விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதே அளவிற்கு ரசிகர்களை கொண்டுள்ள நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
நான்கு சீசன்களாக வெற்றிகரமாக ஓடிய இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் துவங்கியது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமே ஆரம்பிக்கும் இந்த நிகழ்ச்சி இந்த வருடம் சற்று தாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த ‘மீடியா மேசன்ஸ்’ என்ற நிறுவனம் இதிலிருந்து விலகியது தான் காரணம். மேலும் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட்டும் நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார்.
‘பாக்ஸ் ஆபீஸ்’ என்ற புதிய நிறுவனம் இந்த நிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்தி வருகிறது. அதே போல் பல புதிய மாற்றங்களையும் நிகழ்ச்சியில் செய்துள்ளனர்.
முக்கியமாக பழைய சீசன்களில் இருந்து புகழ், குரேஷி, சுனிதா மட்டுமில்லாமல் விஜய் டிவி பிரபலங்களான ராமர், நாஞ்சில் விஜயன், வினோத், மற்றும் செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதா, தெய்வமகள் சீரியலில் நடித்த நடிகை ஷபி ஷப்னம் போன்றவர்களும் கோமாளிகளாக களம் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஆரம்பித்து சில வாரங்களிலேயே நாஞ்சில் விஜயன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இது பற்றி அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் “நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன். விஜய் டிவியுடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பாக்ஸ் ஆபீஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் இனி நான் பங்கேற்க மாட்டேன். ஆதரவளித்த மக்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
இதுவரை எந்த சீசனிலும் இப்படி நடந்தது இல்லை. இந்த செய்தி குக் வித் கோமாளி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியங்கா