திருச்சி மாநாட்டுக்கு அதிமுக கொடி பயன்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
திருச்சியில் நாளை (ஏப்ரல் 24) முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாநாடு நடத்துகிறார். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என ஈபிஎஸ் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 23) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நான் சொல்வதால் ஊடக நண்பர்கள் வருத்தப்படக் கூடாது. அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் தெளிவான தீர்ப்பு கொடுத்துவிட்டது. இதை ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருக்கிறீர்கள்.
அப்படி இருக்கும் போது அவர் (ஓபிஎஸ்) கொடுக்கும் விளம்பரத்தில் அதிமுக கொடி ஒரு பக்கம், இரட்டை இலை ஒரு பக்கம் போட்டு மாநாடு என்று சொல்வது இது எந்த விதத்தில் நியாயம். எப்படிதான் ஏற்றுக்கொள்வது. இதுவே திமுகவாக இருந்தால் போடுவீர்களா.
இன்றுதான் இதுதொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது. தலைமை கழக நிர்வாகிகள் கூடி இதுசம்பந்தமாக முடிவு செய்வோம். எனவே இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடாதீர்கள்.
பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கும் போது எதுசரி எது தவறு என முடிவு செய்து வெளியிட வேண்டும்” என்றார்.
12 மணி நேர வேலை குறித்து பேசிய அவர், “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் இருந்தால் தான் சரியாக பணி செய்ய முடியும். ஆனால் 12 மணி நேரம் எப்படிதான் வேலை செய்ய முடியும்.
இதுவரை நாட்டில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்காத திமுக கூட்டணி கட்சிகள் முதன்முறையாக 12 மணி நேர வேலை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ஸ்விட்ச் போட்டால் ஓடுவதற்கு நாம் இயந்திரமல்ல. கூட்டணி கட்சிகளே எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்றால் இதன் ஆழம் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும்
எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஸ்டாலின் ஒரு பேச்சு பேசுகிறார்.
நான் பேசுவதை சட்டமன்றத்தில் நேரலை செய்வதில்லை. ஊடகமும் போடுவதில்லை. 2 மணி நேரம் காவல்துறை பற்றி புள்ளிவிவரத்தோடு பேசினேன். ஆனால் ஒளிபரப்பு செய்யவில்லை. பத்திரிகையாளர்கள் நடுநிலையோடு செய்தி போட வேண்டும்.
ஊர்ந்து போவார், தாழ்ந்து போவார் என்றெல்லாம் சொன்னார். அதையெல்லாம் செய்தி போட்டீர்கள். இப்போது நாட்டில் நிலவும் பிரச்சினைகளை ஆதாரத்துடன் பேசுகிறோம். அதையும் போடுங்கள்” என்றார்.
பிரியா
‘பிடிஆர் ஆடியோ – நாங்களும் ஆளுநரை சந்திப்போம்’ : எடப்பாடி பழனிசாமி