கத்திரி வெயிலில் காமெடி சாரல்! Inga Naan Thaan Kingu Review
சந்தானம் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள், தகவல்கள், ட்ரெய்லர் உள்ளிட்ட முன்னோட்டம் என்று எல்லாமே எப்போதும் ரசிகர்களை எளிதில் ஈர்க்கும்.
ஆனால், படம் வெளியானபிறகு அவை சட்டென்று காணாமல் போகும். அவரது அடுத்த படம் குறித்த விஷயங்கள் கவனத்திற்கு வரும். ஏ1, பாரிஸ் ஜெயராஜ், தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டர்ன்ஸ் என்று மிகச்சுவாரஸ்யமான திரையனுபவத்தைத் தரும் படங்கள் மட்டுமே இதிலிருந்து விதிவிலக்காக அமைந்தன.
தற்போது ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், இமான் இசையில், அவர் நடித்த ‘இங்க நான் தான் கிங்கு’ வெளியாகியுள்ளது. மேற்சொன்ன வரிசையில், இந்த படம் எந்த வகையறாவில் சேரும்?
கல்யாணக் கனவு!
பெற்றோர், உறவினர்கள் துணையில்லாமல் வாழும் வெற்றிவேல் (சந்தானம்), அந்தக் குறை தெரியாத அளவுக்குத் தனக்கொரு மனைவி அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். கூடவே, வீடு வாங்கும் நோக்கில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மேலாளர் அமல்ராஜிடம் (விவேக் பிரசன்னா) வாங்கிய 25 லட்ச ரூபாய் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் நோக்கில் வரதட்சணை பெற எண்ணுகிறார்.
அந்த கனவு நனவாக வாய்ப்பில்லை என்று அவரே எண்ணும் அளவுக்குப் பல வரன்களை எதிர்கொள்கிறார். பெண் வீட்டார் எவரும் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்வதாக இல்லை.
இந்த நிலையில், ரத்தினபுரி ஜமீன் விஜயகுமாரின் (தம்பி ராமையா) மகள் தேன்மொழியைப் (பிரியாலயா) பெண் பார்க்கச் செல்கிறார் வெற்றிவேல். பெண் பிடித்துவிட்டதாக அவர் சொல்ல, உடனடியாகத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, கல்யாணமும் நடந்தேறுகிறது.
அதற்கடுத்த சில நிமிடங்களில் அந்த ஜமீன் வீடு காலியாகிறது. வீடு ஜப்தி செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
தான் காண்பது கனவா, நனவா என்று வெற்றிவேல் யோசிப்பதற்குள் ரத்தினபுரி ஜமீன் தான் உடுத்தியிருக்கும் டவுசர், பனியனோடு வெற்றிவேல் எதிரே நிற்கிறார். அப்போதுதான், ஊர் முழுக்க அவர் கடன் வாங்கினார் என்பது புரிகிறது.
அடுத்த நொடியே வெற்றிவேல் – தேன்மொழி தம்பதியர் சென்னைக்குப் பயணிக்கின்றனர். அவர்களுடன் விஜயகுமாரும் அவரது மகன் பாலாவும் (பாலசரவணன்) வெற்றிவேலின் வீட்டுக்குச் செல்கின்றனர்.
திருமணத்திற்கு முன்னரே மனைவியின் குடும்பத்தினருடன் வசிப்பது என்று முடிவு செய்தபடியால், வெற்றிவேல் அமைதி காக்கிறார். ஆனால், அது தவிடுபொடியாகும் வகையில் விஜயகுமாரும் பாலாவும் நாளுமொரு கலாட்டாவை அரங்கேற்றுகின்றனர். அலுவலகப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அமல்ராஜ் தரும் விருந்தில் பங்கேற்பவர்கள், அவரை அவமானப்படுத்துகின்றனர்.
அதையடுத்து, அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார் வெற்றிவேல். அபார்ட்மெண்ட் வாசலுக்கு அவரும் அவர்கள் இருவரும், அமல்ராஜ் அங்கிருப்பதைக் காண்கின்றனர். அவரை அழைத்துச் சென்று மாப்பிள்ளையை சமாதானப்படுத்துவது என்று முடிவு செய்கின்றனர்.
அந்த நபர் அமல்ராஜ் அல்ல; அவரைப் போலவே தோற்றமுள்ள ஒரு பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்த நபர். சென்னையில் சில இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதே அவரது திட்டம்.
வெற்றிவேல் வீட்டுக்கு வந்த அந்த நபர், மின்சாரம் கசியும் ஸ்விட்ச்சை தொட்டு உயிரிழக்கிறார். அதனால் அதிர்ச்சியடையும் வெற்றிவேல் & கோ சடலத்தை ஒரு மார்ச்சுவரிக்குப் பல கஷ்டங்களுக்கு நடுவே கொண்டு செல்கிறது.
அமல்ராஜை நேருக்கு நேராகப் பார்த்தபிறகே, இறந்துபோனது ஒரு தீவிரவாதி என்று தெரிய வருகிறது. அந்த நபரை உயிரோடு அல்லது பிணமாகப் பிடிப்பவர்களுக்கு 50 லட்சம் பரிசு என்று அறிவிக்கிறது அரசு.
அதனை வாங்கும் நோக்கில், அந்த நபரின் சடலத்தை மார்ச்சுவரியில் இருந்து மீட்க முனைகின்றனர் வெற்றிவேலும் அவரைச் சார்ந்தவர்களும். மார்ச்சுவரியில் பிணத்தைக் கொண்டு சேர்த்த பல்ராம் (முனீஸ்காந்த்) கும்பலும் அதனை மீட்க முயற்சிக்கிறது. அதே நேரத்தில், பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அந்த நபரைத் தேடி அலைகின்றனர்.
இக்கும்பல்களின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு நடுவே அந்த சடலம் என்னவானது? அதனை மீட்டு அரசிடம் ஒப்படைக்கும் முயற்சியில் வெற்றிவேல் & கோ வெற்றி பெற்றதா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
வழக்கமான நாயகனாக சந்தானம்!
சந்தானம் இதில் நாயகன் என்றாலும், படம் முழுக்க அவரே வசனம் பேசி நம்மை போரடிக்கவில்லை. தனக்கான தனித்துவத்தை ஓரமாக வைத்துவிட்டு வழக்கமான நாயகர்களைப் போலத் தன்னை அவர் வெளிப்படுத்த முயற்சித்திருப்பதற்குத் திரையில் பலன் கிடைத்திருக்கிறது.
பிரியாலயா இதில் சந்தானத்திற்கு ஜோடி. கவர்ச்சிகரமான உடல்வாகு, முகத்தைப் பெற்றிருந்தாலும், ஏனோ அவரது நடிப்பு நம்மைக் கவரவில்லை.
தம்பி ராமையா, பாலசரவணன் இருவரும் இதில் நாயகன் நாயகிக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கின்றனர். தாங்கள் வரும் காட்சிகளில் எல்லாம் ‘ஸ்கோர்’ செய்திருக்கின்றனர்.
இவர்கள் தவிர்த்து முனீஸ்காந்த், கூல் சுரேஷ், லொள்ளு சபா மாறன், சுவாமிநாதன் மற்றும் சேஷு, மனோபாலா என்று பலர் இதிலுண்டு.
’மகளிர் மட்டும்’ நாகேஷ் போல இதில் விவேக் பிரசன்னா சில காட்சிகளில் தோன்றியிருக்கிறார். அவை நம்மைச் சிரிப்புக் குளத்தில் தள்ளுகின்றன.
‘மாலு மாலு’, ‘குலுக்கு குலுக்கு’ பாடல்கள் மட்டுமல்லாமல் நகைச்சுவையூட்டும் பின்னணி இசையையும் தந்து அசத்தியிருக்கிறார் டி.இமான்.
ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன், டி ஐ பணியைக் கையாண்டிருக்கும் பிரசாத் சோமசேகர் உள்ளிட்டோர் திரையில் வர்ணஜாலம் நிகழக் காரணமாயிருக்கின்றனர்.
படத்தொகுப்பாளர் எம்.தியாகராஜன், கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் இயக்குனரின் கற்பனை திரையில் சரியாக வடிவம் பெற உதவியிருக்கின்றனர்.
கதை திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கும் எழிச்சூர் அரவிந்தன், லாஜிக் பற்றி பெரிதாக யோசிக்கவில்லை. அதேநேரத்தில் ரசிகர்கள் சட்டென்று எந்தக் கேள்வியையும் கேட்டுவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.
அதற்கேற்ப நாயகன் நாயகியைச் சுற்றியிருக்கும் அனைத்து பாத்திரங்களையும் சுவைபட வடிவமைத்திருக்கிறார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு பட்டனை அழுத்தி தனது தேவைகளைத் தெரிவிக்கும் ஒரு பாத்திரம் வில்லன் கூடாரத்தில் உண்டு. அது அவரது பாத்திர வடிவமைப்புக்கான ஒரு உதாரணம்.
பரபரவென்று நகரும் ஒரு திரைக்கதையைச் சரியாகக் காட்சிப்படுத்திவிட வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் நாராயணன். கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி, பிணமாக வரும் விவேக் பிரசன்னாவை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்லும் காட்சிகளில் அவரது திறமை பளிச்சிடுகிறது. அடுத்தடுத்த படங்களில் ஒரு வெற்றிகரமான இயக்குனராகத் திகழ வாழ்த்துகள்!
பாதி வெற்றி!
சுவையான பாத்திர வார்ப்பு, அவற்றுக்கு இடையேயான முரண்களில் செறிவு, நடுநடுவே கதை எனும் வஸ்து என்று ஒரு நகைச்சுவை படத்தைத் தர இறங்கியிருக்கிறது ‘இங்க நான் தான் கிங்கு’ டீம். அவர்களது முனைப்பே பாதி வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
திரைக்கதை பரபரவென்று நகர்வதோடு, ஆங்காங்கே சிரிப்பூட்டி நம்மை மகிழ்விக்கிறது இப்படம். அதே நேரத்தில், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நம்மை சீரியசாக்கும் இடங்களிலும் கூட காமெடி சாரல் பொழிய வகை செய்திருக்கலாம். அது கத்திரி வெயிலுக்கு ஏசி தியேட்டரில் ரசிகர்கள் ஒதுங்க வழி அமைத்திருக்கும்.
சந்தானம் சமீபத்தில் தந்த சில படங்கள் ‘சிரிப்பே வரலை’ என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு இருந்த நிலையில் அதிலிருந்து பெருமளவு ஆசுவாசம் அளித்திருக்கிறது ‘இங்க நான் தான் கிங்கு’. அது போதும் என்பவர்கள் இப்படத்தைக் காணலாம்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெற்றிமாறன் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம்!
ஜெட் வேகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம்!
டாப் 10 செய்திகள் : மோடி ராகுல் பிரச்சாரம் முதல் ஐபிஎல் அப்டேட் வரை!