ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் இன்னும் சில லீக் போட்டிகளே மீதமுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள் பிளே-ஆஃப் சுற்றில் தங்கள் இடத்தை இறுதி செய்துவிட்டது.
குறிப்பாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2024 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்து, குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் விளையாட உள்ளது.
மறுபுறத்தில், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டன. டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகளுக்கும் அதே நிலைமையே.
இந்நிலையில், 4வது பிளே-ஆஃப் இடத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.
மறுபுறத்தில், 2வது இடம் பிடித்து குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் கொல்காத்தாவுடன் விளையாடப்போவது யார் என்ற மோதல் ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் இடையே நிகழ்ந்து வந்தது.
அந்த அணிகளின் கடைசி சில போட்டிகளின் முடிவுகள் காரணமாக, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது இடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கு முதலவதாக, சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்த வேண்டும். பின், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தங்கள் கடைசி லீக் போட்டியில் தோல்வியடைய வேண்டும்.
இது மட்டும் நடந்தால், தற்போது இந்த 2 அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் ரன்-ரேட் சிறப்பாக உள்ளதால், சென்னை அணி நேரடியாக 2வது இடத்திற்கு முன்னேறிவிடும்.
ஒருவேளை, சென்னை vs பெங்களூரு அணியின் ஆட்டம் மழையால் ரத்தானால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்றாலும், 2வது இடத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிடும்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தென்காசி: ஆர்ப்பரித்த வெள்ளம்…. பறிபோன உயிர்!
டிஜிட்டல் திண்ணை: மாசெக்கள் மாற்றமா? பெங்களூரு பயணமா? ஸ்டாலின் நடத்திய முக்கிய ஆலோசனை!