மறைந்த காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கிற்கும் தனக்கும் எந்தவித பணப்பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் இன்று (மே 4) விளக்கமளித்துள்ளார்.
நெல்லை காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த சில நாட்களாக காணாமல் போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதற்கு காரணமாக நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்டோரது பெயர்களை குறிப்பிட்டு நெல்லை மாவட்ட எஸ்.பி-க்கு மரண வாக்குமூலம் என்ற தலைப்பிட்டு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக இன்று காலை மின்னம்பலத்தில், காணமல் போன காங்கிரஸ் தலைவர்… எஸ்.பி-க்கு அனுப்பிய மரண சாசனம்! நெல்லையில் என்ன நடக்கிறது? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.
இந்தநிலையில், ஜெயக்குமார் தனசிங் மரண விவகாரத்தில் ரூபி மனோகரன், தங்கபாலு உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரூபி மனோகரன், “2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்தவர் ஜெயக்குமார் தனசிங். எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் கூட நாங்கள் இருவரும் ஒன்றாக பிரச்சாரம் செய்தோம். அவருடைய இறப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு. எங்கள் கட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு.
ஜெயக்குமார் தனசிங் எழுதிய கடிதத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக நான் கருதவில்லை. என் மீது வேண்டுமென்றே பழிசுமத்த வேண்டும் என்று யாரோ பின்புலமாக இருந்து வேலை செய்வதாக எனக்கு தோன்றுகிறது. உண்மை என்ன என்பதை காவல்துறை நிச்சயமாக கண்டுபிடித்துவிடுவார்கள்.
காவல்துறை விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்கிடையில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. நாங்கள் அண்ணன் தம்பி போல பழகினோம்.
என்னுடைய நண்பர் போன் செய்து ஜெயக்குமாரிடம் நீங்கள் ரூ.70 லட்சம் வாங்கியதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வருகிறது என்று சொன்னார். அது உண்மைக்கு புறம்பானது.
அவருக்கும் எனக்கும் எந்தவிதமான பணப்பரிமாற்றமும் நடைபெறவில்லை. கடிதத்தில் உள்ளது ஜெயக்குமாரின் கையெழுத்தா இல்லையா என்பதை காவல்துறை தான் கண்டுபிடிக்க வேண்டும். என்னால் அதை உறுதியாக சொல்ல முடியாது.
நாங்குநேரி தொகுதியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். கட்சிக்காக பாடுபட்டு வருகிறேன். இதை பிடிக்காத சிலர் அரசியல் காரணங்களுக்காக என் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள். அவருடைய இறுதிச் சடங்கில் நான் நிச்சயமாக கலந்து கொள்வேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’கூலி’க்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் : ரஜினி நச் பதில்!