கூலி திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக அவர் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், அதுகுறித்து ரஜினிகாந்த் இன்று (மே 4) பதில் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்திற்கான தலைப்பை அறிவிக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டீசர் ஒன்றை இயக்கி இருந்தார். இந்த டீசருக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்த டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த டீசரில் இளையராஜாவின் இசையில் வெளியான ‘டிஸ்கோ டிஸ்கோ’ என்ற பாடலின் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து, இளையராஜா, கூலி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் நிறுவனத்திற்கு தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில், “கூலி திரைப்படத்தின் டீசரில் இளையராஜாவின் ‘தங்க மகன்’ படத்தில் இடம்பெறும் ‘வா வா பக்கம் வா’ என்ற பாடலில் இடம்பெறும் குறிப்பிட்ட வரிகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்காக முறையான அனுமதியை சம்பந்தப்பட்ட யாரும் பெறவில்லை. இளையராஜாவின் அனைத்து பாடல் மற்றும் இசைகளுக்கான முதல் உரிமையாளர் அவர்தான். ஆனால், உரிய அனுமதி பெறாமல் இளையராஜாவின் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது சட்டப்படி குற்றமாகும்” என நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், இன்று (மே 4) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம், இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு நடிகர் ரஜினிகாந்த், “கூலி திரைப்படத்தின் பாடல் விவகாரம் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் நிறுவனத்திற்கும், இசையமைப்பாளருக்குமான பிரச்சனை” என பதிலளித்து அங்கிருந்து கிளம்பினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”அவரு இசைஞானி தான்… ஆனா பாடல் எங்களுக்கு தான் சொந்தம்” : கே.ராஜன் பளீச்!