வைஃபை ஆன் செய்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் ஆலோசனை நடத்திய செய்தி இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“இன்று (மே 17) காலை 11 மணிக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவாலயம் வந்தார். சுமார் முக்கால் மணி நேரம் வெவ்வேறு மாவட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அதில் குமரி முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், பொள்ளாச்சி மகேந்திரன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
அதன் பின் மேலும் ஒரு முக்கால் மணி நேரம் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த ஆலோசனையில் தேசிய தேர்தல் நிலவரம் பற்றி பேசியிருக்கிறார்கள். மாசெக்கள் மாற்றம் பற்றிய ஆலோசனையா என்ற எதிர்பார்ப்பும் திமுகவினர் மத்தியில் எழுந்திருக்கிறது.
திமுகவில் அதிக தொகுதிகளை வைத்திருக்கும் மாசெக்கள், மற்றும் மோஸ்டு சீனியர்கள் ஆகியோருக்கு சுமைகளை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து உதயநிதி கோரிக்கை வைத்து வருகிறார்.
ஏனெனில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும். சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் சீனியர்களை மாசெக்கள் பதவியில் இருந்து அகற்றினால் அது கட்சியில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் வெற்றியோடு வெற்றியாக நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடே கட்சிக்குள் மாற்றங்களை செய்துவிட வேண்டும் என்பதுதான் ஸ்டாலினிடம் உதயநிதியின் கோரிக்கை.
அதிமுக மட்டுமல்லாமல் 2026 சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் கட்சியும் மோதக் கூடும்… இதையெல்லாம் எதிர்கொள்கிற அளவுக்கு வைப்ரன்ட் ஆக செயல்படக்கூடிய இளைஞர்கள், நடுத்தர வயதினரை மாசெக்களாக நியமிக்க வேண்டும் என்பதுதான் உதயநிதியின் செயல் திட்டம்.
இதுபற்றி ஏற்கனவே டிஜிட்டல் திண்ணையில் உதயநிதி கையில் புது மாசெக்கள் பட்டியல்…லண்டன் பயணம் முடிந்ததும் திமுகவில் லக்கலக்கா என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் பிறகு அனைத்து ஊடகங்களும் திமுகவில் மாசெக்கள் மாற்றம் பற்றி பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் பலரும் தங்களது பதவிகளைத் தக்க வைக்க முயற்சி ,மேற்கொண்டு வருகிறார்கள். சீனியர் மாசெவான நெல்லை கிழக்கு ஆவுடையப்பன் தனக்கு எதிரான காய் நகர்த்தல்கள் சூடுபிடிப்பதை அறிந்து நெல்லை பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரிடம் பேசியிருக்கிறார்.
அதேபோல குமரி கிழக்கு மாசெவான தற்போதைய மேயர் மகேஷின் மாசெ பதவி தேர்தலுக்கு பிறகு மாற்றப்படலாம் என்ற பேச்சு குமரி அரசியலில் வலுவாக இருக்கிறது. நாகர்கோவில், குமரி சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றால் உடனடியாக மகேஷின் பதவிக்கு ஆபத்து என்றும் அப்படி இல்லை என்றால் கூட மகேஷ் மீதான நிர்வாகிகளின் புகார்களால் அவர் மாற்றப்படலாம் என்றும் பேச்சு வலுவாகியிருக்கிறது.
அதேபோல மகேஷ் இடத்தில் தற்போதைய மகளிரணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சனை மாசெ ஆக்கலாமா என்ற ஆலோசனையும் நடப்பதாக சொல்கிறார்கள். இப்போது அமைச்சர் கீதாஜீவன் ஒரே ஒரு திமுக பெண் மாசெ ஆக இருக்கிறார். அவரும் கிறிஸ்துவ நாடார். ஹெலன் டேவிட்சனும் கிறிஸ்துவ நாடார். தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரு பெண் மாசெக்கள் இருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே கீதாஜீவன் மீதான புகார்களும் அறிவாலயத்துக்கு சென்றிருக்கிறது.
இந்த நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலினுடைய நீண்ட நாள் தோழரும் சமீபத்தில் மாசெ பதவியில் இருந்து நீக்கப்பட்டவருமான சுரேஷ் ராஜன் இன்று அறிவாலயத்துக்கு வந்து ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். மகேஷை மாற்றும் பட்சத்தில் அந்த மாசெ பதவியை தான் அடைவதற்கு தீவிர முயற்சி எடுத்து வருகிறார் சுரேஷ் ராஜன்.
இப்படி தங்களது மாசெ பதவிகளை தக்க வைக்கவும், மாசெ பதவியை தட்டிப் பறிக்கவும் தொடர் முயற்சிகள் திமுகவில் நடந்துகொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம் அன்பகத்தில் இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்… இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வை தேர்தலுக்குப் பின் மீண்டும் தொடங்கியிருக்கிறார். லண்டன் பயணம் மேற்கொண்டு திரும்பிய பிறகு அவர் இளைஞரணி மாவட்ட நிர்வாகிகளை நேற்று முதல் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார். அந்த சந்திப்பில் இளைஞரணி நிர்வாகிகளின் மினிட்ஸ் புத்தகங்களை பார்வையிடுவதோடு, நடந்து முடிந்த தேர்தல் அனுபவம் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்.
இந்த நிலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலினும் இன்று தலைமைக் கழகத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை அவரது சகோதரி செல்வி தனது பெங்களூரு இல்லத்துக்கு வந்து சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு வற்புறுத்திக் கொண்டிருக்கிறாராம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் பணிகள் அதிகமாகிவிடும் என்பதால் ஒரு முறை பெங்களூரு வருமாறு அழைக்கிறாராம். கலைஞர் இதுபோன்ற ஓய்வு சமயங்களில் பெங்களூரு வருவதை சுட்டிக் காட்டி ஸ்டாலினை அழைத்திருக்கிறார் செல்வி. சமீபத்தில்தான் கொடைக்கானல் சென்று ஓய்வெடுத்துவிட்டு வந்திருக்கும் நிலையில் பெங்களூருவுக்கு சென்று வரலாமா என்றும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறாராம் ஸ்டாலின்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இலவசம்: ஜியோவின் அதிரடி ஆஃபர்… விவரம் இதோ!