MI: இதுதான் மும்பைக்காக ரோகித் சர்மா விளையாடும் கடைசி போட்டியா?
Rohit Sharma: 2024 ஐபிஎல் தொடர் முடிவடைய இன்னும் கிட்டத்தட்ட ஒரு வாரமே இருக்கும் நிலையில், இன்னும் ஒரு சில லீக் சுற்று ஆட்டங்கள் மட்டுமே மீதமுள்ளது.
இந்த தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள், தங்கள் கடைசி லீக் போட்டியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த தொடரில், இதற்கு முன் விளையாடிய 13 போட்டிகளில் 4-இல் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் இருக்கும் மும்பை அணி, ஒரு அபார வெற்றியுடன் தனது 2024 ஐபிஎல் பயணத்தை நிறைவு செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்படியான எதிர்பார்ப்புக்கு மத்தியில், முதலில் டாஸ் வென்ற அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இப்போட்டியின் துவக்கத்தில் மும்பை அணியின் அபார பந்துவீச்சால், லக்னோ அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆனால், அடுத்து வந்த நிகோலஸ் பூரன் அதிரடியால், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 214 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
பின், 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்களில் 196 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
ஆனால், இப்போட்டியில் மும்பை அணிக்கு துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா, 38 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடும் கடைசி போட்டி இதுதான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் ஜாபர், தனது எக்ஸ் தள பக்கத்தில், “மும்பை இந்தியன்ஸ் ஜெர்சி உடுத்தி ரோகித் சர்மா விளையாடும் கடைசி போட்டி இதுதான் என தோன்றுகிறது”, என பதிவிட்டுள்ளார்.
முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான், பெங்களூரு அணிகளுக்கு விளையாடிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வாட்சனும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். “மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவுக்கு இதுதான் கடைசி போட்டியாக இருக்கும்”, என அவர் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இதே கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த 2024 ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது. இதனால், அந்த அணியின் நிர்வாகத்தின் மீது ரோகித் சர்மா அதிருப்தியில் இருப்பதாகவும், அடுத்து ஐபிஎல் தொடரில் அந்த அணிக்காக அவர் விளையாட மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது.
எது எப்படியோ, ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதை அதிகாரப்பூர்வமாக அறிய அடுத்து நடைபெறவுள்ள மெகா ஆக்சன் வரை காத்திருக்க வேண்டும்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
share market: இன்று சனிக்கிழமையும் இயங்குவது ஏன்? என்ன பங்குகள் வாங்கலாம்?
வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படம்!
ஜெட் வேகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம்!
வேலைவாய்ப்பு : TANUVAS-ல் பணி!