நடிகர் சத்யராஜ் பிரதமர் மோடி பயோபிக்கில் நடிக்கிறார் என்ற தகவல் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இதற்கு சத்யராஜ் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்யராஜ் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார். பாகுபலி படத்தில் நடித்த பிறகு பான் இந்தியா அளவில் பிரபலமானார். அவரது கட்டப்பா கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது.
இந்நிலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்துக்கான இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
அதோடு பாலிவுட்டில் தயாராகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
இதற்கிடையே, ‘ஏதேனும் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது பெரியார் கொள்கைகளுக்கு எதிராகக் காட்சிகள் ஏதாவது இருக்கிறதா என கேட்டுவிட்டுதான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வேன்’ என்று பல்வேறு பேட்டிகளில் சத்யராஜ் கூறியிருக்கிறார்.
இப்படி கொள்கை ரீதியாக பெரியாரை பின்பற்றும் சத்யராஜ் எப்படி பிரதமர் மோடி பயோபிக்கில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற கேள்வியும் எழுந்தது.
இதுகுறித்து மின்னம்பலம் சார்பில் சத்யராஜிடம் தொடர்புகொண்டு பேசினோம்.
அவர் கூறுகையில், “எனக்கே இது ஒரு செய்திதான். மோடி பயோபிக்கில் நடிக்க கேட்டு யாரும் என்னிடம் பேசவில்லை. இப்படி யாரோ எதையோ கிளப்பிவிட்டு விடுவார்கள். ஏற்கனவே கனா படத்தில் நடித்த போது, எனக்கு லண்டனில் மெழுகு சிலை வைத்திருப்பதாக எல்லா இடத்திலும் தகவல் பரவியது. அப்படி சிலை வைப்பதாக இருந்திருந்தால் என்னிடம் வந்து அளவு எடுத்திருப்பார்கள்… அப்படி எதுவும் எடுக்கப்படவில்லை. அதனால் சிலை எதுவும் வைக்கவில்லை என்று சொன்னேன். அதையும் யாரும் நம்பவில்லை.
இப்போது மோடி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் பரவுகிறது. நான் பெரியாரிஸ்ட். இப்படத்தில் நான் நடிக்கவில்லை” என்றார்.
“அந்த காலத்தில் செய்தித்தாள்களில், ‘இளம்பெண் கொலை… கள்ளக்காதலா?’ போன்ற தலைப்புகளில் செய்திகள் வரும். இப்போது சோஷியல் மீடியாக்களில் எதையாவது போட வேண்டும் என்று போட்டுக்கொண்டிருக்கிறார்கள்” எனவும் தெரிவித்தார்.
ஏற்கனவே, 2007ல் வெளியான ‘பெரியார்’ படத்தில் சத்யராஜ் நடித்தார். அதில், நடித்திருக்கிறார் என்று சொல்வதைக் காட்டிலும் அவர் பெரியாராகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். தன்னுடைய மேடை பேச்சுகளில் சத்யராஜ் பெரியாரைப் பற்றி பேசாமல் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
MI: இதுதான் மும்பைக்காக ரோகித் சர்மா விளையாடும் கடைசி போட்டியா?
இலவச பேருந்தால் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை குறைகிறதா? மோடிக்கு ஸ்டாலின் பதில்!