சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Published On:

| By indhu

Savukku Shankar admitted to Coimbatore Government Hospital!

பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் இன்று (மே 9) கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் குறித்தும் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல்துறை துணை ஆய்வாளர் சுகன்யா புகாரளித்து இருந்தார்.

இதனடிப்படையில் கோவை காவல்துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து, தேனியில் உள்ள தனியார் விடுதியில் மே 4ஆம் தேதி தங்கிருந்த அவரை அதிகாலையில் கைது செய்தனர். தொடர்ந்து அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், தேனி தனியார் விடுதியில் சவுக்கு சங்கருடன் தங்கி இருந்த டிரைவர் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கஞ்சா பதுக்கியதாக தேனி மாவட்டம் பழனிசெட்டியப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களையும் கைது செய்தனர்.

கோவை சிறையில் இருந்த சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அனுமதி பெறப்பட்டது. இதனையடுத்து மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

நீதிபதி செங்கமலச்செல்வன் இந்த வழக்கை விசாரித்தார். நீதிபதியிடம் பேசிய சவுக்கு சங்கர், “இது ஒரு பொய் வழக்கு. கோவை சிறையில் காவல்துறையினர் என்னை கடுமையாக தாக்கினர். இதனால் எனக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் கோவை சிறையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் என்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

இதற்கு நீதிபதி, சவுக்கு சங்கர் இந்த கோரிக்கை தொடர்பாக மனு அளிக்கும் பட்சத்தில் இதுதொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், மே 22ஆம் தேதி வரை சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் இருக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, சிறையில் அவர் தாக்கப்பட்டதாகவும், கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் புகாரளித்தார்.

இதனடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு மருத்துவக்குழுவினர் கோவை மத்திய சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த அறிக்கை நீதிமன்றத்தில் தனித்தனியாக சமர்பிக்கப்பட்டது.

அறிக்கையின் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (மே 9) சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக சவுக்கு சங்கரை கைது செய்ததற்கான ஆவணங்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் அளித்தனர். இதன்படி, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்: தம்பதி படுகாயம்!

மாஸ் லீவ் எடுத்த ஊழியர்கள்… மாஸ் டிஸ்மிஸ் செய்த ஏர் இந்தியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel