இலவச பேருந்தால் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை குறைகிறதா? மோடிக்கு ஸ்டாலின் பதில்!

Published On:

| By Kavi

Metro ridership declining? Stalin's answer to Modi with statistics

இலவச பேருந்து பயணத்தால் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைகிறது என்று பிரதமர் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

எல் &டி தலைவர், ஷங்கர் ராமன், “ஹைதராபாத் மெட்ரோவில் குறைவான பயணிகளின் எண்ணிக்கை காரணமாக நிறுவனத்தை விற்பனை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம். தெலங்கானா அரசின் இலவச பேருந்து பயணத் திட்டம் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கையை குறைக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், “ஒரு நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருகிறீர்கள். பின்னர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கிறீர்கள். இதனால் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறையும் போது, எப்படி அந்த திட்டம் முன்னேறும்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பிரதமரின் பேச்சுக்கு பதிலளித்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று (மே 18) வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்துவரும் விடியல் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்திருக்கிறார். ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயணச் சுதந்திரத்தைத் தந்ததோடு, பெண்களுக்குப் பலவகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது.

பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார்.

பிரதமர் பேசுவதைக் கவனித்தால் “உண்மை கிலோ என்ன விலை?” என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-இல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-இல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை.

Chennai Metro - Wikipedia

சென்னை மெட்ரோ இரண்டாம்கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக்கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார்.

பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.

தென்னிந்திய கட்சிகளை பற்றிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலளித்துள்ள முதல்வர் ஸ்டாலின் “பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 விழுக்காடு என்பதை நீக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களும் – சமூகநீதியின் மேல் ஆழ்ந்த பற்றுக்கொண்ட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றோம்.

இந்தக் குரல் காங்கிரஸ் கட்சியாலும் – இந்தியா கூட்டணிக் கட்சிகளாலும் அகில இந்திய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

உத்தரப் பிரதேச மக்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடிய இது குறித்து, பிரதமர் மோடி என்றைக்காவது வாய் திறந்திருக்கிறாரா? அல்லது ஏதாவது கேரண்டி கொடுத்திருக்கிறாரா? இல்லையே! ஆனால், வெறுப்புப் பரப்புரையை மட்டும் முந்திக்கொண்டு செய்கிறார்.

மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். உத்தரப் பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை – பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார்.

உண்மையில், வெறுப்புப் பரப்புரைகளை மேற்கொள்ளவும் – சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கவும் செயலாற்றும் மணீஷ் கஷ்யப் போன்ற யூடியூபர்களைக் கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று உருவாக்கப்பட்ட போலிச் செய்திகளை ஆதரிப்பதும் – ஊக்குவிப்பதும் பா.ஜ.க.தான்.

பயனற்றுப்போன வெறுப்புப் பரப்புரைகளால் விரக்தியடைந்துள்ள பிரதமர் மோடி, சொல்லிக்கொள்ள பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்து, அவர் எப்போதும் ஏழை மக்களுக்கு எதிரானவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

share market: இன்று சனிக்கிழமையும் இயங்குவது ஏன்? என்ன பங்குகள் வாங்கலாம்?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படம்!

ஜெட் வேகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம்!

வேலைவாய்ப்பு : TANUVAS-ல் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share