காணாமல் போன காங்கிரஸ் தலைவர்… எஸ்.பி.க்கு அனுப்பிய மரண வாக்குமூலம்! நெல்லையில் என்ன நடக்கிறது?

அரசியல்

காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு  மாவட்ட  தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என்றும் அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருப்பதாகவும் தகவல்கள் வந்த நிலையில்… அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதற்கு இவர்கள் தான் காரணம் என்று பட்டியலிட்டு திருநெல்வேலி மாவட்ட எஸ்பி.க்கு கடிதம் எழுதி வைத்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்திருக்கிறது.

நெல்லை நாடாளுமன்ற தொகுதி கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் ராபர்ட் ப்ரூஸ் வேட்பாளராக களமிறங்கிய நிலையில், அவருக்காக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமார் தனசிங்.

தேர்தல் பணிகளின் போது எல்லா கட்சிகளிலும் நடப்பது போல பண பிரச்சினைகளும் வந்து சென்றிருக்கின்றன.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஜெயக்குமார் தனசிங் தனது கட்சி லெட்டர் ஹெட்டில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.க்கு மரண வாக்கு மூலம் என்ற தலைப்பிட்டு ஒரு கடிதத்தை எழுதி அனுப்பி உள்ளார்.

அதில்,   “சமீப நாட்களாக எனது வீட்டு வளாகத்தில் இரவு நேரங்களில் சந்தேகத்திற்குரிய ஆள் நடமாட்டம் இருந்து வருகிறது. நான் எழுந்து சென்ற சத்தம் போட்ட போது அவர்கள் ஓடி விட்டார்கள். அவர்கள் பொருட்களை திருட வந்தவர்கள் போல தெரியவில்லை.

என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம்”  என்று சொல்லி பல பெயர்களை பட்டியலிட்டு இருக்கிறார் ஜெயக்குமார் தனசிங்.

சொத்து பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களில் தன்னுடன் மோதிவருகிற சிலர் பெயர்களை பட்டியலிட்டு இருக்கிற ஜெயக்குமார் தனசிங்..

அரசியல் ரீதியாகவும் சில பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

அதில் நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு மேற்பார்வையாளராக செயல்பட்ட முன்னாள் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு ஆகியோரது பெயரையும் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

4 ஆவதாக ரூபி மனோகரன் பெயரைக் குறிப்பிட்டிருக்கும் ஜெயக்குமார் தனசிங்,   “காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் கடந்த 3 வருடங்களாக என்னிடம்  நிறைய காரியங்கள் செய்து தருகிறேன் என்று சொல்லி என்னிடம் 70 லட்சம் பணம் வாங்கியிருக்கிறார்.  சொன்னபடி எதையும் செய்து தரவில்லை. தற்போது எம்பி தேர்தல் வேலையிலும் செலவு செய்யச் சொன்னார். அதை திரும்பக் கேட்டதற்கு செல்லபாண்டியன் மூலமாகவும், நேரிலும் என்னை  கொலை செய்வேன் என்று மிரட்டினார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு என்னை தேர்தலில் செலவு செய்யச் சொன்னார். அதன்படி 11 லட்சம் ரூபாயை ரூபி மனோகரனிடம் பெற்றுக் கொள்ளச் சொன்னார். ஆனால் ரூபி மனோகரனிடம் கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார்” என்றெல்லாம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஜெயக்குமார் தனசிங்.

இது நெல்லை வட்டார காங்கிரஸ் கட்சியிலும் இந்தியா கூட்டணியிலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஜெயக்குமார் தனசிங் குடும்பத்தினரிடம் இது பற்றி விசாரித்த போது, “அவர் மூன்று நாட்களாக எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கிறது.

அவர் தீவிரமான கிறிஸ்தவ நம்பிக்கையுடையவர். அவ்வப்போது இதுபோல ஐந்து நாட்கள் ஒரு வாரம் கேரளா சென்று ஜெபத்தில் ஈடுபட்டு வருவார். அப்படித்தான் இப்போதும் சென்று இருப்பார் என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் வேறு மாதிரியான தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன” என்று பதற்றமாக தெரிவிக்கிறார்கள்.

போலீஸ் அவரை தீவிரமாக தேடிக் கொண்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு என்ன ஆச்சு என்ற கேள்வி அரசியல் ரீதியாகவும் சட்டம் ஒழுங்கு ரீதியாகவும் பெரிய அளவு அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *