தங்கள் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை தூசி தட்டி மறுவெளியீடு செய்ய தயாரிப்பாளர்களுக்கு நட்சத்திர நடிகர்களே ஆலோசனை கூறிவரும் காலத்தில், வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் தயாரிப்பாளர்களும், நடிகர்களும்.
1989 ஆம் ஆண்டு ராமராஜன், கனகா, கவுண்டமணி, கோவை சரளா, செந்தில் ஆகியோர் நடிப்பில், இளையராஜா இசையில், கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை தகர்த்தெறிந்தது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் கரகாட்டக்காரன் வெற்றியை கண்டு மிரண்டு போனார்கள் என கூறுவார்கள். அப்படிப்பட்ட கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து, இயக்க கங்கை அமரன் முன் வந்தும் வேண்டாம் என மறுத்திருக்கிறார் ராமராஜன்.
தமிழ்சினிமாவில் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நாயகனாக பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த நடிகர் ராமராஜன் கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.
அவர் இப்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.. எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிப்பில் ‘சாமானியன்’ என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்..
ராமராஜனின் திரையுலக பயணத்தில் அவரது படத்தின் வெற்றிக்கு பிரதான காரணம் படங்களில் இடம்பெற்ற பாடல்கள். அதற்கு காரணமான இசையமைப்பாளர் இளையராஜா,
23 வருடங்களுக்கு பின் ராமராஜன் நடித்துள்ள ‘சாமானியன்’ படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மீண்டும் ராமராஜனுடன் இணைந்துள்ளார்.
ராகேஷ் இயக்கி இருக்கிறார். இந்தமாத இறுதியில் வெளிவர உள்ளது சாமானியன் படம்.
அதனையொட்டி செய்தியாளர்களிடம் ராமராஜன் பேசுகிறபோது,
“நான் எப்போதுமே சினிமாவை விட்டு விலகியதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஏன் நடிக்க வில்லை என்றால், எனக்கு ஏற்ற கதை வரவில்லை. அல்லது கேட்ட கதை எனக்கு பிடிக்கவில்லை.
அதோடு 2010 ம் ஆண்டு நான் பொதுக்கூட்டத்திற்கு சென்று விட்டு வரும்போது மிகப்பெரிய கார் விபத்தை சந்தித்தேன். அதில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினேன். அதிலிருந்து மீண்டு நான் உயிரோடு இருப்பேன் என்றோ, மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்றோ நினைத்து கூட பார்த்தது இல்லை.
இப்படி ஒரு படம் நடிப்பேனா என்பது உலக அதிசயம் போல நடந்திருக்கிறது. இதற்கு காரணம், என்னுடைய ரசிகர்களின், தமிழக மக்களின் பிரார்த்தனைதான். இந்த ரசிகர் மன்றங்களுக்கு நான் எதுவும் செய்ததில்லை. ஆனால், எனக்காக உயிரை தரக்கூடிய அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார்கள்.
இந்த சாமானியன் படத்தில் ஏன் நடித்தேன் என்றால் இயக்குனர் ராகேஷ் சொன்ன கதை தான் காரணம். இது வரை நான் நடிக்காத கதை. இதுவரை திரை உலகம் சந்தித்திராதகதை.
படத்தின் கதை என் காலகட்டத்திற்கு ஏற்ற கதையாகவும், அதே சமயம் இந்த கால கட்டத்துக்கு ஏற்ற கதையாகவும் இருக்கும். குடும்பமும் இருக்கும். குதூகலமுமிருக்கும், நகைச்சுவையும் இருக்கும். நளினமும் இருக்கும். எல்லா அம்சமும் கூடிய கதை இது. இதனால் தான் இப்படத்தை தேர்ந்தெடுத்தேன்.
இந்த படத்தின் திரைக்கதையை உலகில் பிறந்த எவரும் கடக்காமல் போகவே முடியாது. என் திரையுலக புகழுக்கு காரணம் இளையராஜாவின் இசை தான். அவர் இல்லாமல் நான் இல்லை.
இந்த 23 வருடங்களிலும் என்னை ராமராஜன் என்று சொல்கிறார்கள் என்றால், இளையராஜாவின் பாட்டு தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று பல இடங்களில் இளையராஜா, ராமராஜன் பாடல்களை தான் கேட்கிறேன் என்கிறார்கள்.
ஆனால், இப்படத்தின் கதைப் படி படத்தில் எனக்கு ஜோடி இல்லை. அதோடு பாட்டும் இல்லை .அதனால் இசை அமைப்பாளராக யாரை போடுவது என்பதில் ஆரம்பத்தில் சிறு குழப்பம் இருந்தது. பட்ஜெட்டும் இடித்தது.
ஆனால், ராமராஜன் என்றால் இளையராஜா இருந்தால் தான் நன்றாக இருக்கும் என பலரும் சொல்லவே, ராஜாவிடம் சென்றோம் அவர் கதையை கேட்டதுமே, ‘‘ஏம்பா… ராமராஜனும் நானும் சேர்ந்தால் பாட்டுதானேப்பா… ஆனால் பாட்டு இல்லாம எங்கிட்ட வந்து இருக்கீங்களே..‘‘ என கேட்டார்..
கதை அப்படிண்ணே என்றோம். பிறகு எனக்காக ஒரு பாட்டை படத்தில் சேர்த்தார். இளையராஜா இப்படத்துக்கு வந்த பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி விட்டது.
இப்படத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன். இரண்டு கதை எனக்கு பிடித்து இருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த அறிவிப்பு வெளிவரும்.
இப்படத்தில் தான் எனக்கு ஜோடி இல்லையே தவிர இனி வரும் படங்களில் என் படங்களில் கண்டிப்பாக ஜோடி இருக்கும். டூயட் கூட பாடலாம் என இருக்கிறேன். கதை நல்லா இருந்தால் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள்.
‘கரகாட்டக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளி வருமா என கேட்கிறார்கள். என்னிடம் கூட இயக்குனர் கங்கை அமரன் வந்து ‘கரகாட்டக்காரன்’ இரண்டாம் பாகம் எடுக்கலமா? என கேட்டார்.
நான் மறுத்து விட்டேன். கரகாட்டக்காரனிலேயே எல்லா ஆட்டைத்தையும் ஆடியாச்சு. பாட்டையும் பாடியாச்சு. இனி என்ன ஆட்டம் ஆடுறது. அதனால் வேண்டாம் என சொல்லி விட்டேன். கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம் இல்லை” என்றார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எம்.ஜி.ஆர் பாடும், ‘மலரே மௌனமா…’ வைரமுத்து பகிர்ந்த சுவாரஸ்ய வீடியோ
ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை!
அரண்மனை – 4 பிளாக்பஸ்டரா? வசூல் செய்தது எவ்வளவு?
“ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுங்கள்”: முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்!