SRH vs GT: 2024 ஐபிஎல் தொடரில் மே 16 அன்று நடக்கவிருந்த 66வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொள்ள இருந்தன.
இப்போட்டி, ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்க இருந்த நிலையில், போட்டி நாளன்று அங்கு மதியம் முதலே கனமழை பெய்து வந்தது. இதனால், துவக்கத்திலேயே ஆட்டம் தாமதமானது.
இடையில், மழை நின்ற நிலையில், 8 மணிக்கு டாஸ் போடப்பட்டு, எவ்வித ஓவர் குறைப்பும் இன்றி 8:15 மணிக்கு ஆட்டம் துவங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அங்கு மீண்டும் தூறல் துவங்கியது.
பின், மழையின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து பலத்த மழை பெய்ய துவங்கிய நிலையில், குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகள் இடையேயான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இதன்மூலம், 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
முன்னதாக, பிளே-ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் முன்னேறியிருந்த நிலையில், இந்த ஒரு புள்ளியின் மூலம் பிளே-ஆஃப் சுற்றில் தனது இடத்தை ஐதராபாத் உறுதி செய்தது. 3வது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இதன்மூலம், முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 2 அணிகளுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்த நிலையில், தற்போது ஒரு அணி மட்டுமே அடுத்த சுற்றுக்கு நகர முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த 2 அணிகளும் மே 18 அன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதிக்கொள்ள உள்ளன.
பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல, இப்போட்டியில் 2 அணிகளும் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
குறிப்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்தால் 18 ரன்கள் வித்தியாசத்தில், 2வதாக பேட்டிங் செய்தால் 18.1 ஓவர்களுக்கு முன்னதாகவே வெற்றி பெற வேண்டும் என்ற கூடுதல் நிர்பந்தத்தில் உள்ளது.
இந்நிலையில், போட்டி நடைபெறும் நாளன்று, பெங்களூருவில் 80% மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
ஒருவேளை KKR vs GT, SRH vs GT ஆட்டங்கள் போல, இப்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால், 2 அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
அந்த நிலையில், 15 புள்ளிகளுடன் சென்னை பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். 13 புள்ளிகளுடன் பெங்களூரு தொடரில் இருந்து வெளியேறிவிடும்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: அழகுக்கு அழகு சேர்க்கும் தேன்!
குடிநீர் தொட்டிகளுக்குப் பூட்டு: மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!
டாப் 10 செய்திகள் : மோடி – கெஜ்ரிவால் பிரச்சாரம் முதல் எலக்சன் திருவிழா வரை!
ஹெல்த் டிப்ஸ்: நீரிழிவு கட்டுக்குள் வராமல் இருக்கிறதா? இதைச் செய்யுங்கள்!