மணிப்பூர் விவகாரத்தில் எதிர்கட்சியினருடன் விவாதம் நடத்த அச்சப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபடுவதால் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கி இன்று வரை அலுவல்கள் முடங்கியுள்ளன.
இந்நிலையில் இன்று (ஜூலை 25) நடைபெற்ற கூட்டத்தொடரில் மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
“மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது என்று இரு அவைகளின் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு ஒத்துழைக்க ஆர்வம் இல்லை. எதிர்க்கட்சிகளுக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதோ, பெண்கள் மீதோ அக்கறையில்லை.
அரசாங்கத்துக்கு எந்த பயமும் இல்லை. விவாதிக்க விரும்புவர்களிடம் நாங்கள் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதை அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
ஒத்துழைப்பைக் கேட்டு எழுதுகிறேன் என்று குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில், “நமது நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. மக்களின் குரல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மூலம் மக்களவையில் வெளிப்படும்.
பல்வேறு தரப்பு பிரதிநிதிகளைக் கொண்ட இந்த சபையானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஆக்கப்பூர்வமான விவாதத்தில் ஈடுபட ஒரு சிறந்த தளமாகும்.
பாரதிய ஜனதா ஆட்சியின் இந்த ஆறு ஆண்டுகளில் மணிப்பூர் அமைதி மற்றும் வளர்ச்சியை அடைந்து வருகிறது. சில நீதிமன்ற தீர்ப்புகளாலும், சில சம்பவங்களாலும் மணிப்பூரில் மே மாத தொடக்கத்திலிருந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
சில வெட்கக்கேடான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இந்த நேரத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதங்களைக் கடந்து ஒன்றுபட்டு நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மணிப்பூர் விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்வது மட்டுமின்றி முழு விவாதத்திற்கும் அரசு தயாராக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைக்கும் முயற்சியாக, எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணியின் சில கட்சிகள், மக்களவையில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அமித்ஷா இவ்வாறு கூறியுள்ளார்.
அதுபோன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தொடர்ந்து நாடாளுமன்றம் முடக்கப்படுவதாகவும், சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரியா
வசமாக சிக்கிய அதிகாரி: லஞ்ச பணத்தை விழுங்கும் வீடியோ!
‘இந்தியா’ கூட்டணிக்கு பெயர் வைத்தது யார்?