பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஜனவரி 31-ஆம் தேதி ராஜேஷ்தாஸ் தரப்பு வாதாட தவறினால், பிப்ரவரி 3-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜனவரி 29) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என்றும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.20,500 அபராதம் என்றும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் என்றும் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே, இந்த வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராஜேஷ்தாஸ் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க எந்த தடையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா ஜனவரி 24-ஆம் தேதி தீர்ப்பளிக்க இருந்தார். ஆனால், அன்றைய தினம் ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகவில்லை.
இதனால் கோபமடைந்த நீதிபதி பூர்ணிமா, இந்த வழக்கில் வருகிற 29ஆம் தேதி ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி, அவர் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் இன்று நேரில் ஆஜரானார். அப்போது, மேல்முறையீட்டு வழக்கில் வாதங்களை முன்வைக்க ராஜேஷ்தாஸ் தரப்பில், அவகாசம் கோரப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பூர்ணிமா, “ராஜேஷ்தாஸ் தரப்பு வாதத்தை முன்வைக்க ஜனவரி 31-ஆம் தேதி கடைசி வாய்ப்பு. அன்றைய தினம் வாதிடவில்லை என்றால் பிப்ரவரி 3-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்”, என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 31-க்கு ஒத்திவைத்தார்.
இந்தநிலையில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மேலும், இந்த வழக்கை பிப்ரவரி 23-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக முடித்து தீர்ப்பு வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ஐஸ்வர்யா அப்படி சொல்லல” : ரஜினிகாந்த் விளக்கம்!
பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!