‘வீட்டுக்கு போய் என்ன பதில் சொல்வேன்”: கதறி அழுத சிறுவனின் அத்தை!

குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது சிறுவன் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில், “வீட்டுக்கு போய் நான் என்ன சொல்லுவேன்” என்று அவரது அத்தை கதறி அழும் காட்சி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், குற்றால அருவியில் சீராக தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. இதனால் மற்ற மாவட்டங்களில் வெயிலால் வாடிய மக்கள் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றனர்.

இந்நிலையில், நேற்று சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்துக்கொண்டிருக்கும் போது திடீரென கட்டாறு வெள்ளம் போல் கொட்டிய நீர் சீறிப் பாய்ந்தது. இதிலிருந்து தப்பிக்கொள்ள சுற்றுலா பயணிகள் ஓடி வந்து பாதுகாப்பாக ஒதுங்கிக் கொண்டனர். இதில் சிலர் அருவி அருகில் உள்ள பள்ளமான ஆற்றுப்பகுதியில் தள்ளப்பட்டனர்.

சிலர் அங்கிருந்த கம்பிகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டு நின்றுகொண்டனர். அவர்களை அங்கிருந்த சுற்றுலா பயணிகளும், கடைக்காரர்களும், ஆட்டோக்காரர்களும் பத்திரமாக மீட்டனர்.

இதில் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த குமாரின் மகன் அஸ்வின் பாய்ந்து வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

பிளஸ் 1 படித்து வந்த அஸ்வின் மேலகரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் தான் மாமா, அத்தை என உறவினர்களுடன் அருவியில் குளிக்கச் சென்றுள்ளார்.

நீர் ஆர்ப்பரித்து கொட்டியபோது, சிறுவனின் மாமா அருண் அஸ்வினின் கையை பிடித்துக்கொண்டு வெளியேற முயன்றதாகவும், ஆனால் தண்ணீர் அதிகம் கொட்டியதால் நிலை தடுமாறி அஸ்வின் கையை விட்டுவிட்டு படிகட்டில் விழுந்துவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

அஸ்வின் நீரில் அடித்துச் செல்லப்பட்டபோது அவர் கூச்சலிட்டிருக்கிறார். எனினும் சிறுவனை பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து இரண்டு மணி நேர தேடலுக்கு பிறகு அஸ்வினின் உடலை மீட்டனர்.

இந்தநிலையில் சிறுவன் அஸ்வினின் அத்தையை பார்த்து போலீசார் இங்கிருந்து போங்கம்மா என்று சொல்ல அதற்கு அவர், “போங்க போங்கன்னு சொல்றீங்களே.. நான் வீட்டுக்கு போய் என்ன பதில் சொல்லுவேன்” என தலை தலையாய் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.

இது அங்கிருந்த சுற்றுலா பயணிகளை கண் கலங்க வைத்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு இதுபோன்று ஏற்பட்ட வெள்ளத்தில் 5 பேர் அடித்துச் செல்லப்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

MI: இதுதான் மும்பைக்காக ரோகித் சர்மா விளையாடும் கடைசி போட்டியா?

இலவச பேருந்தால் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை குறைகிறதா? மோடிக்கு ஸ்டாலின் பதில்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts