் வசூல் அடிப்படையில் தோல்வியை தழுவியது. சுமார் 65 கோடி மட்டுமே பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்ததால் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

அதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், இயக்குனருமான பூரி ஜெகன்நாத்திடம் நஷ்ட ஈடு கேட்டனர் படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்கள்.

இது தொடர்பாக இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘லைகர் படம் குறித்து விநியோகஸ்தர்கள் குழுவில் பரவும் செய்தி’ என கூறி வாட்ஸ்அப் ஸ்கீரீன் ஷாட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் ”மொத்தம் 83 விநியோகஸ்தர்கள் லைகர் படத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் 27 ஆம் தேதி பூரி ஜெகன்நாத் வீட்டிற்கு முன் தர்ணா செய்ய உள்ளோம். ஒவ்வொரு விநியோகஸ்தரும் 4 நாட்களுக்கு தேவையான உடைகளுடன் வரவேண்டும். அப்படி வராதவர்கள் தனிமைபடுத்தப்படுவார்கள்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் குறித்து அறிந்து கொண்ட படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பூரி ஜெகன்நாத் பேசும் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “நான் பணத்தை நிச்சயம் திருப்பி தருவேன். ஆனால், எனது மரியாதையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் தன்னிடமிருந்து ஒரு பைசா கூட வாங்க முடியாது” என விநியோகஸ்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அந்த ஆடியோவில், “என்னை பிளாக்மெயில் செய்கிறாயா? பணத்தை நான் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதால் தர ஒப்புக்கொண்டேன். ஒரு கூட்டத்தை கூட்டி தொகையை முடிவு செய்திருந்தோம். ஒரு மாதத்துக்குள் பணம் செலுத்திவிடுவேன் என்று தெரிவித்திருந்தேன். நிபந்தனைகளை ஒப்புக்கொண்டாலும், இப்போது மிகைப்படுத்துகிறார்கள். இது பணத்தை திருப்பி தர வேண்டுமா என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கியுள்ளது.

பணத்தை நிச்சயம் மரியாதை நிமித்தமாக திருப்பி தருகிறேன். ஆனால், அந்த மரியாதையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் ஒரு பைசா கூட தரமாட்டேன். நாம் அனைவரும் ஒருவகையில் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சில படங்கள் வெற்றி பெறும், சில படங்கள் தோல்வியைத் தழுவும். மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் ஈடுபடுங்கள். அவர்களின் பெயர்களை மட்டும் குறிப்பெடுத்துக்கொண்டு, போராடாத மற்றவர்களுக்கு நான் பணத்தை தந்துவிடுகிறேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் , தன்னை சட்ட விரோதமாக துன்புறுத்தி பணத்தைப் பெற, பிளாக் மெயில் செய்வதாக படத்தின் வினியோகஸ்தர்களான வாரங்கல் சீனு, மற்றும் பைனான்சியர் சோபன் ஆகியோர் மீது ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பூரி ஜெகன் நாத்.

மேலும், “அவர்கள் இது தொடர்பாக சட்டப்படி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரட்டும், அதை விடுத்து என்னை மிரட்டக் கூடாது. நான் தற்போது மும்பையில் இருப்பதால் ஐதராபாத்தில் இருக்கும் எனது வீட்டில் உள்ள வயதான எனது மாமியார், மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றும் அந்தப் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இராமானுஜம்

லோகேஷுடன் தீபாவளி கொண்டாடிய கமல்

T20 WorldCup 2022: சூர்ய குமார் யாதவுக்காக விட்டுகொடுத்த விராட் கோலி

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *